ஒவ்வொரு ஊரிலும் உள்ள பேருந்து நிலையம் அல்லது ரயில் நிலையத்தைச் சுற்றிய பகுதிகளில் எப்பொழுதுமே மக்கள் பெரும் கூட்டமாக நடமாடிய வண்ணம் இருப்பார்கள், இந்தப் பகுதிகள் பெரும் விளக்கொளியில் ஜொலிக்கும். வெளியூரில் இருந்து வருபவர்கள், வெளியூருக்கு செல்பவர்கள் என இருசாராரும் இடைத்தீனிகளை வாங்குவது வழக்கம். பொதுவாக இந்தப் பகுதிகளில் அந்த ஊரின் முக்கிய இனிப்பு பலகாரக் கடைகள் அமைந்திருக்கும். மதுரையில் ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தால் அனைவரையும் சுடச்சுட அல்வாவுடன் வரவேற்பது பிரேம விலாஸ் கடை தான். இன்று இடைத்தீனிக் கடைகள் பல்கிப் பெருகி விட்டன. பெரிய சுற்றுலாத் தளங்கள், பூங்காக்கள் தொடங்கி குடியிருப்புப் பகுதிகள் என திரும்பிய திசை எல்லாம் இடைத்தீனிக் கடைகள் மக்களின் அன்றாடத்தின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. கோவையின் எள்ளு உருண்டை, இடிச்ச வேர்க்கடலை உருண்டை, கடலை கருப்பட்டி உதிரிகளுடன் பயணத்தைத் தொடங்கலாம். கோவை ஒரு பெரும் இடைத்தீனியின் ஊர், ஒரு ஊர் சுறுசுறுப்பாக இயங்க தேநீர் கடைகள், நொறுக்குத் தீனிக் கடைகள் ஏராளமாக வேண்டும், கோவையில் திரும்பிய பக்கம் எல்லாம் தேநீர் கடைகள், பேக்கரிகள் என களை கட்டும். மதுரையில் டீக் கடைகள் என்றால் ரோட்டில் நின்றபடி குடிப்போம் ஆனால் கோவைக்குச் சென்ற போது பெரும்பாலான தேநீர் கடைகளில் அமர்ந்து சாப்பிடுவதும் அமர்ந்ததும் நொறுக்குத்தீனிகள் ஆர்டர் எடுக்கப்படுவதையும் பார்த்தேன். என்ன தான் வைராக்கியமாக ஒரு சாயா போதும் என்று ஆர்டர் சொன்னாலும் கண நேரத்தில் முட்டைப் பப்ஸின் வாடை வந்து உங்களை ஆட்கொண்டு விடும், பிறகு கதை எப்பொழுதும் ஒரு பப்ஸுடன் முடிவதில்லை.
கோவையின் இனிப்புக் கடைகள் உண்மையாகவே வெளிச்சத்தில் ஜொலிக்கும். அன்னப்பூர்ணா, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், சூர்யா ஸ்வீட்ஸ், நெல்லை லாலா ஸ்வீட்ஸ், அகர்வால் ஸ்வீட் பேலஸ், டெல்லி வாலா, கண்ணன் மோகன் ஸ்வீட் ஸ்டால், ஸ்ரீ முருகன் ஸ்வீட்ஸ். நெல்லை முத்து விலாஸ், ஏ-1 சிப்ஸ், ஜெ.எம் பேக்ஸ், பேக்கர்ஸ் கார்னர், கே.ஆர்.