பருத்திப்பால் சாப்பிடுகிறாயா, என்று வடிவேலு கேட்க, வயிறு சரியில்லை என்பார் ஒற்றன். 'அப்படியென்றால் ஓமத்திரவம் சாப்பிட வேண்டும்' என்று கூறுவார் வடிவேலு. அப்படி என்ன நன்மைகளை உள்ளடக்கியுள்ளது ஓமத்திரவம்.


உடல் பலம் பெற சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறமாட்டார்கள். இன்னும் சிலர் பார்க்க பலசாலி போல் தோற்றமளிப்பார்கள், ஆனால் மாடிப்படி ஏறி இறங்கினாலோ அல்லது சிறிய பொருளை தூக்கினாலோ உடனே சோர்ந்து போவார்கள். இவர்கள் ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம், பனக்கற்கண்டு சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும் என சித்த மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.


சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு ஆகியவை நீங்க ஓமம் உதவுகிறது. அதனை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட இத்தனை நன்மைகள் கொண்டுள்ளதா என்று நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது. ஓமத்தில் கால்சியம், வைட்டமின்கள், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தையாமின், ரிபோபிளோவின் மற்றும் நியாசின் போன்ற சத்துக்கள் நிரம்பியுள்ளன. இது இந்தியா முழுவதும் பயிரிடப்படுகின்ற ஒரு செடி வகை ஆகும். ஓமம் செடி ஒரு மீட்டர் உயரம் வரை வளர்கிறது. இதன் இலைகள் சிறகு போன்ற பிளவுபட்ட நீண்ட காம்புகளில் தண்டிலிருந்து பக்கவாட்டில் நீளமாக வளர்ந்திருக்கும். இதன் காய்கள் மிகுந்த வாசமுள்ளவை. முற்றிப் பழமாகிய பின் உலர்ந்த காய்களே மருத்துவத்தில் பயன்படுகிறது.



"குழந்தை அழுவுதா வுட்வர்ட்ஸ் கொடுங்க", என்னும் விளம்பரத்தை காணாத 90-ஸ் கிட்ஸ் இருக்க வாய்ப்பில்லை. ஓமம் தண்ணீர், குழந்தைகளுக்கு ஏற்படும் கோலிக் எனும் கடுமையான வயிற்று வலியை குறைக்க உதவுகிறது. அதனாலேயே குழந்தை அழுகையை நிறுத்தாதபோது அம்மாக்கள் ஒமத்தண்ணீர் கொடுப்பார்கள். ஓமம் குழந்தைகளின் வயிற்றுக்கு மட்டுமல்ல, எல்லோர் வயிற்று பிரச்சனைகளுக்கும் அதுதான் அருமருந்து. ஓமத்தை வெல்லத்துடன் சேர்த்து இடித்து சாப்பிட செரிமான கோளாறுகள் நீங்கும்.


மேலும் நன்றாக பசி எடுக்கும். சிறிது ஓமத்தை வாயில் போட்டு நன்றாக மென்று தின்றால் வாயுத்தொல்லை நீங்கும். அப்படி மென்று தின்ற பின்னர் கொஞ்சம், வெந்நீர் குடித்தால் வயிற்று பொருமல் நீங்கும். ஓமம், மற்றும் மிளகு இரண்டையும் தலா 35 கிராம் எடுத்து, இடித்து பொடியாக்கி அதனுடன் 35 கிராம் பனைவெல்லம் சேர்த்து அரைத்து காலை, மாலை என இருவேளையும் 5 கிராம் அளவு எடுத்து 7 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கடுப்பு நீங்கும் என பரிந்துரைக்கிறார்கள் நிபுணர்கள்



ஒரு மெல்லிய துணியில் கொஞ்சம் ஓமத்தை முடித்து நுகர்ந்து வந்தால், சளித்தொல்லை நீங்கும். ஓமத்திலுள்ள தைமால் என்ற வேதிப்பொருள் இருமலை ஏற்படுத்தும் தொற்றுக் கிருமிகளைக் கொல்லும் ஆற்றல் உடையது. இது இருமல் மற்றும் மூக்கடைப்பை விரைவாக குணப்படுத்தும் ஆற்றல் உடையது. ஓமம் ஆரம்ப நிலை ஆஸ்துமாவை குணமாக்கும் திறன் உடையது. அதேநேரம் இடைநிலை ஆஸ்துமாவை கட்டுக்குள் வைக்கவும் ஓமம் உதவுகிறது. ஓமம், சுக்கு, கருப்பட்டி சேர்த்து கஷாயம் செய்து குடித்தால் சாதாரண காய்ச்சல் குணமாகும்.


ஓமத்துடன் சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து நெற்றியில் பற்று இட்டு வந்தால், ஒற்றை தலைவலி குணமாகும். ஒரு சிலருக்கு தொண்டையில் புகைச்சல் ஏற்பட்டு இருமல் தொடர்ந்து வரும். அப்படியானவர்கள் ஓமம், கடுக்காய் தோல், முக்கடுகு, சித்தரத்தை, அக்கிரகாரம், திப்பிலி வேர் போன்றவற்றின் பொடியை சம அளவு எடுத்து அதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை சாப்பிட்டுவந்தால் தொண்டை கட்டு, தொண்டை புகைச்சல் மற்றும் இருமல் நீங்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.