இட்லியை ஆரோக்கியமான உணவுன்னு சர்வதேச அளவில் சர்டிஃபை பண்ணியிருந்தாலும் கூட காலையில் குழந்தைகளை இட்லி சாப்பிட வைப்பது கொஞ்சம் சிரமம் தான். அதனால் தான் மினி இட்லி, பொடி இட்லி, ரவா இட்லி, கலர்கலரா இருக்கட்டுமேன்னு பீட்ரூட் சாறு, கேரட் ஜூஸ் கலந்த இட்லின்னு கொடுத்தாலும் பிள்ளைங்களை 1, 2 தடவைக்கு மேலே இட்லி சாப்பிட வைக்க முடியலை என்பது தாய்மார்களின் அங்கலாய்ப்பு. அதைவிட சிரமம் என்னான்னா எல்லோரைப் போலவும் 8 மணி நேரம் ஆஃபீஸில் பிஸியாக இருந்துவிட்டு பெண்கள் வீட்டுக்கு வந்ததும் இன்னொரு அவதாரம் எடுத்தே ஆக வேண்டிய சூழல். கிச்சன்ல போய் ஒவ்வொருத்தருக்கா தோசை சுட்டா பொழுது போயிடும். கால் பழுதாயிடும். அதுக்குதான் இந்த இட்லி பாஸ்தா ரெசிபியை நாங்க உங்களுக்கு ரெக்கமண்ட் பண்றோம்.


இட்லி பாஸ்தாவுக்கு தேவையான பொருட்கள்:


12 இட்லி, 1 கப் வெங்காயம் (பொடியாக நறுக்கியது), 1 கப் குடைமிளகாய், 1 கப் தக்காளி, 1 மேசைக்கரண்டி எண்ணெய், ஒரு தேக்கரண்டி பெருங்காயம், ஒரு தேக்கரண்டி ஜீரகம் மற்றும் ஒரு தேக்கரண்டி உப்பு, அரை தேக்கரண்டி சிவப்பு மிளகாய்ப் பொடி, 1 சிவப்பு மிளகாய், 1 தேக்கரண்டி வினிகர் மற்றும் 1 மேஜைக் கரண்டி சோயா சாஸ், 2 மேஜைக்கரண்டி பாஸ்தா சாஸ்.


செய்முறை:


இட்லியை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு அடி ஆழமான கடாயில் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். அதில் கொஞ்சம் சீரகம் சேர்க்கவும். அது பொரிந்ததும் காய்கறி சேர்க்கவும். பின்னர் அதனை நன்றாக வதக்கவும். பின்னர் வெங்காயம் தக்காளி குடை மிளகாய் உப்பு மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். பச்சை வாடை போன பின்னர் சிறு துண்டுகளாக வெட்டிய பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், வினிகர், பாஸ்தா சாஸ், சோய் சாஸ் ஆகியனவற்றை சேர்க்கவும். இவை எல்லாம் நன்றாக மிக்ஸ் ஆன பின்னர் அதில் இட்லியை சேர்க்கவும். இட்லி மசாலாவில் நன்றாக கலந்துவிட வேண்டும். பின்னர் அடுப்பில் இருந்து இறக்கி கொத்தமல்லி தூவி பறிமாறலாம்.



இட்லியில் இவ்வளவு விஷயமா?


இட்லி தமிழ்நாட்டில் அதிகம் உண்ணப்படும் உணவு என்றாலும் உலகம் முழுவதுமே இட்லி பிரபலமான உணவாக உள்ளது. குழந்தை முதல் முதியவர் வரை நோயாளிகள் உள்பட அனைவருக்கும் உகந்த உணவு இட்லி.


தென்னிந்திய உணவான இட்லியானது அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை ஊற வைத்து அரைத்து நொதிக்கச் செய்து பின் வேக வைத்து சாப்பிடுவதால், இதில் கார்ப்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் அதிகம் உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாகவும், க்ளுட்டன் இல்லாமலும் உள்ளது. இட்லி மாவை நொதிக்க வைக்கும் முறையினால், அதில் புரதங்களின் இருப்புத்தன்மை அதிகமாகும் மற்றும் வைட்டமின் பி சத்தின் அளவு மேம்பட்டு இருக்கும்.


புரோபயாட்டிக் சத்தை கொண்டிருக்கிறது. இயற்கையாகவே மாவை புளிக்க வைத்து குடலில் நல்ல பாக்டீரியாக்களை மேம்படுத்துகிறது. உலக சுகாதார நிறுவனம் இட்லியை சத்துள்ள உணவாக பரிந்துரைத்துள்ளது. ஊட்டச்சத்து உணவுகள் குறித்த அமைப்புகள் பலவும் இட்லியை சிறந்த உணவாக பரிந்துரை செய்துள்ளது. முழுமையான காலை உணவாக இட்லியை சொல்கிறது.


ஒரு இட்லியில் கலோரிகள் 65, புரதம் 2 கிராம், நார்ச்சத்து 2 கிராம், கார்போஹைட்ரேட் 8 கிராம் உள்ளது. இதில் கொழுப்புச்சத்து இல்லை.இட்லி மிக மிக அற்புதமான உணவு. ஆனால் எப்போது இட்லி மாவை வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தும் போது. அவசரக்காலங்களில் எப்போதாவது வெளி இடங்களில் கிடைக்கும் இட்லி மாவை வாங்கி பயன்படுத்தலாம். வீட்டில் தயாரிக்கும் போதுதான் அது புளிக்க எந்தவிதமான கெமிக்கலும் சேர்க்காமல் தயாரிப்போம்.