ஆண்டுதோறும் ஏப்ரல் 4 ஆம் தேதி சர்வதேச கேரட் தினம் கொண்டாடப்படுகிறது. காய்கறி சந்தைக்கு சென்றால் தவறாமல் நாம் வாங்கும் காய்கறியில் ஒன்று கேரட். மழையோ, வெயிலோ, குளிரோ எந்த காலத்திலும் கிடைக்கும் கேரட் அதன் நிறம், இனிப்பு சுவை, உடல் நலத்திற்கு சேர்க்கும் நன்மைகள், செய்யக்கூடிய விதவிதமான பதார்த்தங்களின் எண்ணிக்கை ஆகியனவற்றிற்காகவே மக்களால் அதிகம் விரும்பப்படுகிறது.


கேரட்டை ஜேம் செய்யலாம், சேலட்களில் சேர்க்கலாம், ஜூஸ் போடலாம், பொறியல் பண்ணலாம், முகத்திற்கு பேஸ் மாஸ்காகப் போடலாம், கேக் செய்யலாம், இறைச்சி வகைகளுடன் சேர்த்து சமைக்கலாம். இன்னும் எத்தனை எத்தனை வகையில் பயன்படுத்தலாம். இதனால்தான் அது மக்கள் அபிமானம் பெற்ற காய்கறிகளில் ஒன்றாக இருக்கிறது.இத்தனை சிறப்புமிக்க கேரட்டை கொண்டாடத்தான் ஆண்டுதோறும் ஏப்ரல் 4 ஆம் தேதி சர்வதேச கேரட் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.


சர்வதேச கேரட் தின பின்னணி?


சர்வதேச கேரட் தின பின்னணி சுவாரஸ்யமானது. 2003 ஆம் ஆண்டு தான் முதன்முதலில் கேரட்டை கொண்டாடுவதற்கு வருடாந்திர நிகழ்வு நடத்தப்பட்டது. ஃப்ரான்ஸ், இத்தாலி, ஸ்வீடன், ரஷ்யா, ஆஸ்திரேலியா, ஜப்பான், பிரிட்டன் ஆகிய நாடுகளிலும் சர்வதேச கேரட் தினம் கொண்டாடப்படுகிறடு. கோடையிலும், இலையுதிர் காலத்திலும் தான் கேரட் அதிகமாக விளையும் என்றாலும் கூட இது உலகின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக எல்லா பருவ காலங்களிலும் அறுவடை செய்யப்படுகிறது.  


உலகளவில் 85 சதவீத கேரட் கலிஃபோர்னியாவில் தான் உற்பத்தியாகிறது. நாம் அனைவரும் பரவலாக கேரட் செடியின் கீழ் வளரும் டேப் ரூட் வகையைச் சேர்ந்த கேரட்டை தான் சாப்பிடுகிறோம். ஆனால் கேரட்டுக்கு மேல் உள்ள கீரையும் சத்து நிறைந்ததுதான். பலரும் இதனை சாலட் வகைகளில் பயன்படுத்துகின்றனர். பரவலாக கேரட் ஆரஞ்சு நிறத்தில் மட்டுமே இருந்தாலும் கூட சில பிரதேசங்களில் கேரட் பர்ப்பிள், சிவப்பு, பேஸ்டில் மஞ்சள் நிறங்களிலும் விளைகிறது. 


கேரட் தினத்திற்கு கேரட் சாப்பிடலாம், கேரட் செடி நடலாம், கேரட் பார்ட்டி நடத்தலாம். எப்படியேனும் கேரட் பற்றிய விழிப்புணர்வை இன்னும் அதிகமாக மக்களிடம் கொண்டு செல்லலாம்.


கேரட்டில் இத்தனை நன்மைகளா?


கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும். அதில் உள்ள நார்ச்சத்து நன்மை அளிக்கக்கூடிய கிருமிகளை உருவாக்குகிறது. ரத்தத்தில் இருக்கும் கொழுப்பைக் குறைக்க உதவும் : இதயப் பிரச்னைகள் இரத்தக் கொழுப்பு அதிகரிப்பால் ஏற்படக்கூடியது. கேரட்டை அதிகமாக சாப்பிட்டால் இரத்தக் கொழுப்பு குறையும்.


ஆனாலும் அளவு முக்கியம்..


கேரட்டில் அதிகமான சத்துக்கள் அடங்கியுள்ளன. அதனால் நாம் அதை தவறாமல் சாப்பிடுகிறோம். இருந்தாலும் அளவோடு சாப்பிட வேண்டும். அப்படி இல்லை என்றால் பக்க விளைவுகள் ஏற்படும்.இரண்டு வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு கேரட் அவ்வளவு பாதுகாப்பானது அல்ல. சிலருக்கு கேரட் உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதனால், தோல் அலர்ஜி, படை வீக்கம், வயிற்றுப் போக்கு இது போன்ற பிரச்சனை வரும் எனவே கேரட்டை சாப்பிடும்போது மேற்கூறிய அறிகுறிகள் இருந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சர்க்கரை நோய், குடல் பிரச்சனைகள், சர்க்கரை அளவு குறைதல், ஹார்மோன் பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனை பெறாமல் கேரட் சாப்பிட்டால் உடலுக்கு அதிகப்படி பாதிப்பு தரும்.