பட்டுக்கு மட்டுமில்லை இட்லிக்கும் காஞ்சிபுரம் ரெம்ப பேமஸ்தான். இங்கு கோவில் விற்பனையாகும் இட்லியில் மிளகு, சுக்கு, சீரகம் போன்றவை சேர்க்கப்படுவதால் சுவையோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் உங்களுக்கு வழங்குகிறது.
தமிழகத்தில் கோவில்கள் நிறைந்துள்ள ஒரு இடமாகவும், புனித தலமாகவும் விளங்கிவருகிறது காஞ்சிபுரம். இங்குள்ள புகழ்பெற்ற காமாட்சியம்மனையும் அங்குள்ள சிற்பங்களையும் காண்பதற்கே இந்தியா மட்டுமில்லை உலக நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இப்படி புனித தலமாக விளங்கும் இந்த காஞ்சியில் மற்றொரு சிறப்பு அனைவருக்கும் தெரிந்த பட்டுசோலை தான். கல்யாணம் மற்றும் வீட்டில் சுப தினங்கள் என்றால் காஞ்சி பட்டு சேலைகளுக்கு மவுசு அதிகம் தான். இப்படி பல்வேறு பெருமைகளை தன்னகத்தே கொண்டுள்ள காஞ்சிக்கே உள்ள மற்றொரு சிறப்பு தான் அம்மனுக்கு படைக்கப்படும் கோவில் இட்லி. பழமையும், சுவையும் மிகுந்த இந்த கோவில் இட்லி உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை நமக்கு வழங்குகிறது. குறிப்பாக 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை காஞ்சியில் எழுந்தருளும் அத்திவரதருக்கும், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு தினசரி நைவேந்தியமாக இந்த கோவில் இட்லி படைக்கப்படுகிறது.
இதனாலே மக்கள் அதிகமாக இதனை விரும்பிச்சாப்பிடுவார்கள்.ஆனால் இந்த இட்லி அனைத்து இடங்களிலும் கிடைக்காது. மேலும் இதனை செய்வதற்கு கொஞ்சம் வேலைப்பளு அதிகம் என்பதால் அனைவரும் செய்யமாட்டார்கள். இருந்தப்போதும் காஞ்சியில் உள்ள பிரபலமான உணவகங்களில் மட்டுமே கிடைக்கும் எனக்கூறப்படுகிறது. எனவே இந்நேரத்தில் காஞ்சிபுரம் கோவில் இட்லியை வீட்டிலேயே எப்படி செய்யலாம் என இங்கே தெரிந்துக்கொள்வோம்.
காஞ்சிபுரம் கோவில் இட்லி செய்முறை :
தேவையானப் பொருட்கள்:
பச்சரிசி – 2 கிலோ
உளுந்தப்பருப்பு – 2 கிலோ
வெந்தயம் – 2கிலோ
மிளகு – 50 கிராம்
சீரகம் – 50 கிராம்
சுக்கு – 50 கிராம்
பெருங்காயத்தூள்- 20 கிராம்
நெய்
உப்பு தேவையான அளவு.
காஞ்சிபுரம் இட்லி செய்வதற்கு முதலில், பச்சரிசி, உளுந்தம்பருப்பு மற்றும் வெந்தயம் மூன்றையும் தண்ணீரில் ஊற்றி சுமார் 2 மணி நேரம் ஊற வேண்டும்.
பின்னர் ஊறவைத்த மாவை அரைக்கும் போது மென்மையாக இல்லாமல் ரவை மாதிரி இருக்கும் அளவிற்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதனையடுத்து காஞ்சிபுர ஸ்பெசல் இட்லி செய்வதற்காக மிளகு, சீரகம், சுக்கு, பெருங்காயத்தூள், நெய், கருவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பைச்சேர்த்து அரைத்து எடுத்து வைத்துள்ள மாவுடன் கரைத்துக்கொள்ள வேண்டும்.
இதன்பிறகு புட்டு அவிக்கின்ற குழாய் போன்று மூக்கில் குழாயில் மாவை ஊற்றிக்கொள்ள வேண்டும்.
பின்னர் இட்லி சட்டியில் தண்ணீர் நன்றாக கொதித்ததும், மூக்கில் குழாயில் ஊற்றி வைத்துள்ள மாவை அதனுள் வைத்து சுமார் 2 மணி நேரத்திற்கு வேகவைக்க வேண்டும்.
பின்னர் நன்றாக வெந்ததும், இட்லி சட்டியில் உள்ளதை வெளியில் எடுத்து தேவையான அளவிற்கு ஏற்ப வெட்டி எடுத்து வைத்துக்கொள்ளலாம்.
இப்போது நல்ல சுவையான மற்றும் நோய் எதிர்ப்பு சக்திகொண்ட காஞ்சிபுரம் கோவில் இட்லி ரெடியாகிவிட்டது. இந்த கோவில் இட்லிக்கு தேங்காய் சட்னி, புதினா சட்னி, நல்லெண்ணெய் கலந்த இட்லி பொடி சேர்த்து சாப்பிடும்போது கூடுதல் சுவை கிடைக்கும். வெட்டாமல் இந்த இட்லியை வைத்திருந்தால், ஒரு இட்லியை 4 பேர் வரை சாப்பிடலாம்.
குறிப்பாக இந்த காஞ்சி கோவில் இட்லி, சாதாரண இட்லிகளைப்போல் இல்லாமல் 2 நாள்கள் வரையிலும் கெட்டுப்போகாமல் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும் இந்த இட்லியை டம்ளரிலும் செய்வதால், இந்த இட்லி டம்ளர் இட்லி என்றும் குடலை இட்லி என்றும் கூறப்படுகிறது. இதோடு இந்த இட்லியைப்பார்ப்பதற்கு கோவில் போன்று இருப்பதால் கோவில் இட்லி என்றும் அழைக்கப்படுகிறது.