கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இந்தி மொழி படித்தால் வேலை கிடைக்கும் என்கிறார்கள். ஆனால் நம் ஊரில் பானிபூரி விற்பவர்கள் இந்தி பேசுபவர்களாகதான் இருக்கிறார்கள் என பேசியது விவாதத்திற்கு உள்ளாகி உள்ளது. தமிழகத்தில் இந்தி திணிப்பு பிரச்சனை எழும்போதெல்லாம், நம்மிடம் இருந்து புறப்படும் எதிர்ப்பு கணைகள் தில்லி செளத் பிளாக்கை தாக்குவதுடன் நின்றுவிடுவதில்லை, தமிழக தெருக்களில் பானிபூரி விற்கும் புலம் பெயர்ந்த வடமாநிலத்தவர்களின் சுயமரியாதையை சற்றேனும் சீண்டி பார்த்த பிறகே அது ஓய்கிறது.


தென்னிந்திய மாநிலங்களில் குறிப்பாக கர்நாடகத்தில் இந்தி மொழிக்கு எதிரான கருத்துக்கள் தற்போதுதான் பரவலாகி உள்ளது. இந்தியாவில் இந்தி திணிப்பை முந்தி செய்த தமிழகத்தின் நாற்சந்தியில் மாலை நேரங்களில் இன்னமும் கூட்டம் முந்தி அடித்து கொண்டிருக்கிறது இந்தி பேசும் தாயகத்தில் இருந்து வந்த பானிபூரிக்காக... 





இந்தி என்றாலே மல்லுக்கட்டும் தமிழகம், பானிபூரியை மார்போடு அணைத்து கொள்வது வியப்பை தந்தாலும் அதில் ஆச்சர்யப்படுவதற்கு எதுவும் இல்லை, இந்தியாவின் நான்கு திசைகளிலும் உள்ள இந்தியர்களின் நாக்கில் தனி சாம்ராஜ்ஜியத்தை கட்டி அமைத்து காரசாரமான ஆட்சியை நடத்தி வருகிறது பானி பூரி. மாலை நேர Chaat  ஐட்டங்களில் இந்தியர்களின் முதல் தேர்வாக பானிபூரி உள்ளது என்பதையே இதற்கு உதாரணமாக கூறலாம்.


மகத நாட்டில் பிறந்த பானிபூரி


இத்தகைய சிறப்பு வாய்ந்த பானிபூரியின் வரலாற்று மேற்கு-மத்திய பீகாரில் உள்ள கங்கை நதிக்கரையில் தொடங்குவதாக கூறுகிறது புராண வரலாறு. மகாபாரத கதைகளில் மகாஜனபந்தங்கள் எனப்பட்ட 16 பெரிய சாம்ராஜ்ஜியங்களின் ஒன்றான மகத நாட்டில்தான் பானிபூரியின் முன்னோடியான புல்கிஸ் தோன்றியதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் இப்பகுதியின் பல பாரம்பரிய சிறப்புகளான சிட்பா, பித்தோ, டில்பா மற்றும் கதர்னி அரிசியின் செவ்டா போன்றவை உருவாகியதாக செவிவழி கதைகளில் சொல்லப்படுகிறது. இதை கண்டுபிடித்த சமையல் மேதைகள் வரலாற்றின் பக்கங்களில் தொலைந்து போய் இருந்தாலும், பானிபூரியை கண்டுபிடித்த சமையல் சிகாமணி மட்டும் யார் என்று இந்தியர்களுக்கு தெரிந்திருந்தால், அந்த நபரை தலைமுறை தலைமுறையாக வாழ்த்த தயங்கி இருக்கமாட்டார்கள் இந்தியர்கள். 


பானிபூரியும் மகாபாரதமும்




உயிருள்ள மனிதர்களோ, உயிரற்ற பொருட்களோ  அது இந்தியர்களின் மனதிற்கு நெருக்கமாகும் பட்சத்தில் அவை மகாபாரதம், ராமாயணம் போன்ற புராண இதிகாசங்களோடு தொடர்புபடுத்தப்படுவது வழக்கம். அதுபோன்ற வரலாறுதான் பானிபூரிக்கும் சொல்லப்படுகிறது. பாண்டவர்களின் சோதனைக்காலமான வனவாசக்காலத்தில் தனது மருமகளான திரௌபதியின் திறமையை சோதிக்க விரும்பினார் குந்திதேவி, குறைந்த தானியங்களும், காய்கறிகளும் மட்டுமே எஞ்சி இருந்த நேரத்தில், பாண்டவர்களின் தாயாரான குந்தி தேவி, கொஞ்சம் உருளைக்கிழங்கு பொரியலையும், பூரி செய்வதற்கான கொஞ்சம் கோதுமை மாவையும் கொடுத்து தனது ஐந்து மகன்களின் பசியை போக்குமாறு திரௌபதிக்கு அறிவுறுத்தினார்.


தனக்கு கொடுக்கப்பட்ட கோதுமை மாவை கொண்டு சிறுசிறு பூரிகளை தயார் செய்து அதனுள் எஞ்சி இருந்த உருளைக் கிழங்கு பொரியலை அடைத்து, காரம் கலந்த தண்ணீரை அதில் ஊற்றி பாண்டவர்களுக்கு உண்ணக் கொடுக்கிறார் திரௌபதி. அதனை சாப்பிட்ட பாண்டவர்களுக்கு பசி ஆறியதாக கூறப்படுகிறது. புதிய மருமகளான திரௌபதி, தனது மாமியாரான குந்தி தேவியின் பாராட்டை பெற பானி பூரி அப்போதே உதவி இருக்கிறது. 


பானி பூரி குறித்து எழுப்பப்படும் பகுத்தறிவு கேள்வி


தென் அமெரிக்காவில் உள்ள ஆண்டிஸ் மற்றும் பெரு பகுதியை பூர்வீகமாக கொண்ட உருளைக்கிழங்கு, கடந்த 300 ஆண்டுகளாக மட்டுமே இந்தியாவில் பயிரிடப்பட்டு வரும் நிலையில் மகாபாரதம் நிகழ்ந்ததாக கூறப்படும் காலத்தில் திரௌபதிக்கு பானிபூரி செய்ய எப்படி உருளைக்கிழங்கு கிடைத்திருக்கும் என்ற கேள்விகள் இன்றளவும் வைக்கப்பட்டே வருகின்றன.  சமையல் வரலாற்று ஆய்வாளர் குருஷ் தலாலின் கூற்றுப்படி உத்தரப்பிரதேசத்தில் ராஜ் கச்சோரி என்னும் உணவு வகையில் இருந்து பானிபூரி தோன்றி இருக்கலாம் எனவும், 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு புலம் பெயர்ந்தவர்களின் மூலம் இந்தியா முழுவதும் பானிபூரி பரவி இருக்கலாம் எனவும் கூறுகிறார். 


ஒரு பானிபூரிக்கு ஒரு டஜன் பெயர்கள் 




இந்த ருசியான மாலை நேர சிற்றுண்டியின் வரலாற்று துல்லியமாக பதிவிடவில்லை என்றாலும் இந்தியா முழுவதும் பரவி ஒரு டஜனுக்கும் மேற்பட்ட பெயர்களால் அழைக்கப்படுகிறது. மத்திய மற்றும் தென்னிந்தியாவில் பானிபூரி என்று அழைக்கப்பட்டாலும், பிராந்தியத்திற்கு ஏற்ப மாறுபடும் செய்முறைகளால் பானிபூரிக்கு வேறு வேறு பெயர்கள் வழங்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் ரக்தா (வெள்ளை பட்டாணி கறி கலந்தது) என்றும், வட இந்தியாவில் சில பகுதிகளில் கோல் கப்பே, குப் சுப், பானி கே படாஷே அல்லது புல்கிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஹோஷங்காபாத்தில், பானி பூரி டிக்கி என்று அழைக்கப்படுகிறது, இது பொதுவாக வட இந்தியாவில் மிருதுவான உருளைக்கிழங்கு பஜ்ஜிகளைக் குறிக்க இந்த சொல் பயன்படுகிறது. மேற்கு வங்காளத்தில், பானி பூரியை ஃபுச்கா என்று அழைக்கிறார்கள், பானிபூரியை வாயில் கடிக்கும் போது  'ஃபுச்' ஒலி எழுவதால் ஃபுச்கா என்ற காரண பெயரை வைத்துள்ளனர் வங்காளிகள். 


உலக அளவிலான நொறுக்குத்தீனி சந்தையில் பிரபலமாக உள்ள இத்தாலியின் பிட்சா, அமெரிக்காவின் பர்கர், சீனாவில் நூடுல்ஸ், ஜப்பானின் மோமோஸ் உள்ளிட்ட நொறுக்குத்தீனி வகைகள் இந்தியர்களின் நாக்கை ஆக்கிரமித்து பானிபூரிக்கு டஃப் கொடுத்து வரும் நிலையிலும் இந்தியாவின் தேசிய நொறுக்குத் தீனிகளில் ஒன்று  பானிபூரி என்றால் அது மிகையல்ல.