சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தினசரி மொத்த வியாரிகள் விற்பனைக்காக காய்கறிகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும். தமிழ்நாட்டிலிருந்து மட்டுமல்லாமல், இந்தியா முழுவதிலும் இருந்து பல ரக காய்கறிகள்  வரும். கோயம்பேடு சந்தையிலிருந்து சிறு மொத்த வியாபாரிகள் தேவையாக காய்கறிகளை வாங்கிச் செல்வார்கள். ஆனால் சில்லறை வியாபாரத்தில் காய்கறிகளின் விலை 20 முதல் 30 ரூபாய் வரை அதிகமாகத்தான் விற்பனை செய்யப்படும்.


உயர்ந்த தக்காளி விலை: 


தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தக்காளி வரத்து வெகுவாக குறைந்துள்ளது. தமிழ்நாட்டிற்கு மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தக்காளி வரும். ஆனால் தற்போது விளைச்சல் குறைந்துள்ளதால் தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இன்று ஒரு கிலோ நாட்டு தக்காளி 100 ரூபாய்க்கும் நவீன் தக்காளி 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சில்லரை வியாபார கடைகளில் தக்காளியின் விலை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.


சில்லரை வியாபார கடைகளில் ஒரு கிலோ தக்காளி 130 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தக்காளி இல்லாமல் சமைப்பது எப்படி என மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.


தக்காளி இல்லாத சமையல்:


நம் இந்திய உணவில் தக்காளி முக்கிய பங்கு வகிக்கிறது. பெரும்பாலான உணவுகளில் தக்காளி பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தற்போது தக்காளி விலை உயர்ந்துள்ளதால் தக்காளி இல்லாமல் பல உணவுகளை சமைத்து அசத்தலாம்.


மோர் ரசம்: தயிர், இஞ்சி, சீரகம், உப்பு நன்றாக அரைத்து தேவைக்கேற்ப நீர் சேர்த்து, 5 நிமிடம் அடுப்பில் வைத்து கொதி வந்த உடன், சீரகம், கடுகு, மிளகாய் சேர்த்து தாளித்தால் மோர் ரசம் தயார்.


ஜீரா ரைஸ்: குக்கரில் நெய், பட்டை, கிராம்பு, சீரகம், உப்பு, பச்சை மிளகாய் போட்டு வதக்கிய பின் அரிசி மற்றும் தேவைக்கேற்ப தண்ணீரை சேர்த்து 2 விசில் வந்தவுடன் ஜீரா ரைஸ் தயார்.


நெய் சோறு: குக்கர் அல்லது கடாயில் நெய் சேர்த்து பட்டை கிராம்பு, வெங்காயம், பச்சை மிளகாய் முந்திரி சேர்த்து வதக்கியதும் அரிசி மற்றும் தண்ணீர் சேர்த்து சமைத்தால் நெய் சோறு தயார்.


வெஜிடெபிள் புலாவ்: குக்கரில் எண்ணெய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், தேவையான காய்கறிகள், கரம் மசாலா ஆகியவற்றுடன் அரிசி தண்ணீர் சேர்த்து சமைத்தால் வெஜ் புலாவ் தயார்.


இதேபோல் தக்காளி இல்லாமல் பல ரெசிபிக்கள் சமைக்கலாம். உதாரணமாக லெமன் சாதம், புளி சாதம், தேங்காய் சாதம், அவியல், காய்கறி பொரியல் வகைகள், மட்டன் சுக்கா, சிக்கன் சுக்கா, தேங்காய் பால் சாதம், சொதி குழம்பு, தக்காளி இல்லாத சாம்பார், உளுத்தம் பருப்பு சாதம், தயிர் உருளை, பாலக் பன்னீர், சிக்கன் மோலி, மீன் மோலி, மோர் குழம்பு, காய்கறி கூட்டு வகைகள், தக்காளி இல்லாமல் தேங்காய் பால் பயன்படுத்தி செய்யப்படும் மீன் குழம்பு, புளிசேரி என பல ரெசிப்பிகள் உள்ளது. இதை எல்லாம் தக்காளி விலை குறையும் வரை விதவிதமாக செய்து அசத்தலாம்.