ஆண்டுதோறும் மே 6 ஆம் தேதி சர்வதேச நோ டயட் தினம் அனுசரிக்கப்படுகிறது. கட்டுப்பாடான உணவு முறைகள் இன்றி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதே இதன் முதன்மை நோக்கமாகும். இந்த நாள் தனிநபர்களை சுவையான உணவுகளை இழந்ததாகவோ அல்லது அவற்றை உட்கொள்வதில் இருந்து கட்டுப்படுத்தப்பட்டதாகவோ உணராமல், நீண்ட காலத்திற்கு நிலையான ஆரோக்கியமான பழக்கங்களைக் கடைப்பிடிக்க ஊக்குவிக்கிறது. அதுமட்டுமின்றி பாடி ஷேமிங் எனப்படும் உடல் தோற்றத்தை வைத்து கேலி செய்யும் வழக்கத்திற்கு எதிராகவும் பேசுகிறது இந்த நாள்.


எதற்காக இந்த நாள்?


ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பது என்பது ஒரு குறிப்பிட்ட உடல் வடிவம் அல்லது உடல் அளவை அடைவது அல்ல, ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தும் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதுதான் என்பதை சர்வதேச உணவுக் கட்டுப்பாடு தினம் நினைவூட்டுகிறது. இது 'சுய அன்பு, சுய மதிப்பீட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.


உடல், உணர்ச்சி மற்றும் மன ஆரோக்கியத்திற்கு அவசியமான சுய-கவனிப்பை பயிற்சி செய்ய மக்களை ஊக்குவிக்கிறது. இந்த நாள் கட்டுப்பாடான உணவுமுறைகளின் எதிர்மறையான தாக்கத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் நிலையான மற்றும் மகிழ்ச்சிகரமான ஆரோக்கியமான பழக்கங்களை பின்பற்றுவதற்கு மக்களை ஊக்குவிக்கின்றது.



ஏன் கொண்டாட வேண்டும்?


இந்த நாளைக் கொண்டாடுவதன் முதன்மை நோக்கம், "சரியான" உடல் அளவு அல்லது வடிவம் என்ற ஒன்று இல்லை என்பதை மக்கள் உணர வேண்டும் என்பதற்கு உதவுவதாகும். சமச்சீர் உணவைப் பராமரிப்பதன் முக்கியத்துவம், எடை இழப்பு அறுவை சிகிச்சை மற்றும் டயட் முறைப்படி உண்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து எல்லோருக்கும் கற்பிக்கப்பட வேண்டும். கடைசியாக, டயட்டில் ஈடுபடாமல் உடல் எடையை குறைக்க விரும்பினால், அதற்கான சில பயனுள்ள உதவிக்குறிப்புகள் இங்கே.


முழு கவனத்துடன் சாப்பிடுங்கள்


நீங்கள் சாப்பிடும் போது வேறெதையும் பற்றி கவலைப்படாமல், நினைக்காமல், கவனச்சிதறல்களைக் குறைப்பது முக்கியம், இதனால் உங்கள் உணவின் சுவைகளை நீங்கள் அதிகமாக அனுபவிக்க முடியும். இதற்கு உதாரணம் ஒரு பாடலை கேட்டுக்கொண்டிருக்கும்போது இடையில் நமது சிந்தனை எங்காவது சென்றுவிடும், மீண்டும் திரும்பும்போது, அந்த பாடலில் நமக்கு மிகவும் பிடித்த பகுதி கடந்து போயிருக்கும். உடனே மீண்டும் முதலில் இருந்து கேட்போம். பாடலுக்கு மீண்டும் கேட்பது சரி, ஆனால் உணவின் சுவையை உணராமல் வேறு சிந்தனையில் சாப்பிட்டுவிட்டால் மீண்டும் அதிகமாக சாப்பிடத்தான் தோன்றும். இது எடை அதிகரிப்புக்கு வழி வகுக்கும். 


தொடர்புடைய செய்திகள்: The Kerala Story Review: நீண்ட நெடிய வெறுப்பு பிரச்சாரம்... ஆதாரமற்ற வாட்ஸப் ஃபார்வட் மெசேஜ்களின் தொகுப்பு... தி கேரளா ஸ்டோரி விமர்சனம்!


என்ன சாப்பிடுகிறீர்கள்?


நீங்கள் சாப்பிடும் உணவைப் பற்றிய பதிவை வைத்திருப்பது உணவுப் பழக்கத்தைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள உதவும். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள், எப்போது சாப்பிடுகிறீர்கள், எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதைக் கண்காணிக்கலாம். நீங்கள் மாற்ற வேண்டிய அதிகப்படியான உணவு அல்லது ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களை அடையாளம் காண இது உங்களுக்கு உதவும்.


தண்ணீர் நிறைய குடிக்கவும்


நிறைய தண்ணீர் குடிப்பதன் மூலம் வயிறு நிறைந்துவிட்டதாக உணரலாம், அதனால் அதிகமாக சாப்பிடுவதைக் குறைக்கலாம். இது உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும், உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். வேகமான மற்றும் இயற்கையான எடை இழப்புக்கு, ஒரு நாளைக்கு குறைந்தது 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க முயற்சிக்கவும்.



போதுமான அளவு உறக்கம்


தூக்கமின்மை உங்கள் வளர்சிதை மாற்றத்தைத் தொந்தரவு செய்து உங்கள் பசி ஹார்மோன்களை அதிகரிக்கும். ஒரு நல்ல இரவு தூக்கம் வெற்றிகரமான எடை இழப்புக்கு முக்கியமாகும் என்று ஆய்வு காட்டுகிறது. எனவே, இரவில் குறைந்தது 7-8 மணிநேரம் தூங்குவதை நோக்கமாகக் கொள்ளுங்கள்.


தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்


வழக்கமான உடற்பயிற்சி கலோரிகளை எரிக்கவும், தசைகளை உருவாக்கவும், உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். விறுவிறுப்பான நடைபயிற்சி, ஜாகிங் அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்ற ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய முயற்சிக்கவும்.


பதப்படுத்தப்பட்ட உணவைத் தவிர்க்கவும்


உணவை கவனமாகத் தேர்ந்தெடுப்பது, அதிக நேரம் உண்பதற்கான வாய்ப்புகளைக் குறைத்து, நீண்ட நேரம் நிறைவாக உணர உதவும். மீன், இறைச்சி, காய்கறிகள், பழங்கள், கொட்டைகள், விதைகள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற முழு உணவுகளையும் சாப்பிடுவது சிறந்த தேர்வாகும், ஏனெனில் இந்த உணவுகள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை விட ஊட்டமளிக்கும் உணவாக இருக்கும். இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் ஆரோக்கியமாக இருக்கவும் உதவும்.


உணவு அளவு கட்டுப்பாடு


சாப்பிடும் உணவு அளவைக் குறைக்க, மிகச் சிறந்த வழிகளில் ஒன்று, சாப்பிடும் போது சிறிய தட்டுகள் மற்றும் கிண்ணங்களைப் பயன்படுத்துவது. சிறிய பாத்திரங்களைப் பயன்படுத்துவது உணவின் அளவைக் குறைக்கவும், அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கவும் உதவும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. நாள் முழுவதும் கொஞ்சமாக, அடிக்கடி உணவை உட்கொள்வது ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும், உங்கள் வளர்சிதை மாற்றத்தை உகந்ததாக வைத்திருக்கவும் உதவும்.