பார்த்த கணமே ஒருவரின் கண்களையும் மனதையும் அலைபாய வைத்து, பசியைத் தூண்டி நாவில் எச்சில் ஊற வைக்கும் உணவுகளில் இந்திய உணவுகள் என்றுமே முதன்மையானவை.


ஆனால் நம் இந்திய உணவுப் பொருள்கள் எவ்வளவு ஆரோக்கியமாக சமைக்கப்படுகின்றன என்பதற்கு இந்த அவசர உலகில் நாம்  பெரும்பாலும் முக்கியத்துவம் தருவதில்லை. குறிப்பாக எந்த எண்ணெய்யில் நம் உணவுப் பொருள்கள் சமைக்கப்படுகின்றன என்பதை நாம் பெரும்பாலும் கண்டுகொள்வதே அல்ல.


கடையில் வாங்கும் உணவாகட்டும், வீட்டு சமையல் ஆகட்டும், ஏற்கனவே சமையலுக்கு பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துவது நமக்கொரு இயல்பான சம்பவம்.


ஏற்கெனவே உணவு பொரித்த எண்ணெயை மீண்டும் சமையலில் பயன்படுத்துவது நமது பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்தும், ஆனால் ஆரோக்கியத்துக்கு பெரும் கேடு விளைவிக்கும்.


இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI (Food Safety and Standards Authority of India)), வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, ஏற்கெனவே பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துவது, உடலில் நச்சு வாயுக்கள் வெளியீட்டை அதிகரிக்கும் என்றும், வீக்கம் மற்றும் நாள்பட்ட நோய்களை உண்டாக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் எண்ணெய்யை மீண்டும் மீண்டும் சூடுபடுத்துவதைத் தவிர்க்கும்படியும், மூன்று முறைக்கு மேல் எண்ணெய்யை மீண்டும் உபயோகப்படுத்துவதைத் தவிர்க்குமாறும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.




இந்நிலையில், ஏற்கெனவே உபயோகித்த சமையல் எண்ணெய்யை மீண்டும் உபயோகிப்பது குறித்து மருத்துவர்கள் கூறுவது என்ன என்று பார்க்கலாம்.


சமையலில் ஏற்கெனவே உபயோகித்த எண்ணெய்யை மீண்டும் பாதுகாப்புடன் உபயோகிப்பது என்பது நாம் என்ன மாதிரியான உணவுப் பொருளை சமைக்கிறோம், எவ்வளவு சூட்டில் சமைக்கிறோம், எவ்வளவு நேரம் சமைக்கிறோம் என்பனவற்றைப் பொறுத்தே அமையும். எனினும் ஏற்கெனவே உபயோகித்த எண்ணெயை மீண்டும் உபயோகிப்பது கீழ்க்கண்ட அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.


ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்:


பொரித்த எண்ணெயை மீண்டும் உபயோகிப்பதால் அதன் வேதியியல் கலவை (chemical composition) மாறி கொழுப்பு அமிலங்களை வெளியிடுகிறது. இதனால் வறுத்த எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துவது உடலில் நச்சுத்தன்மை, கொழுப்புப் படிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.


அஜீரணத்தை அதிகரிக்கும்


சமைத்த எண்ணெய்யில் மீண்டும் உணவுப் பொருள்களை சமைத்து உண்பது, அமிலத்தன்மை, வயிற்று எரிச்சல், தொண்டை பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, உங்களுக்கு வழக்கத்தை விட அதிக நெஞ்சு எரிச்சல், அஜீரணக் கோளாறு ஆகிய பிரச்னைகள் இருந்தால், சாலையோரக் கடை உணவுகளையும், ஜங்க் எனப்படும் குப்பை உணவுகளையும் கட்டாயம் தவிருங்கள்.


கொழுப்பு அதிகரிப்பு


சமைத்த எண்ணெயை மீண்டும் உபயோகிக்கும்போது எண்ணெய்யில் உள்ள டிரான்ஸ் கொழுப்பு அமிலத்தின் அளவு அதிகரிக்கிறது. எண்ணெயில் உள்ள சில கொழுப்புகள் அதிக வெப்பநிலையில் சூடுபடுத்தப்படும் போது டிரான்ஸ் கொழுப்புகளாக மாறுகின்றன. டிரான்ஸ் கொழுப்புகள் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் என்பதால் இருதய நோய் அபாயத்தை இது அதிகரிக்கும். 


புற்றுநோய் அபாயம்


சமைத்த எண்ணெய்யை மீண்டும் சூடாக்குவது, பாலிசைக்ளிக் அரோனா ஹைட்ரோகார்பன்கள் (PAH) மற்றும் ஆல்டிஹைடுகள் போன்ற புற்றுநோயை உண்டாக்கும் பொருள்களின் இருப்பை உடலில் அதிகரிக்கிறது. ஆகவே இனி வரும் காலங்களிலாவது நேரத்தை, பணத்தை மிச்சப்படுத்துவதாக நினைத்து உபயோகித்த எண்ணெய்யை மீண்டும் உபயோகிக்கப்பதைத் தவிர்ப்போம்.