தேங்காய் எண்ணெய் குளியல் என்பது இன்று நேற்றல்ல ஆதி காலம் தொட்டே நமது முன்னோர்களால் பின்பற்றப்பட்டு வரும்  வீட்டு மருத்துவ முறையாகும். உடல் வைரம் போல் ஜொலிப்பதற்கு தேங்காய் எண்ணெய் குளியல் மிகவும் சிறந்தது என கூறப்படுகிறது.


இருந்தபோதிலும் ஆரம்ப காலங்களில் வாரத்திற்கு இருமுறையேனும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் வழக்கம் இருந்தது. ஆனால் தற்போது அந்த வழக்கம் தற்போது முற்றாக  குறைந்துவிட்டது என்றே கூறலாம்.


கிராமப்புறங்களில் இன்றும் இந்த எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் இருந்தாலும் நகர்ப்புறங்களை பொறுத்த அளவில் பழக்கத்தில் இல்லை என்றே சொல்ல வேண்டும்.


ஆரம்ப காலங்களில் அழகை பராமரிக்கத் தேங்காய் எண்ணெயையும் கபம், வாதம், பித்தம் ஆகியவற்றைக் கட்டுக்குள் வைக்க நல்லெண்ணெயையும், தசைகள், மூட்டுகளின் வலிமைக்கு விளக்கெண்ணெய் போன்றவற்றை எண்ணெய்க் குளியலுக்குப் பயன்படுத்தியுள்ளனர்.


 உடலுக்கு தேங்காய் எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது அதிகப்படியான சூட்டினால் உடலில் ஏற்படும் நோய்கள் தடுக்கப்படுகிறது .அதே போல் சிறந்த சரும பராமரிப்பு நிவாரணியாகவும் அது இருக்கிறது.


முகத்திற்கு மட்டுமல்லாது, உடல் முழுவதும் சிறந்த ஆரோக்கியத்தை பெற இந்த தேங்காய் எண்ணெய் குளியல் வாரத்தில் ஒரு முறையேனும் எடுக்க வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது.


இன்று அதிகமானோர் தம்மை அழகுபடுத்திக் கொள்ள ரசாயன அழகுபொருட்களை தான் நாடிச் செல்கின்றனர் . இவை அதிகளவான பணத்தை வீண்விரயமாக்கும். ஆனால் வீட்டில் இயற்கையாகவே கிடைக்கும் தேங்காய் எண்ணெயை கொண்டு நாம் எவ்வித செலவும் இல்லாமல் உடலை அழகு படுத்த முடியும்.


தேங்காய் எண்ணெய் உடலை வைரம் போல் பிரகாசிக்கச் செய்யும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அதிலும் சருமத்தை பளபளக்காகவும், சருமத்தில் தொற்றுகள் ஏற்படாமலும் இருக்க தேங்காய் எண்ணெய் குளியல் மிகவும் அவசியமாகிறது.


தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த இயற்கை மாய்ஸ்சரைசர் ஆகும், இது  சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி , சருமத்திற்கு புத்துயிர் அளிக்கிறது.


தேங்காய் எண்ணெயை உடல் முழுவதும் பூசி, தலை ,கை கால்களை நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு கை, கால்களில் மசாஜ் செய்யும் போது தோலில் உள்ள கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. தசைகளின் இறுக்கம்  தளர்வடைந்து உடலை அமைதிப்படுத்துகிறது.
 
தேங்காய் எண்ணெய் பூசி குளிக்கும் போது வெதுவெதுப்பான நீரில் சில துளிகள் எலுமிச்சை சாற்றை போட்டு நீராவியில் குளிக்க வேண்டும். இது  இறந்த செல்களை புதுப்பிக்கவும், சருமத்தில் உள்ள பாக்டீரியாக்களை அகற்றவும் உதவுகிறது.


முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிது தேங்காய் எண்ணெயை எடுத்து உடல் முழுவதும் தடவவும்.  விரும்பினால், அதனுடன் அரை டீஸ்பூன் மஞ்சள் சேர்த்து, உடல் முழுவதும் மசாஜ் செய்யலாம். சுமார்  15 முதல் 20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்தால் சிறந்த பலன் கிடைக்கும்.


உடலுக்கு மேலும் அழகு ஊட்ட வேண்டும் என்றால்,  ஒரு பாத்திரத்தில் அரை கப் அரைத்த காபி, அரை கப் பிரவுன் சுகர், அரை கப் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, அதை உடல் முழுவதும் பூசி, நன்றாக தேய்க்க வேண்டும். தொடர்ந்து 20 நிமிடங்களுக்குப் பின்னர் இளம் சூட்டு வெந்நீரில் குளிக்கலாம். இவ்வாறு செய்யும் போது உடல் முழுவதும் உள்ள  சருமம் நன்கு பளபளப்புடன் இருக்கும்.


உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துபவர்கள், குறிப்பாக உடல் சூட்டை தணிப்பதற்காக தலையில் எண்ணெய் தேய்த்து குளிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.


 அதிலும் குறிப்பாக தேங்காய் மற்றும் நல்லெண்ணைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.


இதில் ஆரம்பகாலங்களில் தேங்காய் எண்ணெய் அதிகளவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சமையலிலும் தேங்காய் எண்ணெய் சேர்ப்பது நல்லது எனக்கூறும் ஆய்வாளர்கள் உடலுக்கு தேய்த்து குளிப்பது மிகவும் சிறந்தது என தெரிவிக்கின்றனர்.


தேங்காய் எண்ணெயை பொருத்தவரையில் அதிக மருத்துவ குணங்களை கொண்டது. தினமும் கணினிமும் உட்கார்ந்து வேலை செய்பவர்கள், இரவில் கண்விழிப்பவர்கள் நிச்சயமாக தேங்காய் எண்ணெய் குளியலை எடுத்துக் கொள்ளும் போது உடல் சூடு ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.


எண்ணெய்க் குளியல்  உடலில் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்துவதாக கூறப்படுகிறது. தேங்காய் எண்ணெயை உடலில் தேய்த்து  மசாஜ் செய்யும்போது, அந்த எண்ணெய் சருமத்துக்குள் ஊடுருவி ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. ரத்த ஓட்டம் சீராகும் போது உடல் உறுப்புக்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன. அதேபோல் உடலில் சேரும் தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடலை வலுவடையச் செய்கிறது.


எண்ணெய்க் குளியலுக்கு உகந்த நேரம் அதிகாலை என்பதால் சூரிய ஒளி படுமாறு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் . இதனால் உடலுக்கு வைட்டமின்டி சத்து கிடைக்கிறது. எண்ணெய் தேய்த்து 45 நிமிடம் முதல் ஒருமணி நேரத்துக்குள் குளித்துவிட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.


 எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது இயற்கையான அரப்பு, சீயக்காய், கடலை மாவு, பயத்த மாவு ஆகியவற்றை பயன்படுத்தி குளிப்பது சிறந்ததாகும். 


எண்ணெய் தேய்த்து குளித்த அன்று , எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகளை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.  அசைவ உணவுகள் முற்றிலும் தவிர்த்து விடுவதை சிறந்தது.


 இந்த தேங்காய் எண்ணெய் குளியல் மனித உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. உடல் முழுவதும் பிராண சக்தியை அது அதிகரிக்கச் செய்கிறது. ஆண்களுக்கு உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, உடல் தசை, எலும்புகளுக்கு வலிமை அளிக்கிறது.  அதேபோல் குழந்தையின்மை பிரச்சினைக்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது. மன அழுத்தத்தையும் நீக்கி உடலை பஞ்சு போன்ற இலகுவாக்குகிறது.


அதாவது, நான்கு நாட்களுக்கு ஒருமுறையேனும் எண்ணெய்க் குளியல் அவசியம் என்கிறது சித்த மருத்துவம். கோடைக்காலம் என்றால் வாரம் இருமுறையும் மழைக்காலம் என்றால் வாரம் ஒருமுறையும் எண்ணெய்க் குளியல் எடுத்துக் கொள்ளலாம் என கூறப்படுகிறது.


தேங்காய் எண்ணெய் தேய்த்து வாரம் தோறும் குளிக்கும் போது தலைமுடி நன்கு வளரும் என கூறப்படுகிறது.
உடல் சூட்டை தணித்து இளநரை உருவாகுவதை தடை செய்கிறது. சளி தொல்லை, தலைவலி போன்ற நோயற்ற வாழ்விற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் எண்ணெய் குளியல் என்பது அவசியமாகிறது.