பேக்ஸ், அரோமா பேக்கரி, கேபிகே பேக்கர்ஸ் என திரும்பிய பக்கம் எல்லாம் பலகார வாசம் தான். அன்னப்பூர்னா சோன் பப்டி, சாக்லேட் பர்பி, அத்திப் பழ அல்வா, பேடா சாக்லேட், ஸ்பாஞ்ச் அல்வா, ராஜ்போஹ் என்பவை என் சாய்ஸ், நான் அன்னப்பூர்னா மசால் கடலையின் ரசிகன். கோவை அகர்வால்ஸ் ஸ்வீட்ஸ் கடை ஒரு இனிப்புக் கடல். அங்கே குறைந்தது 200 வகை இனிப்புகள் அணிவகுத்து நிற்கும். கோவைப் அகர்வாலில் காஜு கத்லி, தீபா ஸ்வீட்ஸ் - சிறிய ஜிலேபி, அவல் மிக்சர், மகாவீர் கடையின் சமோசா என கோவையில் ருசிக்கு ஒரு அளவேயில்லை. கோவை பகுதி முழுவதும் கிளைகளுடன் ஆரோக்கிய இடைத்தீனிகளை நொறுக்ஸ் என்கிற கடை வழங்கி வருகிறது. கோவையில் கிடைக்கும் கசகசா அல்வாவை தவறவிட வேண்டாம். ஊட்டி வர்க்கி, குட்டி போண்டா என அப்படி கொஞ்சம் இந்தப் பகுதிக்குள் சென்றால் ஊத்துக்குளி நெய் பிஸ்கட், ஊட்டி வர்க்கி, தேங்காய் மிட்டாய், கிணத்துக்கடவு நிலக்கடலை தட்டை, காரமடை கை முறுக்கு என இந்தப் பகுதி முழுவதும் விதவிதமான இடைதீனிகள் உங்கள் வருகைக்காக காத்திருக்கும்.
சேலம் என்றாலே அது தட்டு வடை செட்டு, தயிர் வடை, முட்டை மசால் பூரி என பரபரப்பாக இருக்கும். சேலம் குப்தா ஸ்வீட்ஸ் ஒரு இனிப்பு உலகம். அவர்களிடம் காஜு கத்லி தொடங்கி ஏராளமான இனிப்பு வகைகளும் அதே நேரம் மாலையில் சாட் ஐட்டங்கள் மிகுந்த சுவையுடன் கிடைக்கும். கரூர் என்றாலே கரம், ஈரோடு என்றாலே தயிர் கடலை மசால், அதை முடித்து விட்டு மதுரம் கூல் ட்ரிங்ஸ்-ல் ஒரு சர்பத் வாங்கி மறக்காமல் குடிக்கவும். பரங்கிப்பேட்டை பாதாம் அல்வா, கள்ளக்குறிச்சி சின்ன வெங்காய முருக்கு, குளித்தலை ஓலை பக்கோடா, மணப்பாறை முறுக்கு, காரைக்கால் குலாப் ஜாமூன் - பருத்தி அல்வா, நாகூர் இறால் வடா, நாகப்பட்டினம் ஜெ.மு சாமி அல்வா கடை, நீட்டாமங்கலம் பால் திரட்டு, கூத்தாநல்லூர் தம்ரூட் என தமிழகத்தில்தான் எத்தனை எத்தனை தனித்துவம் வாய்ந்த பலகாரங்கள். தஞ்சாவூர் பாம்பே ஸ்வீட்ஸ் சந்திர கலா, சூரிய கலா, தஞ்சாவூர் சுருள் அப்பம்- ஸ்பெசல் நீர் உருண்டை - கேசரி மாஸ் எல்லாம் மிக முக்கியமான பண்டங்கள். திருச்சி யானை மார்க் பெரிய பூந்தி, திருவையாறு அசோகா, தூள் பக்கோடா சாப்பிடுவது ஒரு அனுபவம். கும்பகோணம் முராரீ ஸ்வீட்ஸ் இனிப்பு வகைகளுடன் அங்கே கிடைக்கும் தவளை வடையையும் கல்யாணமுருங்கை பூரியையும் ஒரு டிகிரி காபியுடன் நிறைவு செய்யவும். கொஞ்சம் வடக்கே சென்றால் பாண்டிச்சேரி மீன் வடைகள், இறால் வடைகள், மட்டன் கைமா சமோசாக்கள் உங்கள் வருகைக்காகக் காத்திருக்கும்.
கீழக்கரை ஒரு இடைத்தீனி ஊர். அங்கே துதல், ஓட்டு மாவு, கலகலா, பனியம், தண்ணீர் பனியம், அச்சு பனியம், வெள்ளாரியாரம், பொரிக்கச்சட்டி, வட்டலப்பம் உள்ளிட்ட வித்தியாசமான பெயர்களைக் கொண்ட உணவுப் பலகாரங்கள். துதல், பனியம், வட்டலப்பத்தை எப்படி விவரித்து எழுதுவது என்று யோசித்துப் பார்க்கிறேன் முடியவில்லை, இவை எல்லாம் சாப்பிட்டு மட்டுமே உணர முடிகிற பண்டங்கள். அதிலும் கீழக்கரையில் பனை வெல்லத்தில் செய்யப்படுகிற வட்டலப்பம் ஒரு அல்டிமேட் பலகாரம். கீழக்கரையில் கடல்பாசியில் பல அழகிய, உடல் நலப் பண்டங்கள் செய்கிறார்கள். ஆம்பூரில் மக்கன் பேடா மற்றும் பிர்னி, ஷாஜி பிர்னி எனும் முகலாய இனிப்புகள் நல்ல ருசியில் கிடைக்கும். காவேரிப்பட்டிணம் ஜமுனா பால்கோவா ஒரு அவசியம் சாப்பிட வேண்டிய மிகுந்த ருசியான இனிப்பு.
உக்காரை என்பது ஒரு புதுமையான செய்முறையுடைய இனிப்புப் பண்டம், இதனை நான் வந்தவாசியில் சமணர்களின் வீடுகளில் தான் முதல் முதலில் சாப்பிட்டேன், அளவான இனிப்புடன் மிகவும் நன்றாக இருந்தது. ஆனால் இதே பண்டம் இதே செய்முறையில் செட்டிநாட்டு பகுதியிலும் கிடைக்கிறது. மெல்ல மெல்ல இவர்களின் பண்டங்களை ஆராயத் தொடங்கினேன். கடலைப் பருப்பு அரிசியில் செய்யப்படுகிற உக்காளி, அரிசி துவரம் பருப்பில் செய்யப்படுகிற வெள்ளை பூரி, அரிசிக் குருணையில் செய்யப்படுகிற மோர் களி, தோசை மாவு அரைத்தவுடன் ஜீரா சேர்த்து உடனடியாக செய்கிற சொய்யம், பால் கொழுக்கட்டை, பாயாசம், பூசணிக்காய் தோல், செள செள தோலில் செய்யப்படுகிற துவையல்கள், போலி, அதிரசம், கார வடை என தமிழ் சமணர்களின் பண்டங்கள் அனைத்தும் அப்படியே செட்டிநாட்டு பலகாரங்களுடன் கச்சிதமாக ஒத்துள்ளது என்பது மட்டுமின்றி, அவர்களின் பல செய்முறைகளுமே கச்சிதமான ஒற்றுமையுடன் உள்ளது. ஒரே வேற்றுமை தான் சமணர்கள் சுத்த சைவ உணவுப் (Pure Veg)பழக்கம் உடையவர்கள், செட்டிநாட்டவர்கள் (Pure Non Veg) உணவுப் பழக்கம் உடையவர்கள். இருப்பினும் இவர்களின் தொடர்புகள் பற்றி இன்னும் துள்ளியமாக இனவரையியல் ஆய்வாளார்கள் ஆராய வேண்டிய ஒரு பகுதியாகவே உள்ளது. உணவு என்பது உணவு மட்டும் அல்ல அதற்குள் இன்னும் நுட்பமாக பல்வேறு அடுக்குகளில் ஏராளமான நுணுக்கமான வாழ்வியல் முறைகளுடன் இடம்பெயர்வுகளின் வரலாறும் பொதிந்துள்ளது. ஆக உணவைச் சுவைக்கும் போது நீங்கள் வரலாற்றையும் சேர்த்து தான் சுவைக்கிறீர்கள் என்பதை அடுத்த வேளை உண்ணும் போது நினைத்துக் கொள்ளுங்கள்.
கொலபசி உணவுத்தொடரின் மற்ற பகுதிகளை சுவைக்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்