ஆரோக்கியமான உணவுக்கு கீரை மிகவும் அவசியமானது. ஊட்டச்சத்து நிபுணர்களும், மருத்துவர்களும், தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் என பரிந்துரைப்பார்கள். உடலுக்கு தேவையான சத்துக்கள் கீரைகளில் நிறைந்திருப்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதை தாராளமாக எடுத்து கொள்ளலாம். ஆனால், குழந்தைகளுக்கும் சிலருக்கும் கீரை பிடிக்காமல் இருக்கலாம். குறிப்பாக குழந்தைகள் கீரை சாப்பிடுவதை தவிர்க்கலாம். அவர்களுக்கு வித்தியாசமான முறையில் கீரையை செய்து கொடுக்கலாம். கீரையை எப்போதும் கடையலாகவோ அல்லது பொரியலாகவோ செய்து சாப்பிட்டவர்கள் வித்யாசமாக கீரையை சாப்பிட விரும்பினால் இந்த ரெசிபியை டிரை பண்ணலாம். 


கீரை சைவ ஈரல் பிரட்டல் செய்ய தேவையான பொருட்கள்:


ஏதேனும் வகை ஒரு கீரை(சிறு கீரை அல்லது அரைக்கீரை), மஞ்சள் தூள், கரம் மசாலா பொடி, தனி மிளகாய் தூள், சோடா உப்பு, கடலை மாவு, எண்ணெய், சீரகம், வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி, மிளகாய் தூள் கறிவேப்பிலை கொத்தமள்ளி, உப்பு. 


செய்முறை:


முதலில் கீரையை நன்றாக நீரில் அலசி எடுத்து கொண்டு அதை மிக்சி ஜாரில் போட்டு நைசாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். அரைத்து வைத்துள்ள கீரையில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், தேவைக்கு ஏற்ப கரம் மசாலாப்பொடி மற்றும் தனி மிளகாய் தூள் சேர்க்க வேண்டும். ஒரு சிட்டிகை சோடா உப்பு, 5 டியூஸ்பூன் கடலை மாவு மற்றும் தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு நன்றாக கலக்கி வைத்து கொள்ள வேண்டும். 


பிறகு ஒரு தட்டு அல்லது பாத்திரத்தில் எண்ணெய் தடவி அதில் கீரை கரைசலை ஊற்றி, இட்லி பாத்திரத்தில் தண்ணீரில் வைத்து அதில் கீரை வைத்திருக்கும் பாத்திரத்தை வைத்து நன்றாக மூட வேண்டும். இட்லி வேக வைப்பது போன்று கீரை வெந்ததும், அதை எடுத்து ஈரல் போன்று சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். 




பின்னர் கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் விட வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் சீரகம், நறுக்கி வைத்த பெரிய வெங்காயம் ஒன்று, 3 கீறிய பச்சை மிளகாயை போட்டு வதக்க வேண்டும். பிறகு இஞ்சிப்பூண்டு விழுந்து சேர்த்து வதங்கியதுடம், நைசாக அரைத்து வைத்துள்ள இரண்டு தக்காளியையும் அதனுடன் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர்,  அந்த கலவையில் மஞ்சள் தூள், மிளகாய் பொடி, மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து, 2 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். மிளகாய் பொடி வாசம் போனதும், ஈரல் போன்று நறுக்கி வைத்துள்ள கீரை துண்டுகளை அந்த கலவையில் போட்டு பிரட்டி விட வேண்டும். 


இரண்டு நிமிடங்கள் அந்த மசாலாவில் கீரை வேக வைக்க வேண்டும். பின்னர் கீரை பிரட்டல் முடிந்ததும், அதன் மேலே கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தூவி இறக்கி விட வேண்டும். இந்த கீரை சைவ ஈரல் பிரட்டலை சாம்பார், ரசம் சாதங்களுக்கும், சப்பாத்திக்கும் சைட்டிஷாக சேர்த்து கொள்ளலாம்.