இட்லி என்றவுடன்,சாம்பார் என்று, நம்மை அறியாமல்,நாம் நினைவுக்கு வந்து விடுகிறது. இட்லிக்கு என்னதான் தேங்காய் கலந்த சட்னி, மற்றும் காரச் சட்னி அல்லது வேர்கடலை சட்னி என இருந்தாலும் கூட,சாம்பார் என்று ஒன்று இல்லாமல் இட்லி முழுமை அடையாது.
வட இந்தியாவை பொருத்தவரை, கோதுமை சப்பாத்தி அல்லது மைதா ரொட்டி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ,அதேபோன்று, தென்னிந்தியாவில் இட்லி,சட்னி மற்றும் சாம்பார், மிகவும் முக்கியமான,தவிர்க்க முடியாத ஒரு உணவுப் பொருளாகும். வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷனும் ஏற்றுக்கொண்ட ஆரோக்கியமான உணவு இட்லி என்பது இங்கே குறிப்பிட வேண்டும். ஏனெனில் உளுந்தின் புரோட்டினும், அரிசியின் கார்போஹைட்ரேட்டும், இணைந்து கிடைப்பதால்,இது நோய்வாய்ப்பட்டவர்களுக்கு ஆகச்சிறந்த ஒரு உணவாக இருக்கிறது.
மறுபுறம் சுவை பிரியர்களுக்கு, அதிலும் தென்னிந்தியவாசிகளுக்கு, இட்டலி சாம்பார் என்பதின் மீதான காதல் என்றும் தீராமல் இருக்கிறது.
இத்தகைய இட்லி பிரியர்களுக்கு விதவிதமான சாம்பார் என்பது அவர்களின் பசியையும் ருசியையும் மேலும் தூண்டக்கூடியதாக இருக்கும் இப்படி விதவிதமான சாம்பர்கள் என எடுத்துக் கொண்டால், உடுப்பி சாம்பார் , உருளைக்கிழங்கு சாம்பார், முள்ளங்கி சாம்பார் , முருங்கைக்காய் சாம்பார் மற்றும் காலிஃப்ளவர் சாம்பார் என நிறைய வகைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.
சுவையான உடுப்பி சாம்பார்:
கடாயில் நெய் 1 ஸ்பூன் அளவு ஊற்றி, அதில் கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், மல்லி – 1 ஸ்பூன், வெந்தயம் – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, பூண்டு பல் – 7, மிளகு – 1 ஸ்பூன், வர மிளகாய் – 4, மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன், பெருங்காயம் – 1/4 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் பொன்னிறமாக வறுத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
100 கிராம் வேகவைத்து துவரம் பருப்பை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் பின்பு தேவையான அளவு மஞ்சள் பூசணி மற்றும் முருங்கைக்காயை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பெரிய கடாயை வைத்துவிட்டு, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு – 1 ஸ்பூன், வரமிளகாய் – 4, பெருங்காயம் – 1/4 டீஸ்பூன், கறிவேப்பிலை – 1 கொத்து, தோலுரித்த சின்ன வெங்காயம் – 15 பல், பழுத்த தக்காளி பழம் – 1 பொடியாக நறுக்கியது சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். அடுத்தபடியாக வெட்டி வைத்திருக்கும் காய்களை அதில் போட்டு வதக்கி வேக வைத்திருக்கும் துவரம் பருப்பை அதில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து தேவையான அளவு குப்பை சேர்த்து இறக்கவும் இப்போது சுவை மிகுந்த உடுப்பி சாம்பார் தயார்.
பாசிப்பயறு அல்லது சிறு பருப்பு சாம்பார்:
பாசிப்பருப்பு – ஒரு கப், சின்ன வெங்காயம் – 15, பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 3, பச்சை மிளகாய் – 4, மிளகாய் – 3, மஞ்சள்தூள் அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், எண்ணெய் – 4 ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி தழை – ஒரு கொத்து.
பாசிப்பயிரை நன்றாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். வேறு ஒரு பாத்திரத்தில்,கடுகு அரை ஸ்பூன், சீரகம் அரை ஸ்பூன் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் மிளகாய் சேர்த்து வறுக்க வேண்டும். பிறகு சின்ன வெங்காயத்தை தோலுரித்து, இரண்டாக நறுக்கி,இவற்றுடன் சேர்த்து வதக்க வேண்டும். இதில் பெரிய வெங்காயம் மற்றும் ஏனைய மசாலாக்களை சேர்த்து வதக்கி, இந்த கலவையில் வேகவைத்த, பாசிப்பயிரை சேர்த்து,சிறிது நீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும்.
15 நிமிடங்களுக்கு பிறகு, அனைத்து பொருட்களும் ஒன்றாக கலந்து வெந்து வந்தபின்,கொத்தமல்லி இலைகளை தூவி,இறக்கவும். இப்போது சுவையான,சிறு பருப்பு சாம்பார்,இட்லியுடன் சுவைப்பதற்கு தயாராகிவிட்டது.