மசால் வடை பொதுவாக எல்லோருக்குமே பிடிக்கும். இந்த வடை மொறுமொறுப்பாகவும் நல்ல சுவையாகவும் இருக்கும். மசால் வடையை சுவையாகவும் ஈசியாகவும் செய்வது எப்படி என்று தான் இப்போது நாம் பார்க்கப் போகின்றோம்.
தேவையான பொருட்கள்
கடலைப் பருப்பு - 150 கிராம், தோல் உரித்த பூண்டு பல் - 4, காய்ந்த மிளகாய் -1, சோம்பு - ஒரு டீஸ்பூன், துருவிய இஞ்சி - கால் டீஸ்பூன், நறுக்கிய பச்சை மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை - சிறிதளவு, பெரிய வெங்காயம் – ஒன்று, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி, உப்பு – தேவையான அளவு.
செய்முறை
மசால் வடை செய்வதற்கு முதலில் கடலைப் பருப்பை எடுத்து நன்றாக சுத்தம் செய்து கழுவி தண்ணீரில் மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும். மூன்று மணி நேரத்திற்கு பின், ஊறவைத்த கடலை பருப்பில் தண்ணீர் இல்லாமல் வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
தண்ணீர் முழுவதுமாக வெளியேறி உலர்வாக இருக்கும் இந்த கடலைப் பருப்பை ஒரு பெரிய மிக்சி ஜாரில் சேர்த்து அதனுடன் தோலுரித்த பூண்டு பற்கள், காரத்திற்கு ஒரு காய்ந்த மிளகாய், வாசனைக்கு சோம்பு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் எதுவும் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்துக் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மைய அரைத்து விட்டால் வடை நன்றாக வராது. அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து உதிர்த்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் நறுக்கிய கறிவேப்பிலை இலைகள் சேர்த்து, பச்சை மிளகாய் ஒன்றை பொடி பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும்.
தோலுரித்து பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம், துருவிய இஞ்சி, பெருங்காயத் தூள், சுத்தம் செய்து பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலைகள் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனுடன் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
கெட்டியாக இருக்கும் இந்த மாவை சப்பாத்திக்கு உருண்டைகள் பிடித்து வைப்பது போல் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அடுப்பில் சட்டியை வைத்து அதில் வடை சுட தேவையான அளவு எண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். பின்னர் அடுப்பை மிதமான தீயில் வைத்து உருண்டை பிடித்து வைத்துள்ள மாவை வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு இருபுறமும் சிவக்க வறுத்தெடுக்க வேண்டும்.
அவ்வளவுதான் சுவையான மசால் வடை தயாராகி விட்டது. இதை மாலை நேரத்தில் டீ நேரத்தில் சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.
மேலும் படிக்க