இந்திய கிரிக்கெட்டின் சூப்பர் ஐகான் சச்சின் டெண்டுல்கர். இன்றளவும் பல சாதனைகளை தன்னகத்தே வைத்துள்ளவர். இளம் கிரிக்கெட்டர்களின் இன்ஸ்பிரேஷனாக இருப்பவர். இளம் வயதில் பாரத ரத்னா விருது பெற்றவர் என்று பல்வேறு பெருமைகளைக் கொண்ட சச்சின் ஒரு உணவுப் பிரியர் என்பதும் எல்லோருக்கும் தெரியும். 


அவ்வப்போது கிச்சனில் இறங்கி ஏதாவது சமைத்து வீடியோவை இன்ஸ்டாகிராமிலும் அவர் பகிர்வார். இந்நிலையில் அவருடைய ஃபேவரைட் உண்ணவென்பது அவருடைய அண்மை சேட் ஒன்று மூலம் தெரியவந்துள்ளது. சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் #AskSachin என்ற ஹேஷ்டேகின் கீழ் ரசிகர்களிடம் கேள்விகளை கேட்குமாறு அழைப்பு விடுத்திருந்தார். அது போதாதா லட்சக் கணக்கில் கேள்வி குவிய அதில் ஒரு பெண் உங்களுடைய சீட் மீல் எதுவென்று கேட்க அதற்கு சச்சின் டெண்டுல்கர் பிரியாணி என்று பதில் கூறியுள்ளார்.


இது போல் சச்சின் தனது ஃபேவரைட் உணவு பிரியாணி என்று அறிவிப்பது இது முதன்முறையல்ல. ஏற்கெனவே இது குறித்து இர்ஃபான் பதான் சுதா மேனனின் ரெஸிபிஸ் ஃபார் லைஃப் புத்தகத்திற்காக அளித்தப் பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். சச்சின் டெண்டுல்கருக்கு பிரியாணி என்றால் ரொம்பப் பிடிக்கும் என்றும் ஒரு முறை என் அம்மா செய்து கொடுத்த பிரியாணியை சாப்பிட்டுவிட்டு அடுத்தநாளும் அதேபோல் பிரியாணி சாப்பிட ஆசையாக இருப்பதாக அவர் கூறியதை சுட்டிக் காட்டியிருந்தார்.


ஆஹா நம்ம சச்சினுக்கு பிரியாணி தான் பிடிக்குமா, அடடே இன்று நமக்கு ரம்ஜான் பிரியாணி கிடைக்கவில்லையே என்றெல்லாம் யோசிப்பவர்கள் நாளையே கூட இந்த ரெஸிப்பிக்களை ட்ரை பண்ணலாம்..


ஆம்பூர் சிக்கன் பிரியாணி:


தேவையான பொருட்கள்:
 
சீரகசம்பா அரிசி - 1 கப் 


சிக்கன் - 250 கிராம் 
பட்டை - 2
கிராம்பு - 3
ஏலக்காய் - 3
பிரிஞ்சி இலை - 2
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன் 
எண்ணெய் - 5 ஸ்பூன் 
நெய் - 1 ஸ்பூன் 
மிளகாய் வற்றல் - 6
தயிர் - 3 ஸ்பூன் 
எலுமிச்சை சாறு - 1/2 (சாறு எடுத்து கொள்ளவும்)
உப்பு - தேவையான அளவு  
கொத்தமல்லி இலை - தேவையான அளவு 
புதினா இலை - தேவையான அளவு 




செய்முறை:


கடாயில் எண்ணெய்யை சூடாக்கி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை தாளிக்கவும். அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். அத்துடன் இஞ்சி  பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு 10 நிமிடம் ஊறவைத்த மிளகாய் வற்றலை அரைத்து அத்துடன் சேர்த்து வதக்கவும். அத்துடன் தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் சிக்கனை சேர்த்து வதக்கவும். அதோடு தயிர், புதினா கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கவும். பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு கலந்து தண்ணீர் விட்டு சிக்கனை வேக விடவும். சிக்கன் வெந்து தண்ணீர் வற்றியதும் 2 கப் தண்ணீர் 10 நிமிடம் ஊறவைத்த அரிசி, கொத்தமல்லி, புதினா சேர்த்து குக்கரில் 1 விசில் வந்ததும் இறக்கவும். சுவையான ஆம்பூர் சிக்கன் பிரியாணி தயார்.


