Wood Apple Benefits: விளாம் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் உடலில் பித்தம் சம்மந்தமான அனைத்து பிரச்சனைகளும் குணமாகும். இந்த பழத்தில் வேறு என்ன நன்மைகள் உள்ளது என்பதை விரிவாக பார்க்கலாம்.
ஆங்கிலத்தில் wood apple என அழைக்கப்படும் விளாம்பழம் நமது பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகும். விளாம்பழத்தில் இருக்கும் மருத்துவ குணங்கள் ஏராளம். உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. பார்ப்பதற்கு இளம் பச்சை நிறத்தில் இருக்கும், வெளியே இருக்கும் ஓடு மிகவும் கடினமானது, உள்ளே இருக்கும் பழம் பழுப்பு நிறத்தில் தோன்றும். இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை இருக்கும். இந்த பழம் பழுத்து விட்டதா என்பதை பழத்தை குலுக்கி பார்த்து கண்டுபிடிக்க முடியும். பழம் பழுத்திருந்தால் உள்ளே இருக்கும் சதை பகுதி தனியாக குளுங்கும்.
இந்த பழம் குறிப்பிட்ட சீசனில் மட்டுமே கிடைக்கும் குறிப்பாக பிள்ளையார் சதுர்த்தி பண்டிகை காலத்தில் கிடைக்கும். பெரும்பாலான வீடுகளில் இந்த பழத்தின் நன்மைகள் பற்றி தெரியாமல், எப்படி பயன்படுத்துவது என்பது தெரியாமல் இதனை தவிர்த்து வருகின்றனர். ஆனால் இந்த பழத்தில் இருக்கும் நன்மைகள் என எடுத்துக்கொண்டால் ஏராளம்.
விளாம் பழத்தில் வைட்டமின் பி12, ஏ, சி, இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த பழம் தொடர்ந்து சாப்பிட்டால் எந்த வித நோயும் வராது என்கிறார்கள். பித்தம் அதிகம் இருப்பதால் தலைவலி, வாந்தி, கண்பார்வை மங்கல், வாயில் அதிக உமிழ்நீர் சுரப்பு, வாயில் கசப்பு ஆகியவற்றை குணப்படுத்தும். அஜீரண கோளாறுக்கு சிறந்த மருந்தாகும். தொடர்ந்து இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான எந்த பிரச்சனையும் உடலில் ஏற்படாது.
மேலும் சிறுவர்களுக்கு இதை அடிக்கடி கொடுத்தால் ஆயுட்காலம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வயதானவர்களுக்கு ஏற்படும் எலும்பு முறிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் வராமல் தடுக்கும் என தெரிவிக்கின்றனர்.
விளாம் பழத்தின் பிசினை இரவு தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் வடிகட்டி சாப்பிட்டால் பெண்களுக்கு ஏற்படும் ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் ஆகிய பிரச்சனைகள் தீர உதவும். குழந்தைகளுக்கு தசை வளர்ச்சிக்கும், ஞாபக சக்தியை அதிகரிக்கவும் உதவும் என்கின்றனர். விளாம் பழத்தின் பட்டையை தண்ணீரில் கொதிக்க வைத்து கசாயமாக்கி குடித்தால் வரட்டு இருமல் குறையும். பனங்கற்கண்டுடன் விளாம்பழத்தை சாப்பிட, பித்தக் கோளாறுகளால் உண்டாகும் வாந்தி, தலைச் சுற்றல் தீரும்.
விளாம் பழத்தை துவையல் செய்தும் சாப்பிடலாம். கடாயில் நெய் அல்லது, நல்லெண்ணெய் விட்டு வரமிளகாய், விளாம் பழத்தில் சதை, நாட்டு சக்கரை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வதங்கியதும் அதனை துவையல் பதத்திற்கு அரைக்க வேண்டும். இனிப்பு, புளிப்பு, காரம் என பல சுவைகள் கலந்த இந்த துவையல் தேசை, இட்லி, சுடு சாதத்துடன் சாப்பிடலாம். இது போல் துவையல் செய்து சாப்பிட்டால் வயிறு உப்பசம் ஆகாமல் இருக்கும்.
விளாம் பழத்தின் ஓடு நீக்கி பழத்தை நாட்டுச் சக்கரை அல்லது வெல்லத்துடன் கலந்து தின்பண்டமாக சாப்பிடலாம். இல்லை என்றால் சிறுது பழத்துடன், நாட்டு சக்கரை மற்றும் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு வடிகட்டி தேநீராக குடிக்கலாம். அப்படி குடித்து வந்தால் உடல் சோர்வு, பித்த வாந்தி, மயக்கம் ஆகியவை குணமாகும் என கூறுகின்றனர்.