உருளைக்கிழங்கை கொண்டு செய்யப்படும் ரெசிபிகள் பெரும்பாலும் அனைவருக்கும் பிடித்ததாகவே இருக்கும். உருளைக்கிழங்கின் சுவை மிகுதிதான் இதற்கு காரணம். இப்போது நாம் உருளைக்கிழங்கை கொண்டு எப்படி சுவையான புதினா உருளை கறி செய்வதென்று பார்க்கலாம். இந்த கறி உருளைக்கிழங்கு, புதினா, கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது உள்ளிட்டவற்றை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த கறி காரசாரமாக சுவையாக இருக்கும். இதை பரோட்டா, சப்பாத்தி, நாண் உள்ளிட்டவற்றுடன் வைத்து சாப்பிடலாம். 


தேவையான பொருட்கள் 


4  மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு, 1 கப் புதிய புதினா இலைகள் நறுக்கியது, 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது, 2 தக்காளி அரைத்தது. 2-3 பச்சை மிளகாய் நறுக்கியது,1 தேக்கரண்டி இஞ்சி-பூண்டு விழுது, 1 தேக்கரண்டி சீரகம்,  1 தேக்கரண்டி கடுகு, 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்,  சிவப்பு மிளகாய் தூள் சுவைக்கேற்ப, 1 தேக்கரண்டி கரம் மசாலா, 1/2 தேக்கரண்டி கொத்தமல்லி தூள், சுவைக்கேற்ப உப்பு. 


செய்முறை


1. அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடாக்க வேண்டும். இதில் சீரகம் மற்றும் கடுகு சேர்க்க தாளிக்க வேண்டும்.


2.நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.


3.இஞ்சி-பூண்டு விழுது மற்றும் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.


4. இப்போது தக்காளி கூழ், மசாலா தூள் மற்றும் உப்பு சேர்க்க வேண்டும். எண்ணெய் பிரிந்து வரும் வரை மசாலாவை வேக வைக்க வேண்டும் ( மசாலாவை தீய விடக்கூடாது).


5.உருளைக்கிழங்கு சேர்த்து மசாலாக்களுடன் நன்கு படும்படி கிளறிவிட வேண்டும்.  இதை சுமார் 5 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.


6.உருளைக்கிழங்கை மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்ற வேண்டும். இந்த  கலவையை ஒரு கொதிக்க விட வேண்டும். அடுப்பை குறைவான தீயில் வைத்து மூடி, உருளைக்கிழங்கு மென்மையாகும் வரை (சுமார் 10-12 நிமிடங்கள்) வேக வைக்க வேண்டும்.


7. இப்போது புதினா இலைகள் மற்றும் கரம் மசாலா சேர்த்து, மேலும் 2-3 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். அவ்வளவுதான் சூடான புதினா ஆலூ கறி தயார்.  இதனை சப்பாத்தி, நாண் ஆகியவற்றுடன் பறிமாறினால் சுவையாக இருக்கும்.