சிப்பிகளைப் பலரும் அதன் சுவைக்காக உண்ணும் வழக்கம் கொண்டிருப்பார்கள். சிலர் அதனைப் பாலியல் நாட்டம் ஏற்படுத்தும் உணவாகக் கருதுவார்கள். சிப்பிகளால் பாலியல் நாட்டம் அதிகரிப்பதாகக் கூறப்படுவது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்ற போதும், அதில் இருக்கும் பல்வேறு சத்துகள் பாலியல் நாட்டத்தை அதிகரிக்க உதவுகின்றன. 


சிப்பிகள் அதிக ஊட்டச்சத்துகளைக் கொண்டிருப்பவை. மேலும், உடலுக்குப் பல்வேறு நலன்களையும் அது வழங்குகிறது. சிப்பிகளைப் பாலியல் நாட்டத்தோடு தொடர்புபடுத்தி பல்வேறு படைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. சிப்பிகள் உண்மையிலேயே பாலியல் நாட்டத்தை அதிகரிக்கின்றனவா என்ற விவாதங்கள் ஒருபக்கம் இருந்தாலும், அதில் உள்ள ஜிங்க் உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் பாலியல் நலனில் பங்காற்றுகின்றன. 


பாலியல் நாட்டத்தை ஆரோக்கியமான உணவுமுறை, ஊட்டச்சத்து கொண்ட உணவுப் பழக்கம் ஆகியவை மூலமாக அதிகரிக்க முடியும். இங்கு பாலியல் நாட்டத்தைத் தூண்டும் உணவுகள் குறித்தும், சிப்பிகள் அத்தகைய உணவுகளா என்பது குறித்தும் பேசியுள்ளோம்.. 



கடந்த 17ஆம் நூற்றாண்டில் புதிய மருந்துகளாகப் பாலியல் நாட்டத்தைத் தூண்டும் உணவுப் பொருள்கள் தனியாக அறிமுகப்படுத்தப்பட்டன. எனினும் கடந்த 2020ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், 1800களில் பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான இந்த வகை உணவுகள் பாலியல் நாட்டத்தைத் தூண்டக்கூடியவை அல்ல எனக் கூறப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளன. 


பாலியல் நாட்டத்தைத் தூண்டும் உணவுகள் மூன்று முக்கிய பணிகளை மேற்கொள்கின்றன. ஆணுறுப்பில் ரத்த ஓட்டத்தைத் துரிதப்படுத்துவதற்காக நைட்ரஸ் ஆக்சைட்டைத் தூண்டுவது, டெஸ்டெஸ்டீரான் ஹார்மோன் சுரப்பதை அதிகரிப்பது, பாலியல் உச்சநிலை ஏற்படும் போது நரம்புகளை மேலும் தூண்டுவது ஆகியவை இந்த உணவுகளால் நிகழ்கின்றன. எனினும், தற்போது மருந்துக் கடைகளில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான மருந்துகள் போதிய அறிவியல் ஆதாரங்களைக் கொண்டவை அல்ல. 


பாலியல் நாட்டத்தைத் தூண்டுவதற்காக மக்கள் மாத்திரைகள், செடிகள், விலங்குகள் ஆகியவற்றில் இருந்து எடுக்கப்பட்ட மருந்துகள் ஆகியவை பலராலும் உட்கொள்ளப்படுகின்றன. எனினும், இவற்றை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவது உடல்நலனுக்குத் தீங்காக அமையும். 



சிப்பிகளில் பல்வேறு ஊட்டச்சத்துகள் பாளியல் நாட்டத்தைத் தூண்டுவதாக அமைந்துள்ளன. சிப்பிகளில் அதிகமாக உள்ள ஜிங்க் சத்துகளின் காரணமாக உடலில் பாலியல் நலன் பாதுகாக்கப்படுகிறது. மேலும் டெஸ்டொஸ்டீரான் அளவு அதிகரிக்கிறது. கூடுதலாக இது கருவுறுதலுக்கு உதவி செய்கிறது. டெஸ்டொஸ்டீரான் என்பதை ஆண்களின் பாலியல் நலனோடு மட்டுமே பொருத்துவது தவறு. சிறிதளவிலான டெஸ்டொஸ்டீரான் பெண்களின் பாலியல் நலனை மேம்படுத்துகிறது. சிப்பிகளில் D-aspartic acid என்ற அமிலம் டெஸ்டொஸ்டீரான் அதிகரிப்பதற்கு உதவி செய்கிறது. மேலும், இதில் உள்ள டோபமைன் காரணமாகவும் பாலியல் நாட்டம் அதிகரிக்கிறது. எனினும், இவை அனைத்துமே இணைந்து, சிப்பிகளால் பாலியல் நாட்டம் அதிகரிக்கிறது என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. 


சிப்பிகள் பாலியல் நாட்டத்தைத் தூண்டுகிறதா இல்லையா என்ற விவாதம் ஒருபக்கம் இருந்தாலும், அவை உடல்நலனுக்கும் ஊட்டச்சத்துக்கும் நலன் அளிக்கக்கூடியதாக இருக்கின்றன. எனவே அதனை உணவுப் பழக்கத்தில் சேர்த்துக் கொள்வது பல்வேறு விதங்களில் நன்மை பயக்கும். எனினும், சிப்பிகளை சமைக்காமல் உண்பது ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.