கல்லூரி மாணவ, மாணவிகள் அரசின் சிறுதானிய தூதுவர்களாக செயல்பட்டு சிறுதானிய உற்பத்தி, தேவை, சந்தைப்படுத்துதல் போன்ற அனைத்து தரப்பிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அறிவுறுத்தினார்.
சிறுதானிய உற்பத்தி:
தூத்துக்குடி புனித மரியன்னை பெண்கள் கல்லூரியில் மாவட்ட வழங்கல் துறை சார்பில் நடைபெற்ற சர்வதேச சிறுதானிய உணவுத் திருவிழாவினை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி துவக்கி வைத்து பார்வையிட்டார். மேலும், சிறுதானியங்கள் தொடர்பாக பள்ளி கல்லூரிகளில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பேசும்போது, சங்க கால இலக்கியத்தில் சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.
சங்க கால மக்களுக்கு சிறுதானியத்தின் முக்கியத்துவம் தேவையோ, இல்லையோ இப்போது உள்ள மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். நமது ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் நமக்கு காய்ச்சல் போன்ற சிறிய நோய்கள் வந்தால்தான் தெரியும். தொற்று நோய்கள் மற்றும் தொற்றா நோய்கள் மூலம் ஆரோக்கிய குறைபாடு ஏற்படுகிறது.
விழிப்புணர்வு:
தொற்று நோய்களுக்கு நிறைய மருந்துகள் உள்ளன. ஆனால் தொற்றா நோய்களை நமது வாழ்க்கை முறைகள், உணவு பழக்கவழக்கங்கள் மூலம்தான் கட்டுப்படுத்த முடியும். இன்றைய இளையதலைமுறையினர் நிறைய பேருக்கு துரித உணவுகள் மூலம் புற்றுநோய் ஏற்படுகிறது. இளைஞர்களின் திறன் குறையும்போது பொருளாதார வளர்ச்சியும் குறையும். எனவே சத்தான பாரம்பரிய உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உலக அளவில் சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளிடமும் சிறுதானிய உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதுதொடர்பாக நமது மாவட்டத்தில் விழிப்புணர்வு பிரச்சார வாகனம் மூலம் விழிப்புணர்வு பணிகள் கடந்த வாரம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. சிறுதானியங்கள் உற்பத்தி செய்வதற்கு குறைந்த அளவே தண்ணீர் தேவைப்படும்.
மேலும் வரகு, குதிரைவாலி, சாமை, திணை, சோளம் போன்ற சிறுதானியங்களை 75 முதல் 120 நாட்களில் விளைவிக்க முடியும். இவற்றை விளைவிக்க இடுபொருட்களும் குறைவாகவே தேவைப்படும். கல்லூரி மாணவ, மாணவிகளாகிய நீங்கள் சிறுதானிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரசு தூதுவர்களாக செயல்பட்டு அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சிறுதானிய உற்பத்தி, தேவை, சந்தைப்படுத்துதல் போன்ற அனைத்து தரப்பிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். க்ஷ
சிறுதானிய உணவு வகைகள் அதிகளவில் உள்ளன. மேலும் கடலைமிட்டாய் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களும் சிறுதானியங்கள் மூலம் தயாரிக்க முடியும். நீங்கள் வருங்காலத்தில் தொழில்முனைவோர்களாக உருவாவதற்கு அரசு பல்வேறு மானியங்கள் வழங்கி வருகிறது. தொழில் தொடங்குவதற்கு அரசு வங்கிகள் மூலம் 35 சதவீத மானியத்தில் கடன்கள் வழங்கப்படுகிறது. சிறுதானிய உணவு தயாரிப்பில் அதிக வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் அனைவரும் 18 வயது பூர்த்தி அடைந்தால் படிவம் 6ஐ பூர்த்தி செய்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்றார்.
முன்னதாக பல்வேறு அரசுத்துறைகளின் மூலம் சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி பார்வையிட்டார்.நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், சார் ஆட்சியர் கௌரவ் குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசிம் மற்றும் அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.