சிக்கன் பிரியாணி என் ஃபேவரைட் அல்ல நமக்கு மட்டன் பிரியாணிதான் பிடிக்கும் என்பவர்களுக்காக ஹைதராபாத் மட்டன் பிரியாணி ரெஸிபி


தேவையான பொருட்கள்


பிரியாணி அரிசி – 2 கப்


மட்டன் – 1/4 கிலோ


பெரிய வெங்காயம் – 2


பச்சை மிளகாய் 4


இஞ்சி பூண்டு விழுது – 2 மேஜைக்கரண்டி


சின்ன வெங்காயம் – 5


பப்பாளி – 1 சிறிய துண்டு (நைசாக அரைத்து கொள்ளவும்)


தயிர் – ½ கப்


மிளகாய்த்தூள் – 1 மேஜைக்கரண்டி


கரம் மசாலா – ½ மேஜைக்கரண்டி


பட்டை – 2 துண்டு


கிராம்பு – 4


ஏலக்காய் – 3


புதினா – 1 கைப்பிடி அளவு


எலுமிச்சம் பழ சாறு – 1 மேஜைக்கரண்டி


ஜாதிக்காய்த்தூள் – ¼ மேஜைக்கரண்டி


மஞ்சள் தூள் – ½ மேஜைக்கரண்டி


பால் – 2 மேஜைக்கரண்டி


முந்திரி – 7


குங்குமப்பூ – சிறிதளவு


நெய் – தேவையான அளவு


உப்பு – தேவையான அளவு


எண்ணெய் – தேவையான அளவு


அடேங்கப்பா இவ்வளவு பொருளா என்று கேட்பவர்களுக்கு ஆமாங்க இது கொஞ்சம் காஸ்ட்லியான ஸ்பைஸியான பிரியாணி என்பதை சொல்லிவிடுகிறோம்.




செய்முறை


பிரியாணி அரிசியைக் நன்றாக கழுவி அரைமணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். அது ஊறும் நேரத்திற்குள் வெங்காயம், புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாய்களை இரண்டாக கீறி கொள்ளவும். பட்டை, கிராம்பு, ஏலக்காய் எல்லாவற்றிலும் பாதியளவு எடுத்து அரைத்து கொள்ளவும்.


பின்னர் மட்டனை நன்றாக சுத்தம் செய்து அதனுடன் அரைத்த மசாலா பொடிகள், கீறிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, தயிர், மிளகாய்த்தூள், கரம் மசாலா, வெங்காய விழுது, பப்பாளி விழுது, பிரியாணி இலை, அரை மேஜைக்கரண்டி மஞ்சள் தூள், புதினா, 2 மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்த்து 3 மணி நேரம் ஊற வைக்கவும்.


பின்னர் மீதமுள்ள பட்டை, கிராம்பு, ஏலக்காய், சிறிது எண்ணெய் சேர்த்து, 3 கப் தண்ணீர் ஊற்றி அரிசியை முக்கால் பதம் வேக வைத்து வடித்து எடுத்து கொள்ளவும். வெங்காயத்தை  வதக்கிக் கொள்ளவும். பெரிய பாத்திரத்தில் நெய், எண்ணெயை விட்டு, காய்ந்தவுடன் மசாலாக்கள் சேர்த்து ஊறவைத்த மட்டனை அப்படியே அதனுடன் கொட்டி வதக்கவும்.


நன்கு வதங்கிய பின் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும். மட்டனை நன்றாக வேக வைக்க வேண்டும். மட்டன் நன்றாக வெந்ததும், அதில் வேகவைத்து வடித்த சாதம், வதக்கிய வெங்காயம், புதினா, எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து கலக்கி மூடி தம்மில் வைக்கவும். 20 நிமிடம் கழித்து முந்திரியை நெய்யில் வறுத்து மேலே தூவி பறிமாறினால் சூப்பரான, மற்றும் சுவையான ஹைதராபாத் மட்டன் பிரியாணி ரெடி..