சேரர்கள், சோழர்கள், பல்லவர்கள், பாண்டியர்கள், மைசூர் அரசர்கள், நாயக்கர்கள், முகமதியர்கள், ஆங்கிலேயர்கள் என பல்வேறு ஆட்சிகளின் கீழ், கரூர் தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதியாகத் திகழ்கிறது. கரூர் பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் அகழாய்வுகள் இந்த இடம் பண்டைய காலம் தொட்டே அயல் நாட்டு வணிகத்தலமாக இருந்துள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது. வரலாற்றில் குறிப்பிடப்படும் வாஞ்சி மூதூர் இந்த கரூர் நகரம் தான்.  மையனூர் என்றும் கரூர் வரலாற்று ஆவணங்களில் அழைக்கப்படுகிறது, தமிழகத்தின் மையமான ஊர் தானே. நொய்யல், அமராவதி, காவேரி சூழ் இந்த மையனூர் பகுதியில் தான் காவேரி  அகண்ட காவேரியாக மாறுகிறது, அங்கே அதன் அகலம் 1.5 கிமீ அதனால் தான் இந்த ஊரில் அதிகபட்சமான மணல் அள்ளப்பட்டதா என்று தெரியவில்லை. 


Kola pasi Series-7 | ஈரோடு மட்டன் கொத்துக்கறி முதல் பள்ளிப்பாளையம் சிக்கன் வரை - கொங்குநாட்டு பயணம்..!


கரூர் ஒரு ஜவுளி நகரம் என்றாலும் போக்குவரத்து வாகனங்களுக்கான பாடி பில்டிங், நாம் பயன்படுத்தும் டி.என்.பி.எல் காகிதம், கொசுவலைகள், திரைகள் என ஒரு பெரும் தொழில்நகரம் தான். நாமக்கல் லாரிகள், பிராய்லர் கோழிகள், முட்டைகளுக்கு பிரபலம். இந்தியா முழுவதும் இயங்கும்  ஆழ்துளைக் கிணறு (BoreWell) தோண்டும் வண்டிகளுக்கு திருச்செங்கோடு பெயர் பெற்றது. 1993ஆம் ஆண்டில் நான் கல்லூரி முடித்த காலத்தில் என் வேலை நிமித்தமாக கரூர் சென்ற போது அங்கே கோதுமை உப்புமாவிற்கு கெட்டித் தயிர் கொடுக்கும் வழக்கம் இருப்பதைக் கவனித்தேன், இது மிகவும் புதிய விசயமாக எனக்குப் பட்டது. கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதி என்பதால் இங்கே சிறுதானியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை சில காலத்திலேயே உணர்ந்தேன். 




Kola Pasi Series-6 |மலைக்கோட்டை TO புதுக்கோட்டை வரை - மண் மணக்கும் உணவும் சமூக பொறுப்பும்...!


சோளக் கஞ்சி, சோளக் களி,  சோள ரொட்டி, கேழ்வரகுக் கஞ்சி, கேழ்வரகுக் கூழ், கம்பங் கஞ்சி, கம்பங் கூழ், சாமை சாதம், மக்காச்சோளம் புட்டு என ஆரோக்கிய உணவுகளுக்கு இந்த ஊரில் பஞ்சமில்லை. காளான் பரங்கி, கருவை அவியல், இனிப்புப் பிடி கொழுக்கட்டை, பருப்பு போளி, பயிறு திரட்டல், கதம்ப சாதம் இந்த பகுதியின் சைவச் சிறப்புகள். கரூர் கை குருமா என்கிற இந்த வகை வெள்ளைக் குருமா ஒரு புதிய ருசியுடன் திகழ்கிறது. அதே போல் நான் நிலக்கடலை குழம்பை கரூர் தவிர்த்து வேறு எங்கும் சாப்பிட்டதில்லை. கொங்குப் பகுதியில் கிடைக்கும் அரிசி பருப்பு சாதம் இங்கும் பிரபலம், அதை விட இங்கு நான் சுவைத்த வெந்தய சாதம் தனித்த ருசியுடையது. கரூரில் உள்ள  நளன் உணவகம் சித்த (siddha) உணவுகளை வழங்கி வருகிறது. சோள சூப், அருகம்புல் சூப், கேழ்வரகு தோசை, கம்பு தேசை, தூதுவளை சட்னி, பீர்க்கங்காய் சட்னி, இஞ்சி சட்னி என தொடங்கும் இவர்களது உணவுகள் பாலில் தயாரிக்காத சைவ மோரில் முடிவடைகிறது.  இன்றைய காலகட்டத்தில் அவசியம் சாப்பிட வேண்டிய, பின்பற்ற வேண்டிய முக்கிய உணவுகளாக இது திகழ்கிறது. 


நம் காலத்தில் கரூர் கரம் செட் என்கிற உணவு அங்கே பிரபலமாகி வரும் இடைத்தீனியாக பார்க்கிறேன். சிப்ஸ், முறுக்கு போன்ற கடைகளில் கிடைக்கும் தின்பண்டங்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமான ருசியுடன் மாலை நேரங்களில் கரூரில் பரபரப்பாக விற்பனையாகி வருகிறது கரம் (karam). நிச்சயம் ஒருமுறையாவது அனைவரும் ருசிக்கவேண்டிய தின்பண்டம். பார்ப்பதற்கு வடஇந்தியாவின் `பேல் பூரி' போல இருந்தாலும், இவர்கள் உபயோகப்படுத்தும் சட்னி முற்றிலும் தென்னிந்தியச் சுவைக்கானது. சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரம் கடைகள் கரூரில் உள்ளன. ஏராளமான கடைகளை தெருவில் செல்லும்போதே காண முடியும். கரம் மட்டுமல்ல, அவற்றோடு `செட்' எனப்படும் நொறுக்கல் தின்பண்டத்தையும் சுவைக்க மறந்துவிடாதீர்கள். கரம் செட், போண்டா கரம், சமோசா கரம், கலக்கி கரம் என்று தொடங்கிய இந்த கரம் செட் கரூரில் இருந்து கிளம்பி மதுரை தெப்பக்குளத்திற்கு வந்துவிட்டது.




கரூரில்  ஹோட்டல் அருணாச்சலா, சண்முகா மெஸ், கணபதி மெஸ், கரூர் டிபன் சென்டர், ராமசாமி டிபன் ஸ்டால் எனது தேர்வில் ருசி பார்க்க வேண்டியவை. நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள செல்லப்பா ஹோட்டல் அசைவ உணவுகள் மாலை வேளையில் களைகட்டும். கிடா விருந்தும் மட்டன் பிரியர்கள் சென்று சுவைக்க வேண்டிய ஒரு இடம். நாமக்கலில் உள்ள எம்.கே.பாலு கடையில் சாப்பிட்ட மிருதுவான பரோட்டாவும் கெட்டி க்ரேவிகளின் சுவை இன்றும் நாவில் நிற்கிறது. காடை, புறா, முயல் கிரேவிகள் இந்தக் கடையின் சிறப்பு. பொதுவாக கொங்குப் பகுதி முழுவதுமே காலை டிபனுக்கே பல வகை அசைவ உணவுகள் தயாராகிவிடுவதும் இந்தப் பகுதியின் சிறப்பு.


போளுக்குறிச்சி சந்தைக்கு சென்றால் கொல்லி மலையிலிருந்து வரும் தேன், மிளகு, மல்லி, சீரகம் போன்ற மளிகைப்பொருட்களும் கிடைக்கும்.  தமிழகம் முழுவதும் இருந்து வணிகர்கள் இங்கு குவிவார்கள். 90களில் எங்கள் பகுதியில் பெண்கள் பெரும் குழுவாக மதுரையில் இருந்து போளுக்குறிச்சி சந்தை சென்று ஒரு வருடத்திற்கான மிளகு, சீரகம், வெந்தயம் உள்ளிட்ட பொருட்கள் வாங்கி வந்து பிரித்துக் கொள்வது நினைவுக்கு வருகிறது. 




ராசிபுரம் சென்றால் நீதிமன்றம் எதிரில் ஸ்ரீ லட்சுமி விலாஸ் ஸ்வீட்சில் ஒரு மைசூர் பாக் வாங்கி சாப்பிடாமல் வந்து விட வேண்டாம். தமிழகத்தில் கிடைக்கும் நம்பர் ஒன் மைசூர் பாகு என்றால் அது இந்தக் கடையில் தான் என்பதை உறுதியாகச் சொல்கிறேன். அதுவும் அங்கேயே சுடச்சுட சாப்பிட்டால் அதன் சுவையே தனி. திருச்செங்கோடு ஆட்டையாம்பட்டியில் அங்குள்ள வீடுகளில் எல்லாம் முறுக்கு மற்றும் அதிரசம் சுட்டு விற்கிறார்கள். ஒரு தொழிற்சாலை போல் ஆயிரக்கணக்கில் தயாரிக்கிறார்கள், அந்த நெடுஞ்சாலையில் செல்பவர்கள் அனைவரும் வாகனத்தை நிறுத்தி வாங்கி, அது இன்று பிரலமாகிவிட்டது. இந்தப் பகுதி முழுவதையும் நீங்கள் சுற்றினாலும் நீங்கள் வேலாயுதம்பாளைத்திற்கு வராமல் உங்கள் கரூர் சுற்றுப்பயணம் முடிவடையாது. 




கரூர் - சேலம்  தேசிய நெடுஞ்சாலையில்  வேலாயுதம்பாளையம் பாலத்துறை வாத்து இறைச்சிக்கு என்றே  ஒரு தனித்த இடம். பரமத்தி வேலூரில் தான் வாத்து இறைச்சி அசைவ உணவகங்களில் முதன் முதலில் பரிமாறினார்கள். பின்னர் கதிர்வேல் வாத்துக்கடை தேசிய நெடுஞ்சாலையை எட்டிப்பிடித்தது, அந்தப் பகுதி மக்களும் அந்த வழியாக பயணிப்பவர்களும் வாத்துகள் மேல் காட்டிய அதீத பிரியத்தால், இன்று அங்கே  வாத்து இறைச்சி உணவகங்கள் வரிசை கட்டி முளைத்து விட்டன.  வாத்து முட்டை,  வாத்து முட்டை ஆம்லேட், வாத்து முட்டை கலக்கி, வாத்து கிரேவி, வாத்து வருவல், வாத்து ஃப்ரை என நீளும் இந்த சுவைமிக்க பட்டியல் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் அனைவரையும் சுண்டி இழுக்கும். இட்லி வாத்து கிரேவி தான் காம்பினேசன், சில கடைகளில் தோசை-பரோட்டா எல்லாம் இப்பொழுது கிடைக்கிறது. தென் தமிழகத்தில் இருந்து சேலம்-பெங்களூரு செல்பவர்கள் அவசியம் ஒரு முறை நாடோடித் தென்றல் படத்தை மனதில் ஓட்டியபடி சில பல இட்லிகளையும் வாத்து க்ரேவியையும் சுவைத்து காற்றில் பறக்கலாம். 


Kola pasi Series-8 | கோயம்புத்தூர்: கொள்ளு ரசம் முதல் கமலாத்தாள் பாட்டியின் ஒரு ரூபாய் இட்லி வரை