ஆரோக்கியமான அழகான சருமத்தை விரும்பாதவர்கள் இருக்கவே முடியாது. பெண்கள் பளபளப்பான அழகான சருமத்தை பெற அழகு நிலையங்களுக்கு சென்று பணத்தை செலவு செய்கின்றனர். விலையுயர்ந்த க்ரீம்களை வாங்கி பூசிக்கொள்கின்றனர். ஆனால் இயற்கையாகவே நாம் ஒரு சில பானங்களை பருகுவதன் மூலம் நாம் அழகான சருமத்தை பெற முடியும். அவை என்னென்ன பானங்கள் என்பதை இப்போது பார்க்கலாம்...


1. எலுமிச்சை தண்ணீர்


காலையில் எலுமிச்சை சாறு கலந்த தண்ணீரை முதலில் பருகுவது சருமத்திற்கு மிகவும் நல்லது என சொல்லப்படுகிறது. எலுமிச்சையில்  வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நம் சருமத்தை உள்ளே இருந்து ஊட்டமளிக்கிறது மற்றும் நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. இது கொலஜன் உற்பத்திக்கு உதவுகிறது மற்றும் சருமத்தில் தோன்றும் கோடுகள் மற்றும் சுருக்கத்தை குறைக்கிறது. ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது எலுமிச்சை சாற்றை கலந்து குடிப்பது ஆரோக்கியமான சருமத்தை பெற உதவும் என சொல்லப்படுகிறது.  இதனுடன் சிறிது தேனையும் சேர்த்துப் பருகலாம்.


2. கிரீன் டீ


ஒரு சிலர் எழுந்திருக்கும்போதே பெட் காபி குடிக்கும் பழக்கம் கொண்டிருக்கின்றனர். ஒருவேளை நீங்கள் ஆரோக்கியமான பளபளப்பான சருமத்தை விரும்புபவராக இருந்தால்,  வழக்கமான டீ, காபிக்கு பதிலாக ஒரு கப் க்ரீன் டீ பருகலாம். க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால், சருமம் தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. இதில் வைட்டமின் ஈ உள்ளது. இது இயற்கையாகவே சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது. நீங்கள் எப்போதும் விரும்பும் ஆரோக்கியமான பளபளப்பை உங்களுக்கு வழங்குகிறது.


ஆரம்பத்தில் க்ரீன் டீ பருகுவது உங்களுக்கு சற்று கடினமாக தோன்றினாலும் நாளடைவில் பழகிவிடும். இதை தினந்தோறும் பருகி வந்தால் உங்கள் சருமத்தில் நல்ல மாற்றத்தை காணமுடியும் என சொல்லப்படுகிறது.


3. மஞ்சள் பால்


மஞ்சள் பால் பல்வேறு நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது. இந்த மாயாஜால பானம் சரும ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் என்பதில் ஆச்சரியமில்லை. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உங்கள் சருமத்தை சீராக்க உதவுகிறது. மற்றும் எந்த சிவப்பையும் குறைக்க உதவுகிறது. காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான மஞ்சள் பாலில் சிறிது இஞ்சியை கலந்து பருகலாம்.


4. நெல்லிக்காய் சாறு


நெல்லிக்காயில் அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. வைட்டமின் சி நிறைந்திருப்பதால் இது சருமத்திற்கு மிகவும் நல்லது. இது உங்கள் தோலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.  இது இயற்கையான ரத்தம் சுத்திகரிப்பானாகவும் செயல்படுகிறது. இது சருமத்தை பொலிவாகவும் பளபளப்பாகவும் மாற்ற உதவுகிறது. 


5. தேங்காய் தண்ணீர்


உங்கள் சருமம் வறண்டு, ஈரப்பதம் இல்லாமல் இருந்தால், ஒரு டம்ளர் தேங்காய் தண்ணீர் உங்களுக்கு சிறந்த நிவாரணம் தரும். இது மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் சோடியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகளால் நிரம்பியுள்ளது. இவை அனைத்தும் நமது தோலில் இழந்த ஊட்டச்சத்துக்களை நிரப்ப உதவுகின்றன. இது சருமத்தை மென்மையாகவும் அழகாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது.