இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தியா சார்பில் இலங்கைக்கு பல்வேறு உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி தமிழக அரசு சார்பில் 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர், 137 வகையான மருந்து பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அனுப்பப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.அதன்படி முதல் கட்டமாக நேற்று சென்னை துறைமுகத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில் இலங்கைக்கு வழங்கப்படும் நிவாரண பொருட்கள் தூத்துக்குடியிலிருந்து தோழிகள் மூலம் அனுப்பி நலிவடைந்து வரும் பாரம்பரிய தொழிலுக்கு புத்துயிர் அளிக்க வேண்டும் என தோணி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தூத்துக்குடி கோஸ்டல் தோணி உரிமையாளர்கள் பிரின்ஸ்டன் மற்றும் லசிங்டன் ஆகியோர் கூறும்போது, “தோணி தொழில் இருபதாம் நூற்றாண்டில் மிக முக்கிய பங்காற்றி வந்தன. தூத்துக்குடியில் இருந்து இலங்கை லட்சத்தீவு மாலத்தீவு மற்றும் மேற்கு கடற்கரைத் துறைமுகங்கள் அரபு நாடுகளுக்கு உணவுப் பொருட்கள் கட்டுமானப் பொருட்கள் உள்ளிட்ட இதர அத்தியாவசிய பொருட்கள் அனுப்பப்பட்டு வந்தன. குறிப்பாக இலங்கைக்கு அதிகமான தோணி போக்குவரத்து நடைபெற்றது, குறிப்பாக இலங்கைக்கு அன்றாட தேவைகளான அரிசி காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தூத்துக்குடி பழைய துறைமுகத்திலிருந்து தோணிகள் மூலம் தினந்தோறும் அனுப்பப்பட்டு வந்தன.
ஆனால் காலப்போக்கில் சரக்குப் பெட்டகங்களில் வருகையால் தொழில் நலிவடைந்து வருகிறது. தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் தற்போது 25 தோணிகள் இருந்தபோதிலும் போதுமான சரக்குகள் கிடைக்காததால் பெரும்பாலான தோணிகள் இயக்கப்படாமல் உள்ளது. இந்த சூழ்நிலையில் இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் நிவாரண பொருட்களை தூத்துக்குடியிலிருந்து தோணிகள் மூலம் அனுப்பினால் பாரம்பரிய தோணி தொழில் புத்துயிர் பெறும். தூத்துக்குடியிலிருந்து தோணிகள் மூலம் சரக்குகள் அனுப்பப்படும் போது விரைவாகவும் குறைந்த செலவிலும் கொண்டு செல்ல முடியும் எனக் கூறும் இவர்கள் தோணி தொழிலில் தற்போது நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி உள்ளோம்.
தூத்துக்குடியில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு 18 மணி நேரத்தில் சரக்குகளை கொண்டு செல்ல முடியும். ஒரு தோணியில் 250 முதல் 400 டன் வரை சரக்குகளை ஏற்றிச் செல்லலாம் சரக்குப் பெட்டகங்களில் அனுப்புவதை விட கட்டணம் மிகவும் குறைவாக இருக்கும்" என தெரிவிக்கும் இவர்கள், “கடந்த மார்ச் ஏப்ரல் மாதங்களில் தூத்துக்குடியில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு சுமார் 6 ஆயிரத்து 800 டன் எடையுள்ள அரிசி வெங்காயம் சீனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு சேர்த்துள்ளோம்” என்கின்றனர்.
தற்போது பருவநிலை வரையறை காரணமாக இந்திய கடல் வாணிப இயக்குனரகத்தின் உத்தரவின்பேரில் மே 1-ஆம் தேதி முதல் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை தோணிகள் நிறுத்தப்பட்டு உள்ளன. கடந்த 2008ஆம் ஆண்டு அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஏற்பட்ட விபத்தை அடிப்படையாக வைத்து இந்த பருவநிலை அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தற்போதுள்ள பருவநிலை சூழ்நிலையில் தூத்துக்குடி கொழும்பு இடையே என பாரம்பரிய வழித்தடத்தில் தோணி போக்குவரத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனக் கூறும் இவர்கள், சாதகமான சூழ்நிலையே இருப்பதாகவும் தற்போது அத்தியாவசிய அவசரப் பணிக்கு விதி விலக்கு பெறலாம் என தெரிவிக்கும் தோணி உரிமையாளர்கள், தமிழக முதல்வர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் பேசி நிவாரணப் பொருட்களை தோணிகள் மூலம் அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் தோணி தொழில் புத்துயிர் பெறுவதுடன். இத்தொழிலை நம்பியுள்ள 20 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வு வளம் பெறும் என்கின்றனர்.