ஒரு பானை அடுப்பில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும், அடுப்பை மிதமான தீயில் வைத்து, அதில் அரை கப் கடலை பருப்பு சேர்த்து 30 நொடிகளுக்கு பின் , அரை கப் கருப்பு உளுத்தம் பருப்பு சேர்த்து சில நொடிகளுக்கு பின் இதனுடன் நெல்லிக்காய் அளவு புளி சேர்த்து 30 நொடிகள் வறுத்து விட்டு,  அரை கப் வேர்க்கடலை, கால் கப் எள், கால் கப் சீரகம் ஆகியவற்றை சேர்த்து 30 நொடிகள் வறுத்து விட்டு 10 மிளகாய் சேர்த்து அனைத்தும் சிவக்கும்படி வறுக்க வேண்டும். இதனுடன் சிறிது பெருங்காய தூளும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.  அனைத்து பொருட்களும் நன்கு வறுபட்டதும் இதை ஒரு தட்டுக்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.


இந்த பொருட்களை எல்லாம் இங்கு கொடுக்கப்பட்டுள்ள வரிசையில், சரியாக சேர்த்து வறுத்தால் சரியாக இருக்கும். இல்லையென்றால் அனைத்து பொருட்களையும் தனித்தனியாகவும் வறுத்துக்கொள்ளலாம். தனித்தனியே வறுத்தால் கூடுதல் நேரம் எடுக்கும். 


இதே கடாயை மீண்டும் அடுப்பில் வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, 15 பூண்டு பற்களை நசுக்கி சேர்த்துக்கொள்ள வேண்டும். இதை பொன்னிறமாக வறுத்து தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதே கடாயில் இரண்டு கப் கறிவேப்பிலை சேர்த்து இதனுடன் தேவையான அளவு உப்பு, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும். இவை நன்கு மொறு மொறுப்பாக வறுபட்டதும் இவற்றையும் ஒரு தட்டுக்கு மாற்றிக்கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் ஆற வைத்துக்கொள்ள வேண்டும். 


இப்போது நாம் வறுத்து வைத்து கடலைப்பருப்பு உள்ளிட்ட பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் வறுத்து வைத்துள்ள கறிவேப்பிலையையும் சேர்த்து நன்றாக அரைத்து, இதனுடனேயே வறுத்த பூண்டையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போது அரைத்த அனைத்து பொருட்களையும் நன்றாக கலந்துகொள்ள வேண்டும். 


இப்போது சாதம் வடிக்கும் போதே அதில் சிறிது உப்பு போட்டு வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். வடித்த சாதத்தை ஒரு தட்டில் சேர்த்து விட்டு அதில் மூன்று  ஸ்பூன் எண்ணெய் மற்றும் தயாரித்து வைத்துள்ள கறிவேப்பிலை பொடியில் தேவையான அளவு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.  அவ்வளவு தான் சுவையான கறிவேப்பிலை சாதம் தயார்.