ரம்ஜான் நோன்பு காலத்தில் சாதி, மதம் கடைந்து அனைவரும் ரசித்து, ருசிக்கும் உணவு நோன்பு கஞ்சி. அந்தக் கஞ்சியை அரேபிய ஸ்டைலில் செய்வது எப்படி எனப் பார்க்கலாம்.


தேவையான பொருட்கள் என்னென்ன?
சிக்கன் பிரெஸ்ட் 200 கிராம். அதுதான் எலும்பில்லாததாக இருக்கும். மட்டன் மசாலா பொடி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், உப்பு. இரண்டு பெரிய வெங்காயம், 3 தக்காளி, 4 பச்சை மிளகாய், தேவையான அளவு புதினா, மல்லி. இவற்றுடன் ஒரு பெரிய டம்ப்ளர் பச்சரிசி. அந்த டம்ளர் அளவிலேயே பாசிப் பருப்பு எடுத்துக் கொள்வோம். 


செய்வது எப்படி?


முதலில் ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அதை நன்றாக கொதிக்க விட்டு அதில் சிக்கன் ப்ரெஸ்ட்டை போட்டு 15 நிமிடங்கள் வேகவைக்கவும். பின்னர் அதை ஆறவிடவும். ஆறிய பின்னர் அதை சிறு சிறு துண்டுகளாக பிய்த்துக் கொள்ளவும்.


இதற்கிடையில் ஒரு 5 லிட்டர் குக்கரில் பாதி அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அரிசி, பருப்பை நன்றாக கழுவி வைத்துக் கொள்ளவும். பின்னர் குக்கரில் அரிசி, பருப்பு, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், புதினா, மல்லி, மசாலா பொருட்கள், வேக வைத்து பிய்த்து எடுத்த கோழி இறைச்சி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பின்னர் குக்கரை மூடி ஆவி வந்ததும் வெயிட்டை வைத்து 5 விசில் வரும் வரை விடவும். குக்கரை ஆஃப் செய்துவிடவும்.


இதற்கிடையில் ஒரு மூடி தேங்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி ஒரு கப் முதல் பால் எடுத்துக் கொள்ளவும்.குக்கரை திறந்து மேஷர் வைத்து கஞ்சியை நன்றாக மசித்து விடவும். பின்னர் தேங்காய் பாலை கஞ்சியில் சேர்த்துக் கொள்ளவும். அடுத்ததாக தாளிதம் தான்.


தாளிப்பதற்கு ஒரு பேன் வைத்து அதில் 3 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி அதில் பட்டை, லவங்கை, கிராம்பு, ஏலக்காய், ரம்பை இலை ஆகியனவற்றை சேர்க்கவும். அத்துடன் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிக் கொண்டே இருக்கவும். இந்த தாளிதம் நன்றாக பச்சை வாசனை போய் வதங்கிய நிலையில் தாளிதத்தை நோன்பு கஞ்சியில் சேர்த்துவிடவும். பின்னர் அதை ஒரு கொதி வரும் வரை பொறுத்து அடுப்பை அனைத்துவிடவும்.




ரம்ஜான் நோன்பு கஞ்சியின் சிறப்பு.. 
ரம்ஜான் நோன்பு கஞ்சியின் சிறப்பு நோன்பு இருப்பவர்களுக்குத் தான் நன்றாக தெரியும் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். பகல் முழுவதும் பட்டினியுடன் இருந்துவிட்டு மாலை வேளையில் நோன்பை துறக்கும் போது தண்ணீராகவும் இல்லாமல், திட உணவாகவும் இல்லாமல் இந்தக் கஞ்சியை சாப்பிடுவது அவ்வளவு இதமாக இருக்கும் எனக் கூறுகின்றனர்.
இந்த நோன்பு கஞ்சியை காய்கறிகள் போட்டும் செய்யலாம், மட்டன் கீமா போட்டும் செய்யலாம். ஆனால், செய்முறை ஒன்று தான்.