ருசியான, புளிப்பும் கசப்புமான மற்றும் காரமான, ஊறுகாய் இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் உணவு வகைகளில் ஒன்றாகும். பருப்பு சாதம், ரசம் சாதம் தொடங்கி சப்பாத்தி, பூரி என சாப்பிடும் எந்த உணவுக்கும் கூடுதல் ருசியேற்றும் திறன் ஊறுகாய்களுக்கு உண்டு. இன்னும் சொல்லப்போனால் ஊறுகாயையே சோற்றில் பிணைந்து கவளம் கவளமாகச் சாப்பிடும் சோற்று விரும்பிகளைக் கொண்ட மண் இது. இந்தியில் இதனை அச்சார் என்பார்கள்.  ஊறுகாய் பல மாறுபாடுகளில் வருகிறது, உதாரணமாக, மாங்காய் ஊறுகாய், எலுமிச்சை ஊறுகாய், பச்சை மிளகாய் ஊறுகாய் மற்றும் பல. மேலும், இந்த ஊறுகாய் ரெசிபிகளில் பெரும்பாலானவை ஊறவைக்க, நொதிக்க நேரம் தேவைப்படுகிறது.
ஆனால் ஊறுகாயை நொதித்தல் இல்லாமல் செய்யலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?  ஆம்! சில நிமிடங்களில் நீங்கள் செய்யக்கூடிய ஊறுகாய் ரெசிபிகளின் பட்டியலை இங்கே தருகிறோம். அவற்றை தயார் செய்வதற்கு 15-20 நிமிடங்கள் போதும். 




மாங்காய் ஊறுகாய்:


மாங்காய் என்றாலே ஆவக்காய்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும் அல்லது மாங்காய் தொக்கு ஞாபகத்துக்கு வரும். இந்த இரண்டும் இல்லாத துண்டு மாங்காய் ஊறுகாய் வகையும் உண்டு. இதைச் செய்ய அதிக பட்சம் 20 நிமிடங்களே ஆகும். காய் பதத்தில் இருக்கும் மாங்காய் ஒன்று, மிளகாய்த்தூள், நல்லெண்ணெய், உப்பு, கடுகு, பெருங்காயம், வறுத்த வெந்தயம் தூள் செய்யப்பட்டது, பச்சை மிளகாய் ஆகியவை இதற்குத் தேவை. மாங்காயை சிறிய துண்டுகளாக நன்கு நறுக்கிக்கொள்ள வேண்டும், பச்சை மிளகாயை குறுக்கில் ஒரு கீரலாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு வானலியில் எண்ணெய் காயவைத்து அதில் கடுகு, பெருங்காயம் சேர்க்கவும், பிறகு நறுக்கிய மாங்காய், மிளகாய்த்தூள் சேர்த்து, கிளறவும், அடுத்து தேவையான அளவு உப்பு, வெந்தயத்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும், மாங்காய் ஊறுகாய் ரெடி!


ஒரு நிமிட வெங்காய ஊறுகாய்:


இது மோர் பண்டங்களுக்குச் சுவையாக இருக்கும். வட்டமாக நறுக்கிய வெங்காயத்துடன், வினிகர் , உப்பு தேவையான அளவு கலந்து ஒரு ஜாடியில் இறுக மூடி வைக்கவும்.


எடைகுறைக்கும் இஞ்சி ஊறுகாய்:


வீட்டில் இஞ்சி நிறைய சேர்ந்துவிட்டதா?, அவற்றை மெல்லிய துண்டுகளாக நறுக்கி, எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு கலந்து ஒரு ஜாடியில் அடைத்து வைக்கலாம். இதனை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள எடை குறைக்க உதவும். 


பச்சைமிளகாய் ஊறுகாய்: 


பச்சை மிளகாய் பிரியர்கள் கவனத்துக்கு, அவற்றை நன்கு கழுவி காயவைத்த எண்ணெயில் வறுத்தெடுத்து சேர்த்து வைத்துக் கொள்ளலாம்.