சர்வதேச மாம்பழத் திருவிழா 2023 இன் இனிமையான சந்தர்ப்பத்தில், உலகின் எல்லா பகுதியிலிருந்தும் மாம்பழப் பிரியர்கள் குதூகலம் அடைகிறார்கள். இந்த திருவிழா மாம்பழத்தின் சுவை, வண்ணம் மற்றும் நறுமணத்தில் திளைப்பதற்கென்றே அர்ப்பணிக்கப்பட்ட ஒரு திருவிழா ஆகும். ருசியான அல்போன்சா முதல் கசப்பான கென்ட் மாம்பழம் வரை, ஒவ்வொரு மாம்பழமும் ஒவ்வொரு சுவையை நமக்கு தருகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விலையில் கிடைக்கின்றன. இவற்றை அள்ளி அனுபவிக்க மாம்பழ ரசிகர்கள் விரும்புகின்றனர்.
டெல்லியில் 32வது மாம்பழத் திருவிழா
மாம்பழத்தை பழச்சாறாக, மில்க் ஷேக்காக, சாலடாக எப்படி சாப்பிடுபவராக இருந்தாலும், அதனை முழுமையாக அனுபவிக்க இந்த சர்வதேச மாம்பழத் திருவிழா சரியான வாய்ப்பாகும். தற்போது ஜனக்புரியில் உள்ள டில்லி ஹாட்டில் 32வது மாம்பழத் திருவிழா நடந்து வருகிறது. ஜூலை 9 ஆம் தேதி முடிவடையும் நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட மாம்பழங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
மாம்பழத் திருவிழா வரலாறு
சர்வதேச மாம்பழத் திருவிழா, 1987 ஆம் ஆண்டு முதல் இந்திய தேசிய தோட்டக்கலை வாரியத்தால் கொண்டாடப்பட்டு வருகிறது. மாம்பழத்தைக் கொண்டாட வேண்டும் என்ற தெளிவான யோசனையை வாரியம் கொண்டிருந்தது. அன்றிலிருந்து, நாடு முழுவதும் உள்ள மாம்பழப் பிரியர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இது ஒரு வருடாந்திர பாரம்பரியமாக மாறிவிட்டது. பரபரப்பான மாம்பழச் சந்தைகள், துடிப்பான மாம்பழக் கண்காட்சிகள் மற்றும் ஏராளமான பழ வகைகள் இந்த திருவிழாவின் போது பார்வையாளர்களுக்காகக் காத்திருக்கின்றன.
மாம்பழத் திருவிழாவின் முக்கியத்துவம்
மாம்பழத்தின் சுவை ஒருபுறம் இருக்கும் நிலையில், அது பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய இந்தியாவின் கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய புராணங்கள் மற்றும் இலக்கியங்களில், மாம்பழம் பெரும்பாலும் காதல் மற்றும் செழிப்புடன் தொடர்பு கொண்டுள்ளதாக காட்சிப்படுத்தப் படுகிறது. இந்திய பண்டிகைகள் மற்றும் சடங்குகளில் மாம்பழம் ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. இத்தகைய வளமான கலாச்சார தொடர்புகள் இருப்பதால், சர்வதேச மாம்பழத் திருவிழா இவ்வளவு பெரிய கொண்டாட்டமாக மாறியதில் ஆச்சரியமில்லை.
மாம்பழத் திருவிழா கொண்டாட்டம்
சர்வதேச மாம்பழத் திருவிழா ஆண்டுதோறும் பலரால் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. மாம்பழ சந்தைகள் அமைக்கப்பட்டு, பிரபலமான அல்போன்சா முதல் அதிகம் அறியப்படாத உள்ளூர் வகைகள் வரை பல்வேறு வகையான மாம்பழங்களைக் காட்சிப்படுத்துகின்றன. பார்வையாளர்கள் பல்வேறு மாம்பழ வகைகளின் இனிப்பு மற்றும் செழுமையை ருசித்து, மாம்பழத்தை கொண்டாடுவார்கள். இசை மற்றும் நடனம் உள்ளிட்ட கலாச்சார நிகழ்ச்சிகள், நிகழ்த்தப்படும். மாம்பழ விவசாயம் தொடர்பான விஷயங்கள், மாம்பழத்தால் உருவாகும் வணிகப் பொருட்கள் ஆகியவையும் காட்சிப்படுத்தப்படும்.