இந்தியர்களின் உணவில் இனிப்பு இல்லாமலா. ஹல்வா, ஜலேபி, லட்டு என விதவிதமான இனிப்பு பதார்த்தங்களுக்கு கொஞ்சமும் குறைவில்லை. காலம் மாற மாற இனிப்பு வகைகளும் மாறிவருகிறது. அப்படித்தான் ஆட்டா லட்டு எனப்படும் ஒருவகை லட்டை ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.


ஆட்டா லட்டு:


ஆட்டா லட்டு என்பது உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கக் கூடியது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


தேவையான பொருட்கள்:


பாதாம், பூசணி விதை, உலர் திராட்சை, முந்திரி ஆகியன தேவை. அத்துடன் கொஞ்சம் ஒமம், இஞ்சிப் பொடி எடுத்துக் கொள்ளுங்கள். ஓமம் வைட்டமின் சி கொண்டது. அதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடன்ட்டுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அப்புறம் லட்டு செய்ய சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் சேர்க்கவும். வெல்லத்தில் உள்ள இரும்புச் சத்து உடலுக்கு வலு சேர்க்கும். இதுதவிர கோந்து எனப்படும் ஒருவகை மரப்பிசினும் தேவை.


செய்முறை:


முதலில் எல்லா ட்ரை ஃப்ரூட்ஸ், நட்ஸ், மற்றும் விதைகளை நான் ஸ்டிக் பேனில் போட்டு வறுத்துக் கொள்ளவும். பின்னர் அதனை கொரகொரவென்று அரைத்துக் கொள்ளவும்.


பின்னர் ஒரு பேனில் நெய் ஊற்றி கோதுமை மாவை வறுத்தெடுக்கவும். கோதுமை நிறம் மாறும் வரை வறுத்தெடுத்து அதை ஆற வைக்கவும்.


இப்போது ஒரு பவுலில் கோதுமை மாவு, நொறுக்கிய வெல்லம், பொடித்துவைத்த பொருட்கள் என எல்லாவற்றையும் சேர்த்துக் கொள்ளவும்.


பின்னர் கைகளில் நெய் தடவிக் கொண்டு மாவைப் பிசைந்து லட்டு பிடித்துக் கொள்ளவும். இது சுவையானது மட்டுமல்ல சத்தானதும் கூட. இப்படி ஒரு இனிப்பை செய்து கொடுத்துப் பாருங்கள் வீடே உங்களுக்கு அடிமையாகிக் கிடக்கும்.


கோதுமையின் நன்மைகள்:


கோதுமை மாவு இரத்தத்தினை சுத்தம் செய்வதாக உள்ளது. மேலும் கோதுமையில் உள்ள அதிக அளவு நார்ச் சத்து காரணமாக அது உடல் எடையினைக்  குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. கோதுமை தானியத்தில் இருந்து பால் பிழிந்து காய்ச்சிக் குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகள் மிகவும் ஆரோக்கியமாக இருப்பார்கள். சம்பா கோதுமையைச்  சாப்பிடும் போது சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு, சர்க்கரை அளவு கணிசமாகக் குறையும். வயிற்றில் புளிப்புத்தன்மை உடையவர்கள் மற்றும் புளித்த ஏப்பம் அடிக்கடி வருபவர்கள் கோதுமையை ரவை போல அரைத்து கஞ்சி செய்து குடித்து வந்தால் நிவாரணம் கிடைக்கும்.


தினமும் கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி இரத்தம் சுத்தமாகும்.  கோதுமையில்  புற்றுநோயைத் தடுக்கும் வைட்டமின் ஈ, செலினியம் மற்றும் நார்ச்சத்து இருக்கிறது. கோதுமையில் களி செய்து விருப்பமான குழம்பு வகைகளுடன் சேர்த்து சாப்பிட்டாலும், கொழுப்பின் அளவினைக் குறைக்க முடியும்.


அளவோடு சாப்பிட வேண்டும்:


ஆனால் எதுவாக இருந்தாலும் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சுதானே. அதனால் அளவாக உண்பது நல்லது. கலோரி வகையில், 100 கிராம் அரிசியில் 358 கிலோ கலோரி கிடைக்கிறது. 100 கிராம் கோதுமையில் 339 கிலோ கலோரி கிடைக்கிறது. ஆகவே கலோரி கணக்கிலும் மாவுச்சத்து கணக்கிலும் அரிசிக்கு கோதுமை சிறிதும் சளைத்ததல்ல இன்னும் கோதுமையில் உள்ள "க்ளூடன்" (gluten) ஒவ்வாமையை உருவாக்கவல்லது. இதற்குப் பெயர் க்ளூடன் ஒவ்வாமை (gluten intolerance) நமது இந்திய மக்கள் தொகையில் 10 சதவிகித மக்களுக்கு இந்த ஒவ்வாமை இருக்கிறது என்கிறது ஒரு ஆய்வு.