நாம் அனுதினமும் உணவில் சேர்த்துக்கொள்ளும் வெள்ளை சர்க்கரையில் மாட்டின் எலும்புகள் பயன்படுத்தப்படுகிறதாம். நாம் சாப்பிட கூடிய அதிகப்படியான உணவு வகைகளில் சர்க்கரை என்பது பெரும்பாலும் சேர்க்கப்படுகிறது. குறிப்பாக வெள்ளை சர்க்கரை என்பது இவற்றில் பெரிதும் பயன்படுத்த கூடிய ஒன்றாகும். அதே போன்று வீடுகளிலும் வெள்ளை சர்க்கரையை பெரிதும் பயன்படுத்தி வருகிறோம். இதனால் பல இனிப்பு பிரியர்களுக்கு வெள்ளை சர்க்கரை பழக்கத்தை விடமுடிவதில்லை.
விலங்கு எலும்பு கரியிலிருந்து வெள்ளை சர்க்கரை பளபளப்பான வெள்ளை நிறத்தைப் பெறுகிறது என்று கூறப்படுகுறது. நம் வீடுகளில் நாம் பயன்படுத்தும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை பொதுவாக வெள்ளை நிறத்தில் தோற்றமளிக்க விலங்குகளின் எலும்பு கரியுடன் தயாரிக்கப்படுகிறதாம். ஆனால், அனைத்து பிராண்டுகளும் எலும்பு கரியைப் பயன்படுத்துவதில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் பெரும்பாலும் வெள்ளை சர்க்கரையில் விலங்கு கரி காணப்படுகிறது.
ஏன் எலும்பு கரி பயன்படுத்தப்படுகிறது?
சர்க்கரை சுத்திகரிப்பில் சில நிலைகள் உள்ளன. அதில் ஒன்றுதான், விலங்கு கரி பயன்படுத்துதல். அதாவது விலங்குகளின் எலும்பைக் கொண்டு இது சுத்திகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அது எப்படி என்றால், விலங்குகளின் எலும்பை எரித்து அதன் மூலம் கரி உருவாக்கப்படுகிறது. அதன் பெயர்தான் எலும்பு கரி. அதன் மூலம் கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் சர்க்கரை சுத்திகரிக்கப்படுகின்றன.
சர்க்கரை மேலும் பளபளப்பாக, வெள்ளையாக காட்டப்படுவதற்காக இது செய்யப்படுகிறது என்று கூறுகிறார்கள். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, அர்ஜெண்டினா ஆகிய நாடுகளில் இருந்து இதற்காக மாட்டின் எலும்புகள் மூலம் செய்யப்படும் இயற்கை கரிகள் உலகம் முழுவதும் உள்ள சர்க்கரை தொழிற்சாலைகளுக்கு ஏற்றுமதிப் செய்யப்படுகின்றனவாம்.
இது எந்தெந்த தொழிற்சாலைகளில் பயன்படுத்தப் படுகிறது என்று கண்டறிவது மிகவும் கடினமான ஒன்று. அதனை தாங்களே முன்வந்து ஒப்புக்கொள்ளவேண்டும் என்று எல்லா சர்க்கரை நிறுவனங்களிடமும் கேட்கப்பட்டுள்ளது. இருப்பினும் மேரிலாண்டை சேர்ந்த சைவ வள அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, ஒரு சுத்திகரிப்பு ஆலை சுமார் 7,800 மாடுகளை இதற்காக பயன்படுத்துகின்றனர் என்று கூறுகிறார்கள்.
எது வெஜிட்டேரியன் சர்க்கரை?
கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகள் தெளிவான வெள்ளை நிறத்தை அடைய எலும்பு கரி தேவைப்படுவதால், பெரும்பாலான சுத்திகரிக்கப்பட்ட கரும்பு சர்க்கரைகள் வீகன்களுக்கு பொருந்தாது. பழுப்பு நிறத்தை அடைவதற்கு சுத்திகரிக்கப்பட்ட கரும்புச் சர்க்கரையுடன் வெல்லப்பாகுகளைச் சேர்ப்பதன் மூலம் உருவாக்கப்படும் சில வகையான பிரவுன் சர்க்கரைகளில் கூட சில வகைகள் எலும்பு கரிகளை பயன்படுத்துகிறார்கள். அதுபோக விலங்கு கரிகள் என்று அழைக்கப்படும் இயற்கை கரிகள் எரித்து கரியாக்கிய பிறகு அசைவம் இல்லை, சைவம்தான் என்றும் கூறுகிறார்கள். ஆனால் விலங்குகளை கொல்லும் எதையும் உண்ணாத வீகன்களுக்கு அது உகந்தது அல்ல.
வீகன்கள் என்னதான் பயன்படுத்துவது?
இப்போது சில நிறுவனங்கள் தங்களது சர்க்கரையில் எலும்பு கரி பயன்படுத்துவது இல்லை என்று சான்றிதழ் பெற்றுள்ளனர். வீகன்கள் அவற்றை வாங்கி பயன்படுத்தலாம், அல்லது இதற்கு மாற்றாக கரும்பு சர்கரை இல்லாமல், பீட் சர்க்கரை பயன்படுத்தலாம். பீட் சர்க்கரை சுத்திகரிப்புக்கு விலங்கு கரி தேவைப்படுவதில்லை.