இத்தாலிய உணவான பாஸ்தா பலரும் ஃபேவரைட் உணவாக ஆகிவிட்டது. பீட்சா எப்படியோ அப்படியே பாஸ்தாவும் கோ-டு உணவாகிவிட்டது. பெரும்பாலும் பாஸ்தா மைதா மாவில்தான் தயாரிக்கப்படுவதால் அது ஆரோக்கியமில்லை என்று சொல்லப்படுகிறது. ஏனெனில். மைதா என்பது நன்கு சுத்திகரிக்கப்பட்ட சத்துக்கள் நீக்கப்பட்ட உணவு; அதில் உடலுக்குத் தேவையான சத்துக்கள் இல்லை என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். கோதுமை, மக்காச்சோளம், சிவப்பு அரிசி ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படும் பாஸ்தாவில் செய்யப்படும் உணவுகளை தேர்வு செய்யலாம். அடிக்கடி சாப்பிடாமல் அளவோடு சாப்பிடுவது நல்லது. இதோடு காய்கறி, இறைச்சி, முட்டை, காளான் என  சேர்த்து சாப்பிடுவதும் கொஞ்சம் நல்லது. பனீர் பாஸ்தா செய்முறையை காணலாம்.


 பனீர் பாஸ்தா


தேவையான பொருட்கள்


பென்னே பாஸ்தா (Penne Pasta) - ஒரு கப்


பனீர் பாஸ்தா - ஒரு கப்


சிகப்பு, மஞ்சள், பச்சை குடைமிளகாய் - ஒரு கப்


நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்

பொடியாக நறுக்கிய பூண்டு - ஒரு ஸ்பூன்


பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு ஸ்பூன்


 வெங்காயத்தாள் - சிறிதளவு


வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்


சீஸ் -  சிறிதளவு


சோய் சாஸ் - ஒரு ஸ்பூன் பூ


பச்சை மிளகாய் - இரண்டு


எண்ணெய் - 2 ஸ்பூன்


உப்பு - தேவையான அளவு


செய்முறை: 


கொதிக்கும் தண்ணீரில்  எண்ணெய், உப்பு பென்னே பாஸ்தாவை போட்டு நன்றாக வெந்ததும் வடிக்கட்டி எடுத்துகொள்ளவும். (5 நிமிடங்களில் பாஸ்தா வெந்துவிடும்.) அடுப்பில் மிதமான தீயில் வாணலி வைத்து அதில் மூன்று டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து நறுக்கிய பனீர் துண்டுகளை கொட்டி ரோஸ்ட் செய்து தனியே எடுக்கவும். 


அதே வாணலியில் இரண்டு டேபிஸ் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். இதோடு, சதுர வடிவில் நறுக்கிய வெங்காயம், பச்சை, மஞ்சள், சிகப்பு குடைமிளகாய் ஆகிவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். சோய்,  சேர்த்து 5-10 நிமிடங்கள் வரை வதக்கவும். காய்கறி நன்றாக வதங்கியதும் ரோஸ்ட் செய்த பனீர், வேகவைத்த பாஸ்தா சேர்த்து நன்றாக கிளறி சீஸ், வெங்காயத்தாள் சேர்த்து இறக்கினால் சுட சுட சீஸ் பனீர் பாஸ்தா ரெடி. இதே செய்முறையில், காளான், இறால் உள்ளிட்டவை சேர்த்தும் செய்தால் ருசியாக இருக்கும்.


பாஸ்தாவை வேக வைக்க டிப்ஸ்:



  • பாஸ்தா ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, வேக வைக்கும்போது இதை ஃபாலோ பண்ணுங்க. தண்ணீர் நன்றாக கொதித்ததும் அதில் பாஸ்தாவை சேர்க்க வேண்டும். கூடவே தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு எண்ணெய் சேர்ப்பது பரிந்துரைக்கப்படுகிறது. 

  • பாஸ்தாவை 7 நிமிடங்களுக்கு மேல் வேக வைக்கக் கூடாது. அப்படி செய்தால் குழைந்துவிடும்; ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளும். அதனாலேயே தண்ணீர் நன்றாக கொதிநிலை வந்ததும் பாஸ்தாவை சேர்க்க வேண்டும். 

  • 7 அல்லது அதிகபட்சமாக 8 நிமிடங்களில் பாஸ்தாவை அடுப்பிலிருந்து இறக்கி வடிகட்டி வேண்டும். பின்னர் அதை ஒரு நீள ட்ரேயில் கொட்டி அதன் மீது ஒன்றிரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கிளறி பரப்பிவிடவும். இது பாஸ்தா ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் பார்த்துக் கொள்ளும். எல்லா வகையான பாஸ்தாவையும் இப்படி வேக வைக்கலாம்.

  • பாஸ்தா செய்யும்போது வொயிட் சாஸ், ரெட் சாஸ் வீட்டிலேயே தயாரிக்கலாம். பரங்கிக்காய் வேக வைத்து  மசித்தால் பாஸ்தாவிற்கான சாஸ் தயார். இது சத்து நிறைந்ததும் கூட. சாஸ் தனியாக, பாஸ்தா தனியாக வேக வைப்பது இல்லாமல் ஒரே பாத்திரத்திலும் செய்யலாம்.