அரிசிதான் இந்திய மக்களுக்குப் பிரதான உணவு என்றாலும் பொதுவாகவே வெள்ளை அரிசியில் வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் குறைவாக உள்ளன. எளிமையாகச் சொல்வதானால், வெள்ளை அரிசி என்பது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் ஒரு மாவுச்சத்து ரக உணவு மட்டுமே. அதுவே பழுப்பு அரிசி அதற்கு நேர்மறையாகச் செயலாற்றுகிறது; அதாவது, மாங்கனீசு, கால்சியம், நார்ச்சத்து மற்றும் புரதம் உள்ளிட்ட பல்வேறு நன்மை பயக்கும் பண்புகளைக் பழுப்பு அரிசி கொண்டுள்ளது.
பழுப்பு அரிசியில் உள்ள பிற பண்புகள் என்ன?
1. ஆன்டிஆக்ஸிடன்ட்களால் செறிவூட்டப்பட்டது: இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் மாலிகுலர் சயின்ஸில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, ஆராய்ச்சியாளர்கள் சைக்ளோஆர்டெனில் ஃபெருலேட் (CAF) என்கிற ஆக்ஸிஜனேற்றி பழுப்பு அரிசியை மிகவும் ஆரோக்கியமாக்குகிறது எனக் கண்டறிந்துள்ளனர். இந்த ஆக்ஸிஜனேற்றீயானது உயிரணுக்களை அழுத்தத்திலிருந்து ஆக்ஸிஜனேற்ற உற்பத்தியை அதிகரிப்பதன் மூலமும் பாதுகாக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
2. செரிமானத்திற்கு நல்லது: பழுப்பு அரிசியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது வளர்சிதை மாற்றத்தை சீராக்கவும், செரிமான அமைப்பை வலுப்படுத்தவும் உதவுகிறது. இந்த காரணிகள் அமிலத்தன்மை, அஜீரணம், குடல் பிரச்சினைகள் மற்றும் பலவற்றின் அபாயத்தை மேலும் குறைக்கின்றன, ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கின்றன.
3. எடை மட்டுப்படுத்துதலை ஊக்குவிக்கிறது: நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பலவற்றால் செறிவூட்டப்பட்ட பழுப்பு அரிசி எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்குச் சிறந்ததாக கருதப்படுகிறது. இதன் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நச்சுத்தன்மையை குறைக்க உதவும் அதே வேளையில், இதில் இருக்கும் நார்ச்சத்து பசியை எளிதில் போக்க உதவுகிறது.
4. இரத்த சர்க்கரை அளவு: பல்வேறு ஆய்வுகளின்படி, தினமும் ஒரு கப் பழுப்பு அரிசியை உட்கொள்வது நீரிழிவு நோயின் அபாயத்தை 60 சதவீதம் வரை கணிசமாகக் குறைக்கிறது. பழுப்பு அரிசியில் உள்ள நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்டுகள் இரத்த சர்க்கரையாக மாற்றப்படும் விகிதத்தை குறைக்க உதவுகிறது. எனவே, பழுப்பு அரிசி கிளைசெமிக் குறியீட்டில் குறைவாகக் கருதப்படுகிறது.
5. கொலஸ்ட்ராலை நிர்வகிக்கிறது: பழுப்பு அரிசியானது முழு தானியமாக கருதப்படுகிறது.அதனால் இது கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தவும், இருதய நோய்களின் அபாயத்தைத் தடுக்கவும் உதவும்.
ஆனால் பழுப்ப அரிசியை வெள்ளை அரிசி போலச் சமைக்க முடிவதில்லை என பொதுவாகவே சமைப்பவர்களில் புகார் எழுவது உண்டு. ஆனால் அதை சமைப்பது மிக எளிது. பழுப்பு அரிசியை அப்படியே குக்கரில் வைப்பதற்கு பதிலாக ஒரு கப் அரிசியை குறைந்தது இரண்டு மணி நேரம் முதல் அல்லது இரவு முழுக்கவோ ஊறவைத்த பிறகு சமைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. இதனால் அரிசி எளிதில் வெந்துவிடும். உண்பதற்கும் எளிதானது.