கருவறையில் நாம் உருவாகும் நேரத்தில்,எப்போது இதயத்துடிப்பு கேட்க ஆரம்பிக்கின்றதோ, அன்றிலிருந்து அந்த மனிதன் இறக்கும் வரை ஓய்வில்லாமல் வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு உறுப்பு எதுவென்று கேட்டால் அது இதயம்.
ஆனால் அண்மைக் காலமாக உலகம் முழுவதும் இதய நோய்கள் அதிகரித்து வருகின்றன. அதுவும் குறிப்பாக மாரடைப்பு, திடீர் மாரடைப்பு அதிகமாக வருகிறது.
இந்தியாவில் சமீப காலமாக மாரடைப்பு ஏற்படும் விகிதம் அதிகரித்துள்ளது. அண்மையில் சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு மனு தாக்கல் செய்தார். அவர் ஆர்டிஐ பதிலில் ’2021 ஜனவரி மாதத்திலேயே மும்பை நகரில் மாரடைப்பு மரணங்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 6 மடங்கு அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
திடீர் மாரடைப்பு
ஒரு பக்கம் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதால் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் அதே வேளையில், அதிக அளவு உடற்பயிற்சி மேற்கொள்வது அதை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும், டைப் 2 நீரிழிவு நோய், கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம், அதிக நேரம் கம்ப்யூட்டர் திரையைப் பார்த்தல், குறைவான உடல் செயல்பாடு, குடும்ப வரலாறு, உடல் பருமன் போன்றவற்றால் இதய நோய்கள் வயது வித்தியாசமின்றி அதிகரித்துவருவதாக எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். வருடத்துக்கு ஒருமுறையாவது உடல் முழு பரிசோதனை செய்துகொள்வது இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும் என மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அறிகுறிகள்:
அசவுகரியம், ரத்த அழுத்தம், நெஞ்சில் வலி, கை, கழுத்து மற்றும் தாடையில் வலி ஏற்படுதல் மூச்சுத் திணறல். அதுவும் குறிப்பாக ஏதாவது வேலை செய்யும்போது ஏற்படுதல் அயர்ச்சி. குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் அதீத அயர்ச்சி வியர்வை, சோர்வு. இதுவும் பெண்களில் காணப்படும்
நெஞ்சு எரிச்சல்
ஆண்களுக்கே அதிக ஆபத்து:
மாரடைப்பால் ஆண்களே அதிகம் இறக்கும் நிலையில் ஆண்களின் இதயத்தை ஒப்பிடுகையில் பெண்களின் இதயம் சற்று சிறியது. அவர்கள் இதயத்தின் இன்டீரியர் சேம்பர்களுக்கு சிறியது. ஆண்களின் இதயத்தைவிட அதிக வேகமாக பெண்களின் இதயம் துடித்தாலும் கூட பெண்களின் இதயம் சுருங்கும் போது வெளியேற்றப்படும் ரத்தத்தின் அளவு ஆண்களின் இதயம் வெளியேற்றுவதைவிட 10 சதவீதம் குறைவு.
ஆண்களின் இதய தமனிகள் சற்று குறுகியதாக இருக்கும். அதனால் ரத்தம் பாயும்போது அதிக அழுத்தம் ஏற்படுகிறது. ஆகையால் பெண்களைவிட ஆண்களுக்கே மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. அதுமட்டுமல்லாது இளம் வயதில் மாரடைப்பு ஏற்படவும் அவர்களுக்கே வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மாரடைப்பு வராமல் தடுக்க டிப்ஸ்:
மன அழுத்தம் ஏற்பட்டால் அதனை சரிசெய்ய முற்பட வேண்டும்.
மது அருந்துதல், புகைப்பிடித்தல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
கொழுப்பு அதிகமுள்ள உணவுகளையும், எண்ணெய்யில் பொறித்த உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
உப்பு, இனிப்பு அதிகமுள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.
உடலில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவை சரியாக வைத்திருக்க வேண்டும்.
தினமும் 8 மணி நேரம் நன்றாக தூங்க வேண்டும்.