தங்க நிறத்தின் மொறுமொறுப்பான ப்ரோக்கோலி பக்கோடா செய்து சாப்பிட ஆசையா? இதோ உங்களுக்காக ஈஸி ரெஸிப்பி. இது சைவ உணவுப் பழக்கம் கொண்டவர்களுக்கும், குழந்தைகளுக்கும் நல்லதொரு சிற்றுண்டியாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் ப்ரோக்கோலியை வேறு எந்த வகையிலும் உணவில் சேர்த்துக் கொள்ளப் பிடிக்காதவர்களும் கூட இந்த முறையில் செய்யும்போது எளிதில் சாப்பிடுவார்கள்.


தேவையான பொருட்கள்:


ப்ரோக்கோலி 1


வெங்காயம் 1 பெரியது


பூண்டு 2 முதல் 3 பற்கள்


பிரெட் க்ரம்ப்ஸ் ஒன்று முதல் 2 டேபிள்ஸ்பூன்


பாதாம் பவுடர் 2 டேபிள்ஸ்பூன்


சீஸ் 2 டேபிள்ஸ்பூன்


முட்டை 1


உப்பு தேவையான அளவு


ஆரிகானோ அரை டீஸ்பூன்


பெப்பர் பவுடர் அரை டீஸ்பூன்


ஆலிவ் ஆயில் வறுத்தெடுப்பதற்கு


செய்முறை:


முதலில் ப்ரோக்கோலியை சில நிமிடங்கள் வெந்நீரில் வேகவைத்துக் கொள்ளவும். அது மிருதுவானவுடன் ஒரு சாப்பிங் போர்டில் வைத்து அவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர் அதில் கொஞ்சம் நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்க்கவும். அதன் பின்னர் ப்ரெட் க்ரம்ப்ஸ் தயார் செய்து கொள்ளவும்.


இப்போது நறுக்கிய ப்ரோக்கோலி, பூண்டு, வெங்காயத்தை நன்றாக அரைத்துக் கொள்ளவும். தண்ணீர் ஊற்றாமல் அரைக்கவும். பின்னர் இத்துடன் முட்டை, ப்ரெட் க்ரம்ப்ஸும் சேர்த்து அரைக்கவும். மாவு பதம் வந்துவிடும். இப்போது பேனில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி அந்தக் கலவையை கட்லெட்டுக்கு செய்வதுபோல் மாவை தட்டையாக உள்ளங்கையில் வைத்து தட்டிக் கொண்டு பேனில் எண்ணெய் சூடானவுடன் போட்டு பொன்னிறத்தில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.


இன்ஸ்டாகிராம் செய்முறை வீடியோ:






 ப்ரோக்கோலி நன்மைகள்:


ப்ரோக்கோலியில் சல்போரபேன் எனப்படும் வேதிப்பொருள் அதிகம் உள்ளது. இது புற்று நோய்களின் செல்களின் அடிப்படை வளர்ச்சியை இயற்கையாகவே அழிக்கும் சக்தியை பெற்றுள்ளது. மேலும் இதில் உள்ள இத்தோல் -3 கார்பினோல் மற்றும் கெம்ப்ஃபெரோல் புற்றுநோயால் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. குடல், ஈரல் சிறுநீர்ப்பை, மார்பகம் மற்றும் நுரையீரல்களில் ஏற்படும் புற்றுநோய்களை குணப்படுத்தும் சக்தியை ப்ரோக்கோலி கொண்டிருக்கிறது. 


மேலும், ப்ரோக்கோலியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது மற்றும் கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும் குர்செடின் போன்ற ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராகவும், கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது. இதனால் நீரழிவு நோயாளிகள் தாராளமாக ப்ரோக்கோலி சாப்பிடலாம். 


யார் தவிர்க்க வேண்டும்?


பாலூட்டும் தாய்மார்கள் முந்தைய நாள் உணவுக்கு ப்ரோக்கோலி சாப்பிட்டால் அடுத்த நாள் குழந்தைக்கு வாயு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. வெங்காயம், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் மற்றும் வெள்ளரி போன்ற பிற வாயு சேர்ந்த உணவுகள் தாய்ப்பால் கொடுக்கும் போது தவிர்க்க வேண்டும். குறிப்பாக முதல் ஆறு வாரங்கள் வரை சுத்தமாக எடுத்துக்கொள்ள வேண்டாம், பிறகு அவர்களும் தங்கள் உணவில் ப்ரோக்கோலியை படிப்படியாக சேர்துக் கொள்ளலாம்.