உலகெங்கிலும் வாழும் மக்கள் காலை எழுந்தவுடன் டீ அல்லது காபியை குடிக்கும் வழக்கத்திற்கு அடிமையாகி விட்டார்கள். அதிலும் தென்னிந்தியாவை பொறுத்தவரை,காலையில் டீக்கடைகளில் குழுமி, செய்தி தாள்களை பார்த்து,ஒரு கப் டீயை, குடித்த பின்பு தான், காலைக்கடன்களை செய்வதற்கு, நிறைய மக்கள் பழகி விட்டார்கள்.
கடைகளில் இப்படி என்றால் வீடுகளில், காலையில் எழுந்ததும், பெட் காஃபி அல்லது டீயை குடித்தால் தான். அன்றைய நாள் சுறுசுறுப்பாக இருக்கும். இல்லையெனில் அன்றைய தினத்தில் ஏதோ ஒன்று குறைவதாக பெரும்பான்மையான மக்கள் மனதில் ஆழமாக பதிந்து இருக்கிறது.
இப்படியாக காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் டீ அல்லது காபி குடிக்கும் பழக்கத்தினால், நிறைய பின் விளைவுகள் ஏற்படுவதாக, மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். இப்படி வெறும் வயிற்றில் குடிப்பதினால்,வயிற்றில் சுரக்கும் ஜீரண அமிலங்களை மேலும் தூண்டி விடுவதோடு, செரிமானத்தில் பிரச்சனைகளை உண்டாகிறது.
டீ மற்றும் காபியின் PH மதிப்புகள் ஒருவரை அமிலத்தன்மை பாதிப்பிற்கு கொண்டு செல்கிறது. (PH. மதிப்பு என்பது ஒரு திரவத்தின் அமிலத்தன்மை மற்றும் காரத் தன்மையை குறிக்கிறது. PH மதிப்பு 0 லிருந்து 14 வரையிலும், குறிப்பிடப்படுகிறது. இதில் பூஜ்ஜியம் என்பது அமிலத்தன்மை மற்றும் காரத் தன்மையின் அதிகபட்ச அளவாகவும், 14 என்பது அமிலம் மற்றும் காரத்தன்மையற்றதை குறிக்கும். 7 என்பது நடுநிலைமை தன்மையை குறிக்கும். தண்ணீரானது 7PH மதிப்பு கொண்டது). டீ மற்றும் காபியின் PH மதிப்புகள், முறையே 4 மற்றும் 5 ஆகும்.அதனால் அவை அமிலத்தன்மையை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
ஆகவே,டீ அல்லது காபி குடிக்கும் பழக்கத்தை விட முடியாமல் இருந்தால்,முன்னெச்சரிக்கையாக காலையில் ஒரு கிளாஸ் தண்ணீரை, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இது வயிற்றில் அமில உற்பத்தியைக் குறைக்க உதவுகிறது. இப்படியாக ஒரு கிளாஸ் தண்ணீரைத் தவறாமல் தினமும் குடிப்பது, அல்சர் மற்றும் நெஞ்செரிச்சல் அபாயத்தைக் சரி செய்கிறது.
வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது, உடலில் நீர்ச்சத்து நீடித்திருக்க உதவுகிறது. மேலும், மலச்சிக்கலை தடுப்பதோடு, குடல் இயக்கத்தையும் மேம்படுத்துகிறது. இதே போல வெறும் வயிற்றில், காலையில் டீ சாப்பிடுவதனால், அதில் உள்ள டானிஸ் வேதிப்பொருள், உடலில் இரும்புச்சத்து சேராமல் தடுக்கிறது.
இதைப்போலவே வெறும் வயிற்றில் டீ குடிப்பதினால் பித்தப்பை சுரப்பிகள் பாதிக்கப்பட்டு, அது சார்ந்த உடல் இயக்கம் தடைபடுகிறது. மேலும் டீ குடிக்கும் நேரத்தில் புத்துணர்ச்சியை தந்தாலும், சிறிது நேரத்திலேயே, மந்தமான தூக்க கலக்கத்தை ஏற்படுத்துகிறது. வெறும் வயிற்றில் டீ அல்லது காபி குடிப்பதினால்,உடலுக்கு புரோட்டின் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது. பெட் டீ அல்லது பெட் காஃபி குடிப்பதினால்,பசியின்மை,வாயு கோளாறு மற்றும் செரிமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. காபியில்,காஃபின் அளவு அதிகமாக இருப்பதினால்,வெறும் வயிற்றில் இவற்றை அருந்துவதினால்,ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.
காலையில் வெறும் வயிற்றில் சூடான பிளாக் டீ அருந்துவது, உணவு குழாயில் புற்றுநோயை ஏற்படுத்துகிறது என்று ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சூடான டீ அல்லது சூடான காபியை அருந்துவது உணவுக் குழாயில் சேதத்தை ஏற்படுத்தி, நாள்பட்ட செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
எனவே, காலையில் எழுந்தவுடன், வெறும் வயிற்றில் டீ அல்லது காபி குடிப்பதினால்,ஏற்படும் பக்க விளைவுகளை கவனத்தில் கொண்டு, இப்பழக்கத்தை,கூடுமானவரையிலும் தவிர்க்க வலியுறுத்தப்படுகிறது.ஒருவேளை தவிர்க்க முடியாவிட்டாலும் கூட, வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது அல்லது (உடலின் ஒத்துழைப்பை பொறுத்து) நீராகாரம் அருந்துவது என, முன்னெச்சரிக்கை விஷயங்களை எடுத்துக் கொண்ட பின்,டீ அல்லது காபியை அருந்துவது உடல் நலத்தை பாதுகாக்கும்.