தேவையான பொருட்கள்


மைதா - 1கப், கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன் , தயிர் - 1 கப் , சர்க்கரை - 1 கப் , தண்ணீர் - 4 கப்,  குங்குமப்பூ - 4-5 , பழ உப்பு (ஃப்ளேவர் உப்பு - தேவைக்கேற்ப, குங்குமப்பூ கலர் பொடி - சிறிதளவு,  நெய் - 1 கப். 


செய்முறை


ஒரு பாத்திரத்தில், மைதா மாவு, கடலை மாவு மற்றும் தயிர் சேர்த்து நன்றாக தண்ணீர் விட்டு கட்டியில்லாமல் கரைத்துக்கொள்ள வேண்டும். மாவு கெட்டியான பதத்தில் இருக்க வேண்டும். இதை 10 நிமிடங்கள் அப்படியே வைத்து விட வேண்டும்.


அதே நேரத்தில் சர்க்கரை பாகை தயாரிக்க வேண்டும். அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் சர்க்கரையை சேர்க்க வேண்டும். அதனுடன் உடனடியாக தண்ணீர் சேர்க்க வேண்டும். சர்க்கரை முழுவதும் கரையும் வரை காய்ச்சி 3-5 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.


இப்போது குங்குமப் பூ மற்றும் கலர் பொடியை அதனுடன் சேர்த்து நன்றாக கிளறி இறக்கி ஓரமாக வைத்து விட வேண்டும்.


கலந்து வைத்துள்ள மாவை எடுத்து அதில் பழ உப்பு சேர்த்து கலக்கி, நன்றாக அடித்து( Beat) கொள்ளவும்.


ஒரு கடாயில் ஜிலேபியை பொரித்தெடுக்க தேவையான அளவு எண்ணெய் சேர்க்க வேண்டும்


எண்ணெய் சூடானதும், ஜிலேபி செய்ய பயன்படும் பைப்பிங் பேக் அல்லது ஒரு கவரில் மாவை விட்டு சூடான எண்ணெய்யில் ஜிலேபியை சுற்றி விட வேண்டும். சுத்து முறுக்கு வடிவத்தில் ஒன்றுடன் ஒன்று ஒட்டாத வண்ணம் தள்ளி தள்ளி பிழிய வேண்டும். ( ஜிலேபி வேகும் வரை பொறுமையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் பதம் மாறிவிடும்.)


இரண்டு பக்கமும் பொன்னிறமாக மாறும் வரை கவனமாக திருப்பிப்போட்டு பொரிக்க வேண்டும். ஜிலேபி சரியான பதத்திற்கு வெந்து வந்ததும், காய்ச்சி வைத்துள்ள சர்க்கரை பாகில் 30 விநாடிகள் ஊறவைக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான ஜிலேபி தயார். இதை நீங்கள் சுவைத்து மகிழலாம். 


குறிப்பு


சர்க்கரை பாகு செய்ய அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தீயை மிதமாக வைக்க வேண்டும். இரண்டு பங்கு சர்க்கரைக்கு ஒரு பங்கு தண்ணீர் சேர்க்க வேண்டும். சர்க்கரை கொதித்து நுறை வர ஆரம்பித்ததும் ஒரு நிமிடம் கிளறிவிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். பின் கால்பாகம் அளவு தண்ணீரில் உள்ள ஒரு டம்ளர் அல்லது கிண்ணத்தில் ஒரு சொட்டு பாகை விட்டுப்பார்க்க வேண்டும். சர்க்கரை தண்ணீரில் கரைந்துவிட்டால் பாகு பதம் வரவில்லை என்று அர்த்தம். அது கரையாமல் தண்ணீருக்கு அடியில் சென்று ஒரு முத்துப்போல் நின்று விட்டால் பாகு கூடிவிட்டது என்று அர்த்தம்.