உளுந்தங்களியா? நான் என்ன கிராமத்தானா என்று தலை தெறிக்க ஓடும் இளசுகளுக்கு அது உடலுக்குத் தரும் ஊட்டச்சத்து என்னவென்று தெரிந்தால் ஓடோடி வருவர்.


பாரம்பரிய உணவு, சிறு தானியங்கள் இவற்றிற்கு எல்லாம் இப்போது ஓரளவு மவுசு திரும்பிக் கொண்டிருக்கிறது.
இந்தச் சூழலில் இப்படியான உணவுகளை அடையாளப்படுத்துவது அதன் மீதான கவனத்தை ஈர்ப்பது ஆரோக்கிய சமுதாயத்தை உருவாக்குவதில் சிறந்த பங்களிப்பாகவே இருக்கும். 


களி வகையில் உளுந்தம், கேப்பைக் களி, வெந்தயக் களி என மூன்று வகைகள் உண்டு. இவற்றில் உளுந்தங் களியும் வெந்தயக் களியும் பூப்பெய்தும் பருவத்தில் உள்ள பெண் பிள்ளைகளுக்கு உகந்த உணவாகக் கருதப்படுகிறது. பூப்பெய்த பெண்களுக்கு இன்றும் கிராமங்களில் 16 நாட்களுக்கு காலையில் உளுந்தங்களியும் நல்லெண்ணையும் கருப்பட்டியும் கொடுக்கின்றனர். நம் முன்னோர்கள் நியூட்ரிசன் அண்ட் டயட்டிக்ஸ் எல்லாம் படித்திருக்கவில்லை. ஆனால் அவர்களின் அனுபவ அறிவு எந்த வயதிற்கு எந்த உணவு சிறந்தது என்பது வரை அறிந்து வைத்துள்ளது.


கார்ப்போஹைட்ரேட், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் மற்றும் தாது உப்புகள் ஆகியன உளுந்தங்களியில் சமச்சீரான அளவில் காணப்படுகின்றன. இடுப்பு, முதுகுவலியை நீக்குவதோடு, எலும்புகளுக்கு ஆரோக்கியம் தருகிறது உளுந்தங் களி.


உளுந்தங்களிக்குத் தேவையான பொருட்கள்:


உளுத்தம் பருப்பு மாவு (நன்கு அரைத்தது) – 6 கைப்பிடி
கருப்பட்டி – தேவையான அளவு
தேங்காய் – துருவியது
நல்லெண்ணெய் – 4 ஸ்பூன்
அரிசிமாவு – சிறிதளவு
ஏலக்காய் – 4 கிராம்
வறுத்த பாசி பருப்பு – சிறிதளவு




உளுந்தங்களி செய்முறை:


அடி கனமான பாத்திரம் எடுத்து அதில் தண்ணீர் ஊற்றி அரிசிமாவு, நன்கு வறுத்து திரித்த பாசிப்பருப்பு மாவு ஆகியனவற்றைச் சேர்த்து ஒருசேர பிசைந்து கொள்ளவும். பின்னர் அதை கொதிக்க வைத்து அதனுடன் கருப்பட்டி பாகு அல்லது வெல்லப்பாகு சேர்த்து கிளறி, நல்லெண்ணெய் ஊற்றவும்.


இந்தக் கலவையை கட்டிப்பட விடாமல் நன்றாகக் கிளறிக் கொண்டே இருக்கவும். இப்போது உளுந்து மாவை சேர்க்கவும். அதன் பின் ஏலக்காய், தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். களி நன்றாக பந்துபோல் திரண்டு வரும்வரை கிண்டவும். பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி, சற்றே சூடு ஆறியவுடன் இளஞ்சூட்டில் இருக்கும்போது பந்துபோல் உருட்டவும். நடுவில் ஒரு குழி பறித்து எண்ணெய் ஊற்றினால் சாப்பிட கமகம உளுந்தங்களி ரெடி.


அன்றாடம் இட்லி, தோசை, பொங்கல், இல்லாவிட்டால் சப்பாத்தி, பூரி என்ற உணவு வகைகளுக்கு மாற்றாக இப்படியான களி வகைகளையும் வீட்டு உணவில் சேர்த்துப் பழகுங்கள் ஆரோக்கியம் கேரன்ட்டி. லோ கார்ப், லோ க்ளைசிமிக் இண்டக்ஸ் என்றெல்லாம் ரெடிமேடாக கிடைக்கும் உணவுகளை விட இது போன்ற வீட்டில் தயாரிக்கும் களி வகைகள் அத்தனை சுவையானதாகவும் ஆரோக்கியம் தருவதாகவும் இருக்கும்.