மேக்ரோனி பாஸ்தா என்பது இத்தாலிய உணவு என்பது எல்லோருக்குமே தெரியும். அதை வீட்டில் எளிமையாக இந்தியன் ஸ்டைலில் செய்யலாம்.
மேக்ரோனி பாஸ்தா செய்ய தேவையான பொருட்கள்:
மேக்ரோனி 250 கிராம், தக்காளி 3, பெரிய வெங்காயம் 2, துண்டுகளாக நறுக்கப்பட்ட பூண்டு 1 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் 1, இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன் மற்றும் டொமேட்டோ கெட்ச் அப் 100 மில்லி, மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை, மிளகாய் தூள் 3/4 டீஸ்பூன், மல்லி தூள் 1 டேபிள் ஸ்பூன், சில்லி ஃப்ளேக்ஸ் 1/4 டீஸ்பூன், வெண்ணெய் 1 1/2 டேபிள் ஸ்பூன், சீஸ் தேவைக்கேற்ப மற்றும் மல்லி இலை தேவைக்கேற்ப, உப்பு மற்றும் எண்ணெய் தேவையான அளவு.
பாஸ்தாவை வேக வைப்பது எப்படி?
250 கிராம் பாஸ்தாவை கொதிக்கும் நீரில் போட்டு, கூடவே தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு ரீஃபைண்டு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். பாஸ்தாவை 7 நிமிடங்களுக்கு மேல் வேக வைக்கக் கூடாது. அப்படிச் செய்தால் அது பசை போல் ஆகிவிடும். 7 அல்லது அதிகபட்சமாக 8 நிமிடங்களில் பாஸ்தாவை இறக்கி வடிகட்டிக் கொள்ளவும். பின்னர் அதை ஒரு நீள ட்ரேயில் கொட்டி அதன் மீது ஒன்றிரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கிளறி பரப்பிவிடவும். இது பாஸ்தா ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் பார்த்துக் கொள்ளும்.
மசாலா செய்வது எப்படி?
இது இந்தியன் ஸ்டைல் பாஸ்தா என்று சொன்னதால் அதற்கேற்ப நமக்கு நன்றாக பரிச்சியமான முறையில் செய்யப்போகிறோம். முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி. அது சூடானதும் நறுக்கிய வெ.பூண்டு, அதன் பின்னர் வெங்காயம் என சேர்த்துக் கொள்ளவும். ஒரு பச்சை மிளகாய் மட்டும் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறத்தில் வந்தவுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும். அதன் பின்னர் நறுக்கிய தக்காளி சேர்க்க வேண்டும். அதன் பின்னர் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து (தலா ஒரு டீஸ்பூன்) சேர்த்து வதக்கவும்.
இவை வதங்கியவுடன் எண்ணெய் ஊற்றி மசிய விடவும். நல்ல மசியல் பதத்திற்கு வந்தவுடன் டொமேட்டோ கெட்சப் 100 மில்லி சேர்க்கவும். அதன் பின்னர் வேகவைத்த பாஸ்தாவை சேர்க்கவும். கொஞ்சம் கொத்துமல்லி சேர்க்கவும். அத்துடன் கொஞ்சம் வெண்ணெய். கடைசியில் வெண்ணெய் சேர்ப்பதால் உணவின் ருசி மேலோங்கி காணப்படும். இவை எல்லாம் முடிந்தவுடன் கடைசியாக சீஸ் சேர்க்கவும். அடுப்பிலிருந்து இறக்கிய மசாலா பாஸ்தாவில் சீஸ் சேருங்கள். அவ்வளவு தான் இந்தியன் ஸ்டைல் பாஸ்தா தயார்.
நீங்களும் வீட்டில் இதுபோன்று செய்து பாருங்கள். ருசி அள்ளும்.