கொத்தமல்லி அதன் வாசனைக்காகவும் இரும்புச்சத்துக்காகவும் அறியப்படுகிறது. உணவில் எதற்கும் கூடுதல் வாசனை சேர்க்க கொத்துமல்லி பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர முழு உணவின் முக்கியப் பகுதியாகவும் கொத்தமல்லி பயன்படுத்தப்படுகிறது. கொத்தமல்லி சட்னி, கொத்தமல்லி ரசம், கொத்தமல்லி ரைஸ் என அந்த வரிசையில் கொத்தமல்லி உப்புமாவும் உள்ளது.


இந்த உப்புமா வழக்கமான உப்புமாவைப் போலவே ரவையைப் பயன்படுத்தி செய்யப்படுகிறது. கூடுதலாக கறிவேப்பிலை, வெங்காயம், கடுகு மற்றும் முந்திரி போன்ற உப்புமாவில் சேர்க்கப்படும் பிற பொதுவான பொருட்களும் இதில் உள்ளன. இது கொத்தமல்லியின் வலுவான சுவையுடன் தயாரிக்கப்படுகிறது.  நாம் பொதுவாக உப்புமா செய்யும் போது நறுக்கிய கொத்தமல்லியை சேர்ப்பது வழக்கம். மாறாக இந்த செய்முறையானது கொத்தமல்லி சட்னி போன்ற பேஸ்ட் செய்து தயாரிக்கப்படுகிறது. இந்த பேஸ்ட் ரவாவுடன் சேர்க்கப்பட்டு உப்புமாவாக தயாரிக்கப்படுகிறது..


கொத்தமல்லி உப்புமா:


1. முதலில் இந்த கொத்தமல்லி சட்னி செய்ய நறுக்கிய கொத்தமல்லி இலைகள், பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு, சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து அரைக்கவும்.


2. சட்னி தயாரானதும் அதனை ஓரமாக வைத்துவிட்டு மிதமான தீயில் ரவா, கறிவேப்பிலை மற்றும் முந்திரியை வறுக்கவும். ரவா வெளிர் பழுப்பு நிறமாக மாறியதும் அடுப்பை அணைக்கவும்.


3. கடாயில் எண்ணெயை சூடாக்கி, உளுத்தம்பருப்புடன் கடுகு சேர்க்கவும்.  அவை வெடித்ததும், துண்டுகளாக்கப்பட்ட வெங்காயம், உப்பு, சர்க்கரை மற்றும் பெருங்காயத்தை சேர்க்கவும்.


4. வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கவும். வறுத்த ரவாவை கடாயில் சேர்க்கவும். 2 நிமிடங்களுக்குப் பிறகு, பச்சை கொத்தமல்லி சட்னியைச் சேர்த்து நன்கு கலக்கவும். 2-3 கப் சூடான நீரை ஊற்றி தொடர்ந்து கிளறவும்.


5. நன்கு கொதித்ததும் சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து, உப்புமாவை மிதமான தீயில் சமைக்கவும். கூடுதலாக நறுக்கிய கொத்தமல்லி கொண்டு அலங்கரித்து சூடாகப் பரிமாறவும்.


இந்த உப்புமாவை வெறுமனே சாப்பிடலாம் அல்லது தேங்காய், கடலை சட்னியுடன் பரிமாறலாம். ரவை பயன்படுத்தப் பிடிக்காதவர்கள் மாற்றாக கோதுமை ரவை பயன்படுத்தலாம். இதுதவிர உசிலி உப்புமா செய்பவர்களும் ஒரு சேஞ்சாக உசிலியில் இந்த கொத்தமல்லி சட்னியை சேர்த்து சமைத்து முயற்சி செய்யலாம். காலையில் ஒரே மாதிரியான ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டு போர் அடித்துப் போனவர்களுக்கு இது வித்தியாசமான உணவாக இருக்கும்.