பால் பொங்கி ஊற்றாமல் காய்ச்சி எடுக்க 5 டிப்ஸ் இருக்கு. பால் பயன்படுத்தாத வீடுகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆனால் பால் காய்ச்சுவது தான் இந்தக் காலத்து பரபரப்பு பெண்களுக்கு சவாலாகிவிட்டது. காலையில் எழுந்து ஆஃபீஸ் ஃபோன் கால்ஸ், குழந்தைகள், குடும்ப வேலை இடையே சமையலறை என றெக்கை கட்டி பறக்கும் பெண்கள் பால் காய்ச்சுவதில் கோட்டைவிட்டு விடுவது அவ்வப்போது நடக்கும். பாலை வைத்துவிட்டு மறந்துபோய அது பொங்கு ஊற்றி, ஏன் பாத்திரம் தீய்ந்து போன பின்னர் தான் பலருக்கும் நினைவே வருகிறது. சரியென்று மில்க் குக்கர் வாங்கினால், அது ஊரையே சத்தம் போட்டு கூப்பிடுகிறது. தூங்க வைத்த குழந்தை வீல் என்று கத்திக் கொண்டு எழுந்துவிடுகிறது. இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வாக 5 டிப்ஸ் இருக்கு. இதை ட்ரை பண்ணுங்க!


பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றும் முறை


ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்ததும் அந்தப் பாத்திரத்திற்குள் பால் பாத்திரத்தை வைக்கவும். இவ்வாறு செய்வதால் பால் பொங்கி வெளியே ஊற்றாது.


பாத்திரத்தின் விளிம்பில் வெண்ணெய்


பால் பாத்திரத்தின் விளிம்பில் வெண்ணெய்யைச் சுற்றி தடவி விடவும். பின்னர் பால் பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைக்கவும். இதனால் பால் கொதிநிலையை அடைந்துவிட்டாலும் கூட அது வெளியே பொங்கி ஊற்றாமல் தடுக்கப்படும்.




மர ஸ்பூன் போடலாம்..


பால் காய்ச்சும் போது பாத்திரத்தின் நடுவே ஒரு பிடி நீளமான மர ஸ்பூனை உள்ளே போட்டு வைக்கலாம். ஆனால் அந்த மர ஸ்பூன் குழம்பு, ஊறுகாய் போன்றவற்றில் பயன்படுத்தும் ஸ்பூனாக இல்லாமல் இதற்காகவே பிரத்யேகமாக இருக்கும் ஸ்பூனாக இருக்க வேண்டும்.


தூக்கி குலுக்கலாம்..


நம் அம்மா, பாட்டி எல்லோரும் பாலை பொறுமையாகக் காய்ச்சுவதைக் கவனித்திருப்போம். 2 நிமிடங்கள் பால் காய்ச்சும் போது ஸ்டவ் அருகே நின்றால் போதும் பொங்காமல் காய்ச்சி எடுத்துவிடலாம். பால் பொங்கி வரும் போது பாத்திரத்தை கவனமாக தூக்கி அப்படியே ஆப்பச் சட்டியை சுத்துவது போல் பாத்திரத்தை லேசாக சுற்றினால் போதும். பால் பொங்காது.
ஆனால் இதைச் செய்யும் போது கடுகளவேனும் கவனம் சிதறினால் சுடு பால் கையில் சிந்தி கொப்புளம் ஏற்பட்டுவிடும். எனக்கு பொறுமை கம்மி என்பவர்கள் இந்த முறையை கைவிட்டுவிடலாம்.


நுரை மீது தண்ணீர் தெளிக்கலாம்..


பால் பொங்கி வரும் போது நுரை மீது லேசாக சுத்தமான தண்ணீரை தெளித்துவிடலாம். மூன்று முறை பாலை பொங்கவிட்டு இதுபோல் தண்ணீர் தெளித்துதெளித்து இறக்கிவிடலாம்.