ஜங்க் ஃபுட் என்ற உணவு வகைகள் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றவையாக இருக்கின்றன. இதனைப் பற்றி கூறும் ஊட்டச்சத்து நிபுணர்கள் ஜங்க் ஃபுட் என்பது வேறு எந்த சத்துகளையும் அளிக்காமல், சர்க்கரை, கொழுப்பு முதலானவற்றில் இருந்து மட்டுமே கலோரிகளைத் தருவது. எளிதில் கிடைப்பதாலும், உண்பதற்கு சுவையாக இருப்பதாலும் உலகம் முழுவதும் பல்வேறு பிராண்ட்கள், ஜங்க் ஃபுட் கலாச்சாரத்தை ஊக்குவித்து வருகின்றன. 


சத்தான உணவுகளைத் தவிர்த்துவிட்டு அந்த இடத்தில் ஜங்க் ஃபுட்கள் இடம்பெற்றுள்ள சூழலில், பல்வேறு ஆய்வுகள் ஜங்க் ஃபுட் உண்பதால் ஏற்படும் நீரிழிவு நோய், அதிக ரத்த அழுத்தம், இதயப் பிரச்னைகள், புற்றுநோய் முதலானவை குறித்து ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டுகின்றன. 



பல்வேறு வகையிலான நோய்களை ஜங்க் ஃபுட்கள் உருவாக்குவதற்குப் பின்னணியில் அவற்றில் இருக்கும் பொதுவான காரணிகள் இருக்கின்றன. என்ன காரணங்கள்? இந்தக் காரணங்களால் ஏற்படும் விளைவுகள் என்ன?


1. அதீத சர்க்கரை அளவு: 


1960களில் உணவு உற்பத்தியாளர்கள் உணவுத் தயாரிப்பின் போது கலோரிகளை நீக்கிவிட்டு, அதன் சுவையைக் கூட்ட சர்க்கரையைப் பயன்படுத்த தொடங்கினர். எழுபதுகளில் புதிதாக பிஸ்கர்கள், கூக்கிகள், குளிர்பானங்கள், கேண்டி என்றழைக்கப்படும் மிட்டாய்கள் முதலானவை அதிகளவில் மக்களால் விரும்பி உண்ணப்பட்டன. மக்கள் உடல் ஆரோக்கியம் குறித்து பேசத் தொடங்கிய பிறகு, சர்க்கரைக்குப் பதிலாக சுக்ரோஸ், செயற்கை இனிப்பு, மால்ட் முதலானவை சேர்க்கப்பட்டன. எனினும் இவைகளிலும் சர்க்கரையின் அளவு கூடுதலாகவே இருந்தது. அதிக சர்க்கரையை உண்பது நம்மை மகிழ்விப்பதோடு, தொடர்ந்து நம்மை அதனைச் சார்ந்து இருக்கும் தன்மையை ஏற்படுத்துகிறது. இந்த நடைமுறை குழந்தைகளிடம் அதிகமாக நிகழ்வதால், சிறுவயதிலேயே ஜங்க் ஃபுட் உண்பது குழந்தைகளிடம் மனமாற்றத்தை ஏற்படுத்தி, ஜங்க் ஃபுட்டில் இருந்து தவிர்ப்பதை இயலாததாக மாற்றிவிடுகிறது. இதன் விளைவாக உடல் பருமன் ஏற்படுகிறது. நீரிழிவு நோய்க்கான மிக முக்கிய காரணியாக இருப்பது உடல் பருமனடைதல்.



2. இன்சுலின் எதிர்ப்பு


உடல் பருமன், உடலில் கொழுப்பு சேர்வது முதலானவை இன்சுலின் எதிர்ப்புத் தன்மையை உருவாக்குபவை. கல்லீரலில் உருவாகும் இன்சுலில் உடலில் உள்ள சர்க்கரை அளவை ஆற்றலாக மாற்றும் பணியை மேற்கொள்கிறது. உடலில் இன்சுலின் சரிவரப் பயன்படாமல் போனால், கல்லீரல் இன்சுலினின் தேவை அதிகமாக இருப்பதாக எண்ணி மேலும் இன்சுலினை உருவாக்கி, நீரிழிவு நோய் ஏற்படுகிறது. ஜங்க் ஃபுட்களில் இருக்கும் அதிகளவிலான சர்க்கரை அளவு காரணமாக அதிகளவில் இன்சுலின் உற்பத்தியாவதும், தொடர்ச்சியாக நீரிழிவு நோய் ஏற்படுவதும் நிகழ்கிறது. 


3. கொழுப்புகள்:


ஜங்க் ஃபுட்களில் அதிகளவிலான கொழுப்புகள் சேர்க்கப்படுகின்றன. இவை ரத்ததில் உள்ள ட்ரைக்ளிசரைட் அளவை அதிகரிக்கிறது. அதிகளவில் ட்ரைக்ளிசரைட் உற்பத்தியாவது நீரிழிவு நோயை அதிகரிக்கிறது. அதிகளவிலான கொழுப்பு காரணமாக இதய நோய்களும் ஏற்படும் சாத்தியங்கள் உள்ளன.