இந்திய குறிப்பாக தென்னிந்திய காலை உணவு வழக்கமாக இட்லி, தோசை என்று அரிசி மாவு சார்ந்ததாகவே மாறிவிட்டது. செய்வது சுலபம் என்று இதற்குப் பெரும்பாலானோர் காரணம் சொல்கின்றனர். ஆனால் உண்மையில் சிறுதானியங்களும் செய்வதற்கு எளிதானவை தான். அதுவும் குறிப்பாக கேழ்வரகு பல்வேறு நன்மைகளையும் உடலுக்குச் சேர்க்கக் கூடியது. கேழ்வரகு புரத சத்து மற்றும் கால்சியம் சத்து நிறைந்த உணவு. குறைந்த கலோரி இருப்பதால், உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் அனைவரும் இதை காலை உணவாக எடுத்து கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகள் இந்த உணவை எடுத்து கொள்வதால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். மிகவும் எளிமையான, சீக்கிரம் செரிமானம் ஆக கூடிய உணவாக இருக்கிறது. தூக்கம் வராமல் நாளை புத்துணர்வுடன் ஆரம்பிக்க இந்த கேழ்வரகு சிறந்த தேர்வு கேழ்வரகில் இருக்கும் கால்சியம் சத்து எலும்புகள் அடர்த்தியாக இருப்பதற்கும், மூட்டு வலிகள் வராமல் தடுக்கும். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக வரும் வலிகள் குறையும். எப்போதும் எடுத்து கொள்ளும், இட்லி, தோசைக்கு பதில், சிறந்த மாற்றாக இருக்கும்.


கேழ்வரகில் களி, கூழ் எனப்பலவிதமான உணவுகளை சமைக்கலாம். கேழ்வரகு தோசை செய்முறையை உங்களுடன் பகிர்கிறோம்.


தேவையான பொருட்கள்:


கேப்பை மாவு: 1 கப்
குடை மிளகாய்: 1 ( பொடியாக நறுக்கியது)
கேரட்: 1 ( இதை விரும்பினால் சேர்க்கலாம்)
பச்சை மிளகாய்: 1 முதல் 2 வரை
தக்காளி நறுக்கியது: 1
பச்சை கொத்தமல்லி: 2 முதல் 3 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய பெரிய வெங்காயம்: 1
க்ரீன் ஆனியன்: கால் கப்
சாட் மசாலா: அரை டீஸ்பூன்
எண்ணெய்: தேவையான அளவு
உப்பு: தேவையான அளவு


செய்முறை:
 
ராகி தோசி செய்ய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கேரட், குடை மிளகாய் ஆகியனவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர் இவற்றை ஒரு பாத்திரத்தில் கொட்டவும். அத்துடன் அரை கப் கேழ்வரகு மாவு சேர்க்கவும். சாட் மசாலா, உப்பையும் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கட்டிவிழாமல் மாவை தோசை மாவு பதத்திற்கு கலக்கிக் கொள்ளவும்.


இப்போது தோசை தவாவை அடுப்பில் வைத்து தீயை மிதமான அளவில் வைக்கவும். பேனில் கொஞ்சம் எண்ணெய் தேய்த்துக் கொள்ளவும். இப்போது கேப்பை மாவை பேனில் தோசை போல் வார்த்தெடுக்கவும். அதன்மீது விரும்பினால் இன்னும் கொஞ்சம் வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம். இப்போது தோசையை சுற்றி எண்ணெய் ஊற்றவும். அதேபோல் அடுத்தபக்கமும் தோசையை திருப்பிப் போட்டு வேக வைக்கவும். கேழ்வரகு தோசை தயார். இப்போது இதனை மல்லி சட்னி, தேங்காய் சட்னி அல்லது காரசாரமான கோங்குரா சட்னியுடன் கூட சாப்பிடலாம். 


கோங்குரா சட்னி:


தேவையான பொருட்கள்


புளிச்ச கீரை – ஒரு கட்டு
புளி –சிறிய
பூண்டு – 15 பல்
மிளகாய் தூள் – 1 டீ ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
வெந்தயம் – 1/4 டீ ஸ்பூன்
தனியா (விதை) – 1 டீ ஸ்பூன்
கடுகு – 1 டீ ஸ்பூன்
சீரகம் – 1/2 டீ ஸ்பூன்
பெருங்காயம் – சிறிதளவு
மஞ்சள் தூள் – 1/4 டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 கப்


செய்முறை:


புளிச்ச கீரையை கழுவி பொடியாக நறுக்கி காயவைக்கவும். அதன் பின்னர் புளியை கழுவிவிட்டு சிறிதளவு வெந்நீர் விட்டு ஊறவைக்த்துக்கொள்ளவும்.
வெந்தயம் மற்றும் தனியாவை எண்ணெயில்லாமல் வறுத்து, அவை ஆறிய பின் மிக்சியில் இட்டு நொறுநொறுப்பாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
புளி தண்ணீர் மற்றும் பூண்டை ஒன்றாக அரைத்து வைக்கவும்.
ஒரு பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கீரையை இட்டு அதில் உள்ள நீர் வற்றும் வரை நன்றாக வதக்கவும்.
கொஞ்சம் எண்ணை ஊற்றி கடுகு, சீரகம், மீதமுள்ள பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் பெருங்காயம், மஞ்சள் தூள், காய்ந்த மிளகாய் ஆகிவற்றை சேர்த்து முன்னர் வதக்கியுள்ள கீரையோடு சேர்க்கவும்.
இதனுடன் அரைத்துவைத்துள்ள பொடி, மிளகாய் தூள் உப்பு மற்றும் புளி கலவையை சேர்க்கவும். 
நன்றாக கிளறினால் நாம் விரும்பிய கோங்குரா சட்னி தயார். 
கோங்கரா சட்னியுடன் சாதம், தோசை, இட்லி, பனியாரம் என அனைத்தையும் சேர்த்து சாப்பிடலாம்.