தேவையான பொருட்கள்



அரிசி-1 கப், கேப்ஸிகம்-2, பெரியவெங்காயம் -2, மிளகுத்தூள்-2 ஸ்பூன், கரம் மசாலா தூள் 1/2 -ஸ்பூன், மிளகாய் தூள்-1/2 ஸ்பூன், மல்லித்தழை-கையளவு, எண்ணெய் -தேவையான அளவு, உப்பு -தேவையான அளவு.

செய்முறை


அரிசியை கழுவி, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.  பின் இதை ஒரு குக்கரில் சேர்த்து அரிசி வேக தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்து,  இரண்டு விசில் வந்ததும் இறக்கி கொள்ள வேண்டும்.

 

குடைமிளகாய், வெங்காயம் மற்றும் கொத்தமல்லி இலை, ஆகியவற்றை மிக பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் சேர்த்து, சூடானதும் அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள குடைமிளகாய் வெங்காயம், கரம் மசாலா தூள் மற்றும் மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கி விட வேண்டும். பின் அதில் வேகவைத்து தயாராக வைத்துள்ள சாதத்தை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.

 

அடுத்ததாக அதில் மிளகுத்தூள் சேர்த்து, கிளறி இறக்கி விட்டு, பின் பொடியாக நறுக்கி வைத்துள்ள மல்லித்தழையை தூவி பரிமாறினால் சுவையான குடைமிளகாய் சாதம் தயார். 

குடைமிளகாய் பயன்கள் 





உடல் எடையை குறைப்பதில், குடைமிளகாய்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குடைமிளகாயில் குறைந்த அளவே கலோரியும் கொழுப்பும் உள்ளது. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இதை தினசரி எடுத்து சாப்பிடுவதால் பசியை குறைத்து எடை அதிகரிக்காமல் தடுக்கும் என கூறப்படுகிறது.






உடலில் உள்ள செல்கள் சேதமடையாமல் தடுப்பதில் ஆன்டி ஆக்சிடென்டுகளின்  பங்கு முக்கியமானது. குடைமிளகாயில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் செல்கள் சேதமடைவதை தடுத்து நிறுத்தும் செயல்முறையை துரிதப்படுத்த உதவும் என சொல்லப்படுகிறது. 






குடைமிளகாயில் அழற்சி எதிர்ப்பு தன்மை உள்ளதால் உடல் வலியை போக்கும் குணம் கொண்டது என கூறப்படுகிறது. குடைமிளகாயில் உள்ள வைட்டமின் கே எலும்புகளை வலுப்படுத்த உதவலாம்.  இணைப்புகளில், மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தையும், வலியையும் குறைக்கவும் குடை மிளகாய் உதவும் என சொல்லப்படுகிறது. 





குடைமிளகாயில் லுடீன் மற்றும் ஜியாசாந்தைன் ஆகிய இரண்டு கரோட்டினாய்டுகள் நிறைந்துள்ளன. அவை விழித்திரையை பாதுகாக்க உதவும் என்று சொல்லப்படுகிறது.







குடைமிளகாயில் உள்ள சத்துக்கள் தலை முடியின் வேரை வலிமையாக்கி, தலை முடியை ஆரோக்கியமாக வைக்க உதவும் என்று சொல்லப்படுகின்றது.