அசைவ விரும்பிகளுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் மீனிற்கு எப்போதும் தனி இடம் உண்டு. அதிலும் மீன் மாதிரியான மிகவும் பக்குவத்துடன் சமைக்கப்படவேண்டிய உணவினை ஹோட்டல்களில் சாப்பிடுவதற்கும் வீடுகளில் சாப்பிடுவதற்கும் உள்ள வித்தியாசம் பொதுவானது என்றாலும், அதே உணவை மீண்டும் அதே ஹோட்டலில் சாப்பிடும் போது, “அன்னைக்கு மாதிரி டேஸ்ட்டே இல்லை” என நாமே கூறியிருப்போம். அதேபோல், வீட்டிலும் அதேமாதிரிதான் உணர்ந்திருப்போம். இதற்கு முக்கிய காரணம் மீன் போன்ற மிகவும் பக்குவத்துடன் சமைக்கப்படவேண்டிய இறைச்சியை கொஞ்சம் கவனக்குறைவால் உணவின் ருசியையும் தன்மையையும் கெடுப்பது தான். மீன் சமைப்பதில் நான்  மாஸ்டர் எனச் சொல்லும் பலரும் கூட இந்த மாதிரியான தவறினை செய்துவிடுவார்கள். இந்த தொகுப்பில் மீன் சமைக்கும்போது கவனத்தில்கொள்ளவேண்டிய 6 டிப்ஸ் குறித்து பார்க்கலாம். 




1. மீன் சமைக்க முடிவு செய்துவிட்டால், மீன் வாங்கும் போது மிகவும் கவனமாக வாங்கவேண்டும். அதாவது புதிய மீன்களை வாங்கவேண்டும். கண்கள் நன்கு பலபலவென இருக்கும் மீன்களையும், உறுதியான உடல் கொண்ட மீனையும் வாங்க வேண்டும். அப்போதுதான் உணவு மிகவும் சிறப்பாக வரும். துர்நாற்றம் வீசும் மீனைத் தவிர்க்க வேண்டும். 


2. மீன் சமைக்கப்படுவதற்கு அதன் தட்பவெப்பநிலை மிகவும் முக்கியம். ஃபிரிட்ஜில் இருந்து விரைத்துப் போன மீனை எடுத்து தண்ணீரில் சிறுது நேரம் வைத்துவிட்டு, உடனே சூடான பாத்திரத்தில் போடுவதால் மீன் சரியாக வேகவும் வேகாது, மீனின் ருசியும் கெட்டுவிடும். எனவே மீன் அறை வெப்பநிலைக்கு வந்த பின்னர் சமைப்பது ருசியான உணவை தயார் செய்ய உதவியாக இருக்கும்.


3. அதேபோல் பாத்திரம் நன்கு சூடான பின்னரே மீனை பாத்திரத்தில் போட வேண்டும். இல்லையென்றால் மீனின் அமைப்பு சிதைவதுடன் உண்பவர்களுக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். 




4. சமையலில் மிகவும் முக்கியமானது உப்பு. நான் நன்றாகச் சமைப்பேன் ஆனால் உப்பு போடுவதில் மட்டும் சொதப்பிவிடுவேன் என கூறுபவர்கள் நம்மில் அதிகம். இப்படி இருக்கும் போது மீன் போன்ற உணவைச் சமைக்க உப்பை எப்போது சேர்க்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம். 


5. மீனை வறுக்கும் போது கடாயில் போட்ட பின்னர் மீனை உடனே திருப்பக்கூடாது. மீனின் ஒரு பகுதி வேகும் வரை நேரம் கொடுக்க வேண்டும். உடனே திருப்பிக்கொண்டு இருந்தால் மீனின் அமைப்பு சிதைந்து விடும். 


6. மீன் போன்ற மிருதுவான இறைச்சியை சமைக்கும் போது நேரம் மிகவும் முக்கியம். அதாவது மீனை மிகவும் அதிக நேரம் வேக வைக்க கூடாது. ஒரு மீன் வேக 5 முதல் 7 நிமிடங்கள் போதும். அது மீனின் வகையைப் பொறுத்தது. 




இனிமேல் மீன் சமைப்பவர்கள் மேற்குறிப்பிட்ட குறிப்புகளை பயன்படுத்தி சுவையாக சமைத்து மகிழுங்குள்.