சிறியவர் முதல் பெரியவர்வரை பெரும்பாலானவர்களுக்கு தயிர் மிகவும் பிடிக்கும். இதில் கால்சியம், வைட்டமின் பி2, வைட்டமின் பி12, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் மீன் அல்லது கீரை சாப்பிடும்போது தயிர் எடுத்துக்கொள்ள கூடாது என்று ஸ்ட்ரிக்ட்டாக பலரது வீடுகளில் சொல்லிவிடுவது வழக்கம். ஆனால் தயிருடன் வறுத்த மீன் காம்போவுக்கு ரசிகர் கூட்டமே உண்டு. பழைய சோற்றில் தயிருடன், கருவாட்டு தொக்கு, முந்தின நாள் வைத்த மீன் குழம்பு, அந்த மீன் குழம்பில் முதல் நாள் கண்டுகொள்ளாததால் எஞ்சிக்கிடக்கும் கடைசி வால் துண்டு என்று அதற்கும் ஒரு தனி ரசிகர் கூட்டம் உண்டு. இது எவ்வளவு தூரம் ருசியோ அதே அளவு இதற்கு வீடுகளில் எதிர்ப்பும் உண்டு. தயிருடன் சாப்பிட்டால் தோல் அலர்ஜி வரும் வாய்புள்ளது என்று கூறுவார்கள். ஆனால் எது உண்மை என்று மருத்துவர் கு. சிவராமன் கூறுகிறார். 



"தயிரும் மீனும் சேர்த்து சாப்பிடுவது கெடுதல் என்று கூறுகிறார்கள். சங்க கால உணவு முறையில் நட்புச்சரக்கு, பகைச்சரக்கு என்று உணவுகளை பிரித்துள்ளனர். எதையும் எதையும் இணைத்து உண்ணலாம், எதை உண்டால் எதை எடுத்துக்கொள்ள கூடாது என்பதை மிகப்பெரிய அட்டவணை உருவாக்கி பிரித்துள்ளனர். தயிரும் மீனும் உண்ணக்கூடாது என்பது இப்போது வரை பலரும் வீட்டில் சொல்லும் வழக்கமாக இருக்கிறது. அது மந்த நிலையை உருவாக்கும் என்பதால் வேண்டாம் என்று கூறுகிறார்கள் என்று யூகிக்கிறோம். ஏனென்றால் தயிர் பொதுவாகவே செரிமானத்தை மந்தப்படுத்தும், ஒரு வித மந்தநிலையை உருவாக்கும் என்பதனால், அதை சத்து மிகவும் அதிகமாக உள்ள மீனுடன் உண்ண வேண்டாம் என்று கூறியிருக்கலாம். 



ஏனென்றால், அவ்வளவு சத்துக்களையும் உடல் எடுத்துக்கொள்வதை தயிர் தடுக்கும் வாய்ப்பு உள்ளது. செரிமானம் சீராக நடந்தால் தான் அந்த சத்துக்களை எடுக்கும் உடல். ஆனால் தயிர் அஜீரணத்தை தந்துவிடுமோ என்ற பயம் தான் காரணம். வேறு ஒன்றும் இல்லை, அதனால் தான் தயிர் சாப்பிடும்போது மீன் சாப்பிட வேண்டாம் என்பார்கள், தயிருடன் கீரை சாப்பிடக்கூடாது என்பார்கள். இரண்டுக்கும் காரணம் அஜீரணம் ஆகி விடும் என்னும் பயம் மட்டுமே, வேறு எதுவும் கிடையாது. கிராமங்களில் தயிரும், கருவாடும் மட்டுமே வைத்து சாப்பிடும் வழக்கங்கள் உள்ளன, அதற்காக அது நச்சாக எல்லாம் மாறி விடாது, அப்படி பயப்பட தேவை இல்லை. பொதுவாகவே தயிருடன் மீனும், கீரையும் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது." என்று தயிர் உடன் சேர்த்து ஏன் மீனும், கீரையும் உண்ணக்கூடாது என்று மருத்துவர் கு. சிவராமன் விளக்கினார்.