125 வயதான யோகா பயிற்சியாளர் சுவாமி சிவானந்தா யோகா துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக நேற்று பத்மஸ்ரீ விருது பெற்றார். அவரே நடந்து வந்து, மோடி, ராம்நாத் கோவிந்த் ஆகியோரின் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து அவரே யாருடைய உதவியும் இல்லாமல் எழுந்து விருது வாங்கி சென்றதை யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. மோடி, ராம்நாத் கோவிந்த் ஆகியோர் அதிர்ந்து போய் பார்த்துக்கொண்டிருந்தனர். அந்த அவையில் கூடி இருந்த அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தி கைகள் தட்டினர். குடியரசு தின விழாவை முன்னிட்டு மத்திய அரசு இந்தியாவின் உயரிய விருதுகளான பத்ம விருதுகள் குறித்த பட்டியலை கடந்த ஜனவரி மாதம் 2வது வாரத்தில் வெளியிட்டது.


இந்தாண்டு 128 பேருக்கு பத்ம விருதுக்கு தேர்வு பெற்றுள்ளதாகவும், அதில் 4 பேருக்கு பத்மவிபூஷண் விருதும், பத்ம பூஷண் விருதுக்கு 17 பேரும், பத்மஸ்ரீ விருதுக்கு 107 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் அறிவித்தது. பல்வேறு காரணங்களால், இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று வழங்கினார். இதுகுறித்து ராஷ்டிரபதி பவன் வெளியிட்ட அறிக்கையில், ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் விழாவில், குடியரசுத்தலைவர் 2 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 54 பத்மஸ்ரீ விருதுகளை வழங்குவார் என்றும் மற்ற விருதுகள் வருகிற 28ஆம் தேதி நடைபெறும் விழாவில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.



இன்று குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு பத்ம விருதுகளை வழங்கினார். மறைந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்துக்கு அறிவிக்கப்பட்ட பத்ம விபூசன் விருது அவரது மகள்களிடம் வழங்கப்பட்டது. இதேபோல் 125 வயதான யோகா பயிற்சியாளர் சுவாமி சிவானந்தா யோகா துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக திங்களன்று பத்மஸ்ரீ விருது பெற்றார். சிவானந்தா நாட்டின் வரலாற்றில் பத்ம விருது வென்றவர்களில் மிக வயதானவரான இவர் 'யோக் சேவக்' என்று வர்ணிக்கப்படுகிறார். சில்ஹெட் மாவட்டத்தில் பிறந்த ஸ்வாமி சிவானந்தா மனிதர்களின் நல்வாழ்வுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்து வாழ்கிறார்.


இவர் சிறுவயதில் கடும் வறுமையால், வெறும் கஞ்சி மட்டுமே வாய்க்கப்பட்டு வளர்ந்திருக்கிறார். அவருடைய அம்மா 6 வயதில் இறந்த பிறகு, மேற்கு வங்கத்தில் உள்ள நபாத்வீப்பில் இருக்கும் குருஜி ஆஸ்ரமத்தில் வளர்ந்துள்ளார். குரு ஓம்கார நந்தா கோஸ்வாமி இவரை வளர்த்தது மட்டுமின்றி, ஆன்மிகம் மற்றும் யோகா ஆகியவற்றை கற்பித்துள்ளார். இவர் 125 வயதிலும் இவ்வளவு நடைஉடையாக இருப்பது எப்படி என்றால் அவர் எடுத்துக்கொள்ளும் உணவும், யோகாவும்தான் என்று கூறுகிறார்கள். அவர் அப்படி என்ன உணவு எடுத்துக்கொள்கிறார்? பார்க்கலாம்!







  • அவரது யோகாசனம் தவிர, அவரது உணவுப் பழக்கவழக்கங்கள் நாம் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. அவற்றில் பெரும்பாலானவற்றைப் பின்பற்றுவது எளிதல்ல, ஆனால் இது அவருக்கு நோயற்ற நீண்ட நெடிய வாழ்க்கையை வழங்கிய முக்கியமான விஷயம் ஆகும். ஸ்வாமி சிவானந்தா எப்போதும் எண்ணெய் இல்லாத மற்றும் மசாலா இல்லாத மிகவும் எளிமையான உணவை உண்பதாகக் கூறுகிறார். அவர் அரிசி மற்றும் வேகவைத்த பருப்பு (பருப்பு குண்டு) சாப்பிட விரும்புகிறார்.

  • பால் அல்லது பழங்களை ஆடம்பரமான உணவுகள் என்று நினைத்து சாப்பிடுவதை தவிர்த்து விடுகிறார். "நான் எளிமையான மற்றும் ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்கிறேன். நான் மிகவும் எளிமையாக சாப்பிடுகிறேன், எண்ணெய், மசாலா இல்லாத வேகவைத்த உணவு, அரிசி மற்றும் ஓரிரு பச்சை மிளகாயுடன் வேகவைத்த பருப்பு ஆகியவைதான் என்னுடைய உணவு" என்று அவர் 2016 இல் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.

  • 125 வயதாகியும், அவர் இன்னும் ஆரோக்கியமாகவும், மருத்துவச் சிக்கல்கள் இல்லாமல் இருக்கிறார். அவர் அதிகாலை 3 மணிக்கு எழுந்து அந்த நாளுக்கான வேலைகள் செய்வதாக கூறுகிறார்.