நாம் வழக்கமாக ரவை, சர்க்கரை, திராட்சை முந்திரி உள்ளிட்டவற்றைக் கொண்டு கேசரி செய்வோம். ஆனால் நீங்கள் அன்னாசிப் பழத்தில் கேசரி செய்துள்ளீர்களா? அன்னாசிப்பழம் பொதுவாகவே நல்ல இனிப்பு சுவை உடையதாக இருக்கும். இதை கொண்டு கேசரி செய்யும் போது அந்த கேசரி நல்ல சுவை மற்றும் ஃப்ளேவரில் கிடைக்கும். வாங்க சுவையான அன்னாசிப்பழ கேசரி எப்படி செய்வதென்று பார்க்கலாம். 


தேவையான பொருட்கள் 


நறுக்கிய அன்னாசிப்பழம் - 1 கப்
நாட்டு சர்க்கரை - 1 1/2 கப்
முந்திரி - 120
உலர் திராட்சை - சிறிதளவு
ரவை - 1 கப்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் பொடி - சிறிதளவு
ஏலக்காய்த் தூள் - சிறிதளவு
நெய் - 1/2 கப்
எண்ணெய் - 1/3 கப்


செய்முறை


நெய் மற்றும் எண்ணெய் ஆகிய இரண்டையும் ஒன்றாக கலந்து எடுத்துக் கொண்டு, இதில் 3 தேக்கரண்டி அளவு எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்ற வேண்டும்.


பின்னர் உடைத்து வைத்துள்ள முந்திரிப் பருப்பு சிவக்கும் வரை வறுத்தெடுத்துக் கொண்டு இதனுடன் உலர் திராட்சையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


திராட்சை சற்று உப்பி வந்ததும், அதை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து விட்டு வெட்டி வைத்துள்ள அன்னாசிப் பழத்தை அதே நெய்யில் சேர்த்து 4 முதல் 5 நிமிடங்கள் வரை வேக வைக்க வேண்டும். பின்னர் இதில் இரண்டரை கப் அளவு தண்ணீரை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.


மற்றொரு பாத்திரத்தில் ஏற்கனவே கலந்து வைத்துள்ள எண்ணெய் மற்றும் நெய்யை ஊற்றி, அது சூடான பிறகு, ரவையை சேர்த்து லேசாக வறுக்க வேண்டும்.


பின் ஏற்கனவே கொதிக்க வைத்துள்ள அன்னாசி மற்றும் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக இதில் சேர்த்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.


இதில் இருக்கும் தண்ணீர் அனைத்தும் வற்றிய பின்னர், நாட்டு சர்க்கரை மற்றும் ஒரு சிட்டிகை உப்பை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். ( தேவைப்பட்டால் சிறிதளவு மஞ்சள் பொடி சேர்த்துக் கொள்ளாலாம்.)


இப்போது கலந்து வைத்துள்ள எண்ணெய் மற்றும் நெய்யை 4 தேக்கரண்டி அளவு இதன் மீது சேர்க்க வேண்டும். பின்னர் பாத்திரத்தை மூடி மிகவும் குறைவான சூட்டில் 5 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். இறுதியாக ஏற்கனவே வறுத்து வைத்திருக்கும் முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் பொடியைச் சேர்த்து கிளறி இறக்கினால்  சுவையான அன்னாசி கேசரி தயார்.   


மேலும் படிக்க 


Team of the World Cup 2023: ரோஹித் இல்லை, கோலிதான் கேப்டன் - 4 இந்தியர்கள் உட்பட 11 பேர் கொண்ட உலகக்கோப்பை அணி - ஆஸ்திரேலியா


Semi Final World Cup 2023: உலகக் கோப்பை அரையிறுதி வாய்ப்பை அசால்டாக தூக்கிய இந்தியா..! லீக் சுற்றில் நடந்தது என்ன?