சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தன் சுவையில் ஈர்த்துள்ளது சேலத்து தட்டுவடை செட். மொறுமொறுன்னும், சத்தாகவும் இருப்பதினால் க்யூவில காத்திருந்துக்கூட மக்கள் வாங்கிச்செல்கின்றனர்.
தமிழர்களுக்கே உரித்தானது விருந்தோம்பல்தான். அதிலும் காரசாரத்துடன் கூடிய விதவிதமான உணவு வகைகளைச் செய்வதில் அவர்களை அடிச்சிக்க ஆளே கிடையாது. இதனால் தான் என்னவோ, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு விதமான சிறப்புகள் இருக்கு. குறிப்பாக திருநெல்வேலின்னா அல்வா, மணப்பாறை முறுக்கு, மதுரை கறி தோசை மற்றும் ஜிகர்தண்டா, திண்டுக்கல் பிரியாணி, காரைக்குடி செட்டிநாட்டு உணவு என அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த வரிசையில், இந்நேரத்தில் நாம் சேலம் மாவட்டத்தில் உள்ள ஸ்பெசல் ஸ்நாக்ஸ் குறித்து பார்ப்போமா? நமக்கு சேலம்னாவே டக்குன்னு நமக்கு நினைவுக்கு வருவது மாம்பழம்தான். ஆனால் இங்கு இருக்கிற இன்னொரு ஸ்பெசல்தான் மொறு மொறு தட்டுவடை செட். அப்படி என்ன அதில் ஸ்பெசல் இருக்குன்னு அனைவரும் நினைக்கலாம்.
பொரிகடலை, பச்சரிசி மாவில் தயாரிக்கப்பட்ட தட்டுவடையின் மீது புதினா சட்னி தடவி அதன் மீது கேரட், பீட்ரூட், பெரிய வெங்காயத்துருவல் சேர்த்து பரிமாறும்போது நல்ல சுவையாகவும், நல்ல ஊட்டச்சத்தாகவும் இருக்கின்றது. முன்பெல்லாம் சேலத்தில் அம்மாப்பேட்டை, பொன்னம்மாபேட்டை, பழைய பேருந்து நிலையங்களில் கிடைத்த இந்த ரெசிபி தற்போது சேலம் மாநகராட்சி முழுவதிலும் உள்ள தெருவோரக் கடைகளில் கிடைக்கின்றது. இந்த தட்டுவடை செட் மொறு மொறுப்பாகவும், சுவையாக இருப்பதோடு பீட்ரூட், கேரட், கலவையும் இதில் சேர்க்கப்படுகிறது. எனவே சத்தான இந்த ஸ்நாக்ஸை அனைத்துத்தரப்பட்ட மக்களும், குறிப்பாக கல்லூரி மாணவர்கள் க்யூவில் நின்றுகூட வாங்கிச்செல்கின்றனர்.
இந்த சத்தான மொறு மொறு தட்டுவடை ரூ. 10-க்கு விற்பனையாகிறது. தற்போது சேலத்திலும், சேலத்தை ஒட்டியுள்ள சில பகுதிகளில் கிடைக்கின்றனர். ஒருவேளை சேலத்துவாசிகள் பிற மாவட்டங்களில் வசித்து வந்தால் அங்கேயும் இந்த ரெசிபியை செய்து விற்பனை செய்கின்றனர்.
சேலம் ஸ்பெஷல் தட்டுவடை செட் செய்யும் முறை:
தேவையான பொருள்கள் -
பொரிகடலை, பச்சரிசி மாவினால் செய்யப்பட்ட தட்டை - 12
கேரட் மற்றும் பீட்ரூட் துருவல் அரை கப்
வெங்காயம் – 1
கொத்தமல்லி இலை - சிறிதளவு
எலுமிச்சை சாறு - அரை டீஸ்பூன்
காரச் சட்னி - 6 டீஸ்பூன்
புதினா சட்னி - 6 டீஸ்பூன்
மாங்காய்த் துருவல் - 3 டீஸ்பூன்
சாட் மசாலாத்தூள் - 3 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில், கொத்தமல்லி இலை மற்றும் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பின்னர் இதனை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு கேரட், பீட்ரூட் துருவல் , எலுமிச்சைச்சாறு மற்றும் உப்பு சேர்த்துக்கலக்கவும்.
பின்னர் 6 தட்டைகளின் மீது காரச்சட்னியைத் தடவி தட்டில் இடைவெளிவிட்டு வைக்க வேண்டும். அதன் மேல் கொஞ்சம் கொஞ்சமாக கேரட்- பீட்ரூட் கலவை வைக்க வேண்டும். இதன் மீது வெங்காயம், கொத்தமல்லி இலை, சாட் மசாலாவைச் சேர்த்து தூவவும். இறுதியில் தட்டுவடை செட்டில் புதினா சட்னியைத் தடவி காய்கறி கலவையின் மீது வைத்து ருசியான தட்டுவடை செட்டைப்பரிமாறலாம்.
ஒருவேளை நீங்கள் எப்போவாவது சேலத்துக்குப் போனீங்கன்னா மறக்காமல் இந்த தட்டுவடை செட்டை ருசிக்க மறந்திடாதீங்க!