இப்போதெல்லாம் ஒரு ஹோட்டலில் சாப்பிட நுழைந்தால் என்ன சாப்பிடாம் என நண்பர்களிடம் கேட்டால் எல்லாரும் சேர்ந்து ஒரு முடிவெடுத்து அவரவருக்கு என்ன வேண்டும் என்று சொல்லி முடிப்பதற்கே ஒரு அரை மணி நேரம் ஆகி விடுகிறது. இந்த யோசிக்கும் நேரத்தில் ஏதாவது சாப்பிட்டுக்கொண்டே யோசிக்க வேண்டும் என்பதற்காக ஒரு ஐட்டம் இருக்க வேண்டும் இல்லையா. அப்படியான ஒரு ஐட்டமாக தான் ஃபிரெஞ்சு ப்ரைஸ் மாறிக்கொண்டிருக்கிறது இப்போது. நன்றாக சூடாக எண்ணெயில் வறுத்த உருளைகிழங்கை சாஸ் அல்லது மயோனீஸில் தொட்டு சாப்பிடும்போது நல்லா தான் இருக்கு. ஆனா இத்தனை நாளாக அது நமக்கு என்ன பாதிப்பு ஏற்படுத்துகிறது என்பதை தெரியாமல் தான் நாம் அதை சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறோம்.
அண்மையில் சீனாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் பிரெஞ்சு ஃப்ரைஸ் சாப்பிடுவதால் மனநல பிரச்சனைகள் ஏற்படுவதாகவும், மன உளைச்சலை அதிகமாக்குவதாகவும் அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதிகப்படியான எண்ணெயில் வருக்கப்பட்ட உணவுப்பொருட்களை சாப்பிடுபவர்கள் குறிப்பாக உருளைக்கிழங்கு அதிகமாக உட்கொள்பவர்கள் அதிகப்படியான மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிரஞ்சு ஃப்ரைஸ் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டவர்கள் 12 சதவிகிதம் மனப்பதட்ட நிலையாலும் 7 சதவிகிதம் மனச்சோர்வாலும் பாதிக்கபடுகிறார்கள் என இந்த ஆய்வு முடிவில் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த ஆய்வு கிட்டதட்ட 1,40,728 நபர்களைக் கொண்டு சுமார் பதினொரு ஆண்டு கால அளவிற்குள் நடத்தப்பட்டு தற்போது வெளிடப்பட்டுள்ளது. இந்த மொத்த எண்ணிக்கையில் சுமார் 8,294 நபர்கள் மனப்பதட்ட நிலையாலும்,12,735 நபர்கள் மனச்சோர்வால் பாதிக்கபட்டுள்ளதை ஆராய்ச்சியாளர்கள் கண்டடைந்துள்ளார்கள். அதிலும் இதில் பெரும்பான்மையானவர்கள் இளம் வயதினர்களாக இருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கும் தகவலாக வந்து சேர்ந்துள்ளது. தற்போது இந்த ஆராய்ச்சி மிகவும் தொடக்க நிலையில் உள்ளதால் திட்டவட்டமான முடிவுகள் எதுவும் ஆராய்ச்சியாளர்களால் சொல்ல முடியவில்லை. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் உலகம் முழுவதும் மனநல பிரச்சனைகளால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை பெரும் அளவில் அதிகரித்துள்ளது.மன நல ஆலோசகர்களிடம் நிறையை புதிய விதமான பிரச்சனைகளோடு மக்கள் வருகிறார்கள். இதற்கான காரணம் என்று தனிப்பட்ட ஒன்றை மட்டும் சொல்லிவிட முடியாது. ஆனால் மாறி வரும் வாழ்க்கைச் சூழல், சமூக வலைதளங்க்ளின் வருகை, இப்போது முக்கியமாக உணவு முறைக்கும் இதில் முக்கிய பங்கு இருப்பது இந்த ஆய்வின் மூலம தெரிய வந்திருப்பது மருத்துவர்களுக்கு மிகவும் உதவக்கூடிய ஒரு தகவலாகும்.
இன்று நமது குழந்தைகள் வார இறுதிகளில் வெளியே சென்றால் முதலில் கேட்பது பிரெஞ்சு ஃப்ரைஸ்தான்.இந்த ஆய்வின் அடிப்படையாக கொண்டு அடுத்த தலைமுறையினருக்கு ஆரோக்கியமான உணவு குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகிறது. உருளைக்கிழக்கு சேர்க்காமல் இருப்பதை விட அளவோடு சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதும் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதும் மிகவும் முக்கியமாகிறது.