காலை உணவை ஒரு ராஜாவைப் போல் சாப்பிடுங்கள் என்று சொல்வார்கள். ஏன் தெரியுமா அந்த சாப்பாடும் அதில் கிடைக்கும் ஊட்டச்சத்தும் தான் நமது ஆரோக்கியத்தை. நம் நாளை நாம் எவ்வளவு சுறுசுறுப்பாக எதிர்கொள்ளப் போகிறோம் என்பதை நிர்ணயிக்கிறது.


இந்த காலை உணவு தான் நமது உடலுக்கு தேவையான சக்திகளை உற்பத்தி செய்ய உதவுகிறது. நமது உடல் தனக்கு தானே ரீசார்ஜ் செய்து கொள்ள இந்த ஊட்டச்சத்து உணவு மிகவும் அவசியம். இந்த அவசர காலத்தில் நிறைய மக்கள் தங்கள் காலை உணவை உண்பதே கிடையாது.


ஆகையால் ஆரோக்கியமான உடலுக்கு காலை உணவு மிகவும் அவசியம். ஆனால் காலை உணவாக என்ன சாப்பிடலாம் என்ற சந்தேகம் எல்லோருக்குமே இருக்கும். எளிமையாக சொல்ல வேண்டுமானால் காலை உணவு நம் மண்ணின் உணவாக இருக்க வேண்டும். நம் ஊரில் நிலவும் தட்பவெப்பத்துக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். இது அடிப்படை. இதைத் தாண்டி சில பண்புகள் அவசியமாகிறது. அதில் ஒன்று காலை உணவில் கொழுப்பின் அவசியம்.


காலையில் கொழுப்பு நிறைந்த உணவை சாப்பிடுவது பற்றி ஊட்டச்சத்து நிபுணர் ராஷி சவுத்ரி கூறியதாவது:


1. உங்களுக்கு இரிடபிள் போவல் சிண்ட்ரோம் என்ற மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் உங்கள் காலை உணவில் முதல் உணவாக ஒரு டேபிள்ஸ்பூன் நல்ல கொழுப்பு இருப்பது நன்மை தரும். 
 
2. உங்களுக்கு சீரற்ற மாதவிடாய் பிரச்சனை இருக்கிறதா? அப்படியென்றால் உங்கள் காலை உணவில் கார்ப், காய்கறிகள், புரதம் அத்துடன் கொழுப்பு இருப்பதை உறுதி செய்யுங்கள். அதாவது ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்ஸ் கிடைப்பதை உறுதி செய்யுங்கள்.
 
3. காலையில் உணவில் கொழுப்புச் சத்து இருந்தால் அது மூளை மந்த நிலையை நீக்கும். சுறுசுறுப்புடன் உடலும் உள்ளமும் இயங்க வழிவகுக்கும்.






4. நீங்கள் காலை எழும்போதே பசியுடன் எழுந்தால் கார்போஹைட்ரேட்ஸ் நிறைந்த உணவுக்குப் பதில் புரதமும், கொழுப்பும் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.  


5. கொழுப்புகள் இல்லாத காலை உணவு என்பது அதிக அளவு சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும். கொழுப்புகள் செரிமான செயல்முறையை மெதுவாக்க உதவுகின்றன. இது இறுதியில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதை குறைக்கிறது. குறைந்த அளவு உட்கொள்ளும் போது கொழுப்புகள் தீங்கு விளைவிப்பதில்லை. கொழுப்பை அதிகமாக உட்கொள்வது இன்சுலின் எதிர்ப்புக்கு வழிவகுக்கும். இன்சுலின் எதிர்ப்பு என்பது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் ஒரு நிலை.


6. காலையில் சில நாட்களுக்கு காபிக்கு பதில் ஏதேனும் மூலிகை பானம் உட்கொள்ளலாம். கொழுப்பு கிடைக்கும் முறையை மாற்றிக் கொண்டே இருப்பது நல்லது.


 7. நெய், முட்டை போன்றவை கொழுப்புக்கான நல்ல ஆதாரமாக இருக்கும். இத்துடன் மஞ்சள், மிளகு சேர்த்து அருந்தினால் அட்டகாசமாக இருக்கும்.


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.