பராம்பரிய நெல் வகைகளில் ஒன்றான மாப்பிள்ளை சம்பா அரிசியில் இரும்புச் சத்தும்,நார்ச்சத்து போன்றவை அதிகளவில் காணப்படுவதால் நோய் எதிர்ப்புச்சக்தி உடையதாக உள்ளது. மேலும் நம்முடைய உணவு முறையில் தொடர்ந்து இதனை பயன்படுத்திவரும் போது இளவட்டக்கல்லைக்கூட தூக்கும் சக்தி இருக்கும் எனக்கூறப்படுகிறது.
இன்றைய நவீன உலகத்திற்கு ஏற்றவாறு மக்களின் உணவு முறைகளும் மாற்றமடைந்துள்ளது. என்ன தான் இயற்கை உணவுகளைத் தான் உட்கொள்ள வேண்டும் என வேளாண் விஞ்ஞானிகள் வலியுறுத்தினாலும் இன்னமும் நம்மில் பலர் இதனை முறையாகப் பின்பற்றவில்லை என்று தான் கூற வேண்டும். இருந்தப்போதும் சிலர் பராம்பரிய உணவு முறைக்கு படிப்படியாக மாறி வருகின்றனர். அப்படி மக்கள் பயன்படுத்தி வரும் உணவு முறைகளில் ஒன்று தான் மாப்பிள்ளை சம்பா.. இந்த பேருக்கு ஏற்றவாறு இதன் வரலாறும் அனைவரையும் கவர்ந்துள்ளது.
ஆம் பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்றான மாப்பிள்ளை சம்பா அரிசியின் பிறப்பிடம் புதுக்கோட்டை மாவட்டம். இந்த நெல் சாகுபடி செய்யும் போது ஒரு மாதத்திற்குத் தண்ணீர் இல்லையென்றாலும் காய்ந்துவிடாது எனவும், தண்ணீர் தேங்கியிருந்தாலும் பயிர் அழுகாது. இப்படி பல எதிர்ப்புச்சக்தியோடு போராடிப் பயிராகும் இந்த மாப்பிள்ளை சம்பா அரிசியில் பல மருத்துவக்குணங்கள் நிறைந்துள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக முன்னோர்கள் காலத்தில் பெண் பார்க்கும் படலம் என்பது மிகவும் பிரபலமானது. பெண்ணை திருமணம் செய்யப்போகும் ஆண்மகன் வலிமையுடைவராக இருக்க வேண்டும் என்பதற்காக காளை அடக்குவது, இளவட்டக்கல் தூக்குவது போன்ற வீர விளையாட்டுக்களைப் பின்பற்றினார்கள். ஆனால் இன்றைய தலைமுறையினர் ஒரு சிறு கல்லைக்கூட நகர்த்த முடியவில்லை என்று தான் கூற வேண்டும். இதற்காகத் தான் மாப்பிள்ளை சம்பா அரிசியை முன்னோர்கள் பயன்படுத்தி வந்ததாகக்கூறப்படுகிறது. பொதுவாக மாப்பிள்ளை சம்பா அரிசியில் சமைத்துச் சாப்பிடுவது மற்றும் அதன் நீராகாரத்தை ஒரு மண்டலம் அதாவது 48 நாள்கள் தொடர்ந்து பருகினால் இளவட்டக்கல்லைத் தூக்கும் அளவிற்கு சக்தி கிடைக்கும் என்று பல இடங்களில் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தெரிவித்துள்ளதைக்கேட்டிருப்போம். மேலும் இளவட்ட கல்லை தூக்கக் கூடிய பலத்தை இந்த ‘சம்பா அரிசி’ கொடுப்பதால் இவற்றுக்கு “மாப்பிள்ளை சம்பா” என்று நம் முன்னோர்கள் பெயரிட்டுள்ளனர்.
மாப்பிள்ளை சம்பா அரிசியின் மருத்துவக்குணங்கள்:
மாப்பிள்ளை சம்பா அரிசியில் இரும்பு சத்தும், துத்தநாக சத்தும், நார்ச்சத்து, உப்பு சத்துக்கள் போன்றவை அதிகளவில் உள்ளது. இது உடலுக்கு நோய் எதிர்ப்புசக்தியை அளிப்பதோடு நீரழிவு நோய்களுக்கும் அருமருந்தாக உள்ளது. நரம்புகளுக்கு வலுசேர்ப்பதோடு, விந்தணுக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க உதவுகிறது. மேலும் மாப்பிள்ளை சம்பா அரிசியில் அயன் மற்றும் துத்தநாகம் அதிகளவில் இருப்பதால், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகள், இயற்கை இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்றவை ஏற்படாமல் தடுக்க முடியும் எனக்கூறப்படுகிறது
- .
எனவே இந்த மாப்பிள்ளை சம்பா அரிசியில் குழந்தைகளுக்குப்பிடித்த சாம்பார் சாதம்,பிரியாணி போன்றவற்றையும் செய்துக்கொடுத்தால் அனைவரும் ருசித்து சாப்பிடுவார்கள். இதோடு நோய் எதிர்ப்புச்சக்தியையும் அதிகரிக்கிறது. எனவே பல்வேறு மருத்துவக்குணங்களைக் கொண்டுள்ள பராம்பரிய வகையான மாப்பிள்ளை சம்பா அரிசியை இனி நீங்களும் உங்கள் எதிர்கால சந்ததியினருக்குக் கொடுக்கப் பழகுங்கள்.