கருப்பு உப்பு என்ற பெயர் கொண்டிருந்தாலும் மக்களிடம் மிகவும் பிரபலமாகியுள்ள இந்துப்பில் சோடியம் குறைவாகவும், பல ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருக்கிறது. இது உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைகிறது.


இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் விதவிதமான உணவு வகைகள் பேமஸா உள்ளது. குறிப்பாக இந்திய உணவுமுறைகள் என்றாலே உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப்பெற்றுள்ளது. இதற்குக்காரணம் அவர்கள் சமைக்கும் ஒவ்வொரு உணவுப்பொருள்களிலும் பலவகையான மருத்துவக்குணங்கள் உள்ளன. மேலும் “உப்பில்லா பண்டம் குப்பையிலே“ என்ற கூற்றுக்கேற்ப எந்த உணவிற்கு எவ்வளவு உப்பு போட்டால் நமக்கு சுவை தரும் என பார்த்து பார்த்து சமையல் செய்வோம். ஆனால் நம் உணவில் அளவுக்கு அதிகமாக உப்பைச்சேர்த்தால் தேவையில்லாத பிரச்சனைகளைத் தான் நாம் சந்திக்க நேரிடும்.





சமீப காலங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு உப்பு சத்து அதிகமாகி பலர் டயாலிசிஸ் செய்துவருகின்றனர். இதற்கு நம்முடைய உணவில் சேர்க்கப்படும் உப்பு காரணமாக இருப்பதாகக் கூறப்பட்டு வந்த நிலையில் தான், இந்துப்பின் பயன்பாடு மக்களிடம் அதிகரித்துவருவதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பொதுவாக டேபிள் சால்ட் என்ற தூள் உப்பில் சோடியம் அதிகளவில் உள்ளது. எனவே அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது மக்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர்.


ஆனால் தற்போது மக்களிடம் பிரபலமாகிவரும்  கருப்பு உப்பு என அழைக்கப்படும் இந்து உப்பில் லிப்பிடுகள், என்சைம்கள், குறைவான சோடியம் மற்றும் மினரல்கள் அதிகளவில் உள்ளது. இரும்பு சத்து  மற்றும் கனிமங்களும் அதிகளவில் உள்ளது.  எனவே இதனை நம்முடைய சமையலில் பயன்படுத்தத் தொடங்கும் போது நம் உடலுக்குத் தேவையான அளவு சத்துக்கள் கிடைக்கிறது. மேலும் இதில் சோடியம் குறைவாக இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களும் இதனைப்பயன்படுத்தலாம். ஆனால் அளவுக்கு மீறி பயன்படுத்தும் போது இரத்த அழுத்தம் அதிகமாகக்கூடிய வாய்ப்பளிக்கும். எனவே உடலுக்கு நன்மையளிக்கும் என்பதால் அளவுக்கு மீறியும் இதனைப்பயன்படுத்தாமல் அளவோடு பயன்படுத்த வேண்டும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.


இதுமட்டுமில்லாமல் இந்து உப்பு பயன்படுத்தும் போது பல்வேறு நோய்களுக்குத் தீர்வாக அமைகிறது எனவும் கூறப்படுகிறது. குறிப்பாக வயிறு உப்பிசம், வாயு பிரச்சனை, செரிமானப்பிரச்சனை போன்றவற்றைக்குணமாக்குகிறது. இந்து உப்பில் உள்ள லிப்பிடுகள் மற்றும் என்சைம்கள் நமது உடல் எடையைக்குறைப்பதற்கு உதவியாக உள்ளது.





மேலும் இந்து உப்பில் இருக்கும் மினரல்கள் முடி வளர்ச்சி மற்றும் சருமப்பராமரிப்பிற்கு உதவியாக உள்ளது. நன்கு முடி வளர்வதோடு பொடுகு மற்றும் முடி உதிர்வதையும் இந்து உப்பு தடுக்கிறது. இதோடு சருமப்புத்துணர்ச்சிக்கும் உதவுகிறது. ஆனால் இன்னும் இதற்கான ஆய்வுகள் நடைபெற்றுவருவதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இருந்தப்போது தினசரி இந்த உப்பை உணவில் சேர்த்துக்கொள்ளும் போது உடலுக்கு நல்ல பலனை அளிக்கிறது.  கருப்பு உப்பு , மக்களிடம் இமாலயன் உப்பு, இந்து உப்பு என அறியப்பட்டுள்ளது.  நமக்கு முன்பு கிடைத்ததுப்போல் பராம்பரிமான உப்பு  தற்போது கிடைக்கவில்லை. அதற்குப்பதில் சிந்தடிக் வெரைட்டியில் இளஞ்சிவப்பு நிறத்தில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.