விடுமுறை தினத்திற்கு அடுத்த நாள் வரும் வேலை நாள் எத்தனை சோம்பலானது என்பதை நாம் அறிவோம். அதிலும் காலையில் சீக்கிரம் எழுந்து உணவுகளை தயார் செய்துவிட்டு அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு புறப்படுவது என்பது சற்று கடினமான காரியம்தான். நாம் பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிக்கன், மட்டன் என அசைவ உணவுகளை அதிகம் ருசிப்போம். நிச்சயம் அது மீதமாகிப் போய்விடும். அப்படி மீதியான சிக்கன் கிரேவியை வைத்து, சிக்கன் சாண்ட்விச், சிக்கன் நூடுல்ஸ், சிக்கன் ரோல் உள்ளிட்டவற்றை செய்து,  சமைக்கும் வேலையை சுலபமாக்குவது குறித்து தான் இங்கு பார்க்க போகின்றோம்.


1. சிக்கன் சாண்ட்விச்:


ஒரு துண்டு சிக்கன் அல்லது இரண்டை நறுக்கி, அதில் சிறிது கிரேவியை சேர்த்து கெட்டியாகும் வரை நன்கு கொதிக்க வைக்கவும். பின்னர் ஒரு துண்டு ரொட்டியை எடுத்து அதன் மீது இந்த கிரேவியை பரப்பி விட வேண்டும்.  அதன் மேல் சிறிது வெள்ளரி, தக்காளி மற்றும் வெங்காயம் சேர்க்கவும். மற்றொரு ரொட்டி துண்டுடன் மூடி, சாண்ட்விச்சை நன்றாக ரோஸ்ட்  செய்ய வேண்டும்.





2. சிக்கன் நூடுல்ஸ்:


சிறிது எண்ணெயைச் சூடாக்கி, நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். அதில், சிக்கன் கிரேவி மற்றும் சில துண்டாக்கப்பட்ட அல்லது நறுக்கிய சிக்கன் துண்டுகளை சேர்க்கவும். நன்கு கலந்து வேகவைத்த நூடுல்ஸ் சேர்த்து ஒன்றாக கிளறவும். உப்பு மற்றும் மிளகு சேர்த்து கிளறி சூடாக பரிமாறவும்.


3. சிக்கன் புலாவ்:


முழு லவங்கப்பட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும் பிரியாணி இலையுடன் சிறிது அரிசியை சேர்த்து வேகவைக்கவும். இந்த சாதத்தை சிக்கன் மற்றும் கிரேவியில் போட்டு சூடாக பரிமாறவும். கூடுதல் சுவைக்காக சிறிது நெய் சேர்க்கலாம். இப்போது சுவையான சிக்கன் புலாவ் தயாராகி விட்டது.


4. சிக்கன் ரோல்:


அதைக் கொண்டு ஸ்ட்ரீட் ஸ்டைல் ​​சிக்கன் ரோலையும் செய்யலாம் தெரியுமா? வழக்கத்தை விட தடிமனாக மிருதுவான பராத்தா தயார் செய்யவும். பிறகு சிறிது சிக்கன் துண்டுகள் மற்றும் கிரேவியை மையத்தில் அந்த பராத்தாவின் மையத்தில் சேர்க்கவும். அதன் மேல் வெள்ளரிக்காய், வெங்காயம், பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்க்க வேண்டும். விரும்பினால்  தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சாஸ்களை சேர்க்க விரும்பினால் சேர்த்துக் கொள்ளலாம். 


சிக்கன் கிரேவியை மீண்டும் பயன்படுத்துவது எப்படி?


சில நேரங்களில் அதிகமாக சிக்கன் கிரேவி செய்யும் போது மீதம் இருக்கும் கிரேவியை என்ன செய்வதென்று தெரியாது. அது போன்ற நேரங்களில் சில முட்டைகளை வேகவைத்து, அவற்றை வறுக்கவும், அதை குழம்பில் சேர்த்தால் சுவையான முட்டைக்கறி தயார். முட்டைகளுக்கு பதில் லேசாக வறுத்த பனீர் க்யூப்ஸையும் சேர்க்கலாம். மேற்கண்ட டிப்ஸ்களை பயன்படுத்தி உங்கள் திங்கட்கிழமையை சுறுசுறுப்பானதாக மாற்றலாம